அழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..!

0 509

சாலைகளில் நடக்கும் போது
காணும் காட்சிகளில்
சுவாரசியமேதும் இல்லை.
சிட்டுக் குருவிகள் எல்லாம்
எப்போதோ செத்தொழிந்து விட்டன.
மஞ்சள் மூக்கு மைனாக்களைப் பார்த்து
ரொம்ப நாளாகி விட்டது.

குறுக்கு வீதிகளைக் கடக்கும் போது
குறுக்காய் பூனைகள் ஓடுவதில்லை.
காகங்கள் கூட சோறு கேட்டு அழுவதில்லை.
பல்லிளித்து முறைக்கும் தெருநாய்களையெல்லாம்
எப்பவோ கொன்று புதைத்து விட்டார்கள்.
தின்னுவதற்கு மாடுகள் இல்லாமல்
ஏங்கிக் கிடக்கின்றன சுவரொட்டிகள்.

வீதி முழுக்க மனிதத் தலைகள்.
எங்கே பார்த்தாலும் மனிதர்கள்.
கண்டும் காணாதது போல கடந்து போகின்றன
இறுகிப் போன இரும்பு முகங்கள்.

சின்னதாய் ஒரு சிரிப்பு இல்லை.
“நன்றாக… இருக்கிறாயா….???…”…. என்று
நலம் கேட்பதில்லை.
கடந்து போகும் கண நேரத்தில்
கண்களால் ஒரு முத்தம் கூட இல்லை.
ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு
உள்ளுக்குள்ளே…
வன்மங்களைப் புதைத்துக் கொண்டு
எதிரே வருபவனை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல்
துப்பி விட்டு நகர்கின்றன மனித முகங்கள்.
தண்ணீரில் மிதக்கும்
அழுகிய பிணங்கள் போல
வீங்கி வழிகின்றன நகரத்து வீதிகள்.

பிடித்தால் பகிருங்கள்

ஆக்கம் :ரூபன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.