வயதாக வயதாக… அழகாகின்றன…தண்டு பெருத்து… கிளை விரித்து… காற்றில் நடனமாடுகின்றன.

0 280

அந்த முதியோர் இல்லத்திற்கு…
அவர் புதியவர்.
விபரங்கள் கேட்டறியப்பட்டு…
விசாரணைகளெல்லாம் முடிந்த பிறகு…
அவரை… அங்கே தங்க அனுமதித்திருந்தார்கள்.
தனியாக ஒரு கட்டில்.
தலைமாட்டில்… உடுப்பு வைக்க அலுமாரி.
இல்லத்தைச் சுற்றிலும்…
குளிர்ச்சியான வேப்ப மரங்கள்.
ஒரு… குட்டிப் பிள்ளையார் கோயில்.
உக்காந்து படிக்க நூலகம்.
எங்கெங்கெல்லாமோ பயணித்து…
எதைஎதையெல்லாமோ யாசித்து…
தனது அந்திம காலத்தில் வாழும் வயோதிகனுக்கு…
இதை விட… வேறென்ன வேண்டும்…??…
தான் கொண்டு வந்திருந்த…
சிறிய சூட்கேஸைத் திறந்து…
ஆடை மாற்றிக் கொண்டார்.
தனது சொற்ப வேஸ்டி சட்டைகளையும்…
சில புத்தகங்களையும்….
மற்றும் சில புகைப்பட ஆல்பங்களையும்…
அலுமாரியில் அடுக்கி வைத்தார்.
உடமைகளையெல்லாம் அடுக்கி வைத்தாயிற்று…
அனுமார் வால் போல நீளும்…
எழுபது வருச கால… நீண்ட நெடிய அனுபவத்தை…
எங்கே அடுக்கி வைப்பது…???….
எத்தனையெத்தனை… அனுபவங்கள்.!!.
பத்து வயசில் அப்பா தவறியது.
சின்ன வயசிலேயே… தலையில் அமர்ந்து கொண்ட…
குடும்ப பாரம்.
கூடப் பிறந்த உறவுகள்.
அன்பு மனைவி.
வருசத்துக்கொன்றாய்… பெத்துப் போட்ட…
பிள்ளைகள்.
அவர்களது…. படிப்பு.
அதற்காக அடிமாடாய் உழைத்த… வெளியூர் வேலை.
பேரக் குழந்தைகள்.
நடுநிசியொன்றில்… அவர் மடியில் நிகழ்ந்த…
மனைவியின் மரணம்.
உடம்பு வலுவிழந்து.. மூலைக்குள் முடங்கிய போது…
கொதிக்கக் கொதிக்க முகத்தில் வீசப்பட்ட…
மருமகள்களின் குத்தல்கள்.
இன்னும்… எத்தனையோ எத்தனையோ…
புறக்கணிப்புகள்… அவமானங்கள்.
அவருக்கு நிம்மதியாகத் தூங்க…
ஒரு கட்டில் வேண்டும்.
அதற்காகத் தான்… இங்கே வந்திருந்தார்.
இனி மேல்… இது தான் இவரது வீடு…!!!.
இங்கே சுகந்திரமாக இருக்கலாம்.
நிறையப் புத்தகங்கள் படிக்கலாம்.
பிடித்த பாடல்கலைக் கேட்கலாம்.
தனது வயதையொத்த நண்பர்களோடு…
அரட்டையடிக்கலாம்.
இங்கே எதற்கெடுத்தாலும்…
பயந்து நடுங்க வேண்டியதில்லை.
முள் மேல் அமர்ந்து கொண்டு…
உணவருந்தும்… கொடுமையில்லை.
அதோ… அந்த வேப்பமரம் போலத் தான்…
இந்த முதியவனும்.
வேப்பமரங்கள்… வயதாக வயதாக…
அழகாகின்றன.
தண்டு பெருத்து… கிளை விரித்து…
காற்றில் நடனமாடுகின்றன.
இந்த வயதான மானஸ்தனுக்கு…
இங்கே… இன்னொரு வாழ்க்கை காத்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.