பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான் குழந்தையைத் தூக்கினான் புருசன்காரன்.

0 735

தோளுக்கு மேலே வளர்ந்த பையன்
குடித்து விட்டு வந்து வாந்தியெடுத்த போது..
வளர்ப்புச் சரியில்லையென்று சொல்லி
தன் மனைவியை ஓங்கி அறைந்தான்
அப்பனொருத்தன்.

அலுவலகத்தில் முதலாளி திட்டியதற்காக
இரவு சாப்பிடும் போது
சோத்துப் பிளேட்டை எடுத்து
பொண்டாட்டி முகத்தில் வீசினான்

இன்னொருத்தன்.

பஸ் ஸ்டான்டில் கண்ட காட்சி.
புருசனும் பொஞ்சாதியும்
சீரியஸாக என்னமோ
பேசிக் கொண்டிருந்த போது
கைக் குழந்தை தவழ்ந்து
ரோட்டுக்குப் போய் விட…
பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான்
குழந்தையைத் தூக்கினான்
புருசன்காரன்.

தங்கச்சியைக் காதலிப்பதாக
நண்பன் சொல்ல
அவனை அங்கேயே விட்டுவிட்டு
வீட்டுக்கு வந்து தங்கையை அடித்தான்
அண்ணொருத்தன்!!.

எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம்
கதவுகள் போல….
ஆத்திரம் வந்தால் அறைந்து விட்டுப் போகலாம்.
சுவர்கள் போல…
கோபம் வரும் போது
முஸ்டியை மடக்கிக் குத்தலாம்.
நாய்க் குட்டி போல…
மூடு வந்தால் தூக்கிக் கொஞ்சலாம்.
மற்ற நேரங்களில் எட்டி உதைக்கலாம்.

அடித்தால் திருப்பியடிக்காத
எல்லாப் பொருட்களும்
ஜடங்கள் எனப்படும்.
சில பெண்களும் அப்படித்தான்..!!!.

– ஆக்கம்: ரூபன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.