துணிப்பைக்கு 0% வரியாக மட்டுமே இருந்தது. ஜிஎஸ்டி-க்குப் பின் எத்தனை சதவீதம் தெரியுமா..?

0 633

வருங்காலம் வாழ வாங்குவோம் துணிப்பை

பட்டப்படிப்பு முடித்த கிருஷ்ணன் சுப்பிரமணியம் & கெளரி தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்போது தங்களைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதுகுறித்து விவாதித்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக முதன் முறையாக மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 100 துணிப் பைகளை நண்பர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர். அதற்கு வரவேற்பு கிடைக்க தொடர் நிகழ்ச்சிகளில் துணிப் பை பரிசளிக்க, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருவரும் பார்த்த பணியை விடுத்து மதுரையில் இதனை முதல் தொழிலாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகிலுள்ள மதிச்சியம் பகுதியில் “தி எல்லோ பேக்” (The Yellow Bag) என்ற பெயரில் பல்வேறு விதமான துணிப்பைகளைத் தாங்களே சொந்தமாகத் தைத்து, தமிழகமெங்கும் விற்பனை செய்து வருகின்றனர். துணிப் பை தயாரிப்பில் திருப்பூருக்கு நிகரானது மதுரை என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் இருவரும்….

பருத்தி:
துணிப் பை என்றாலே அது பருத்தியின் முதல் ரகத்தில் செய்யப்படுவதாகும். நாங்கள் காடா துணியாக வாங்கி அதை தேவைக்கு ஏற்ப வடிவத்தில் கட்டிங் செய்து துணிப் பைகள் தயார் செய்கின்றோம்.பண மதிப்பை பொறுத்து துணியின் தடிமன், அடர்த்தி ஆகியவை மாறுபடும். தற்போது நாங்கள் ஆறு ரகங்களில் பருத்தி துணிகளை பயன்படுத்துகின்றோம். ரூ.10 லிருந்து ரூ.100 வரையிலான துணிப்பைகள் தயாரித்துக் கொடுக்கின்றோம்.

மாடல்கள்:
துணிப் பையில் அதிக மாடல்கள் தயாரிக்க முடியும். நாங்கள் கிளாசிக் ( மஞ்சப் பை), தோள் பை, சுருக்குப் பை, முதுகில் மாட்டிச் செல்லும் பை, ஜோல்னா பை, காய்கறிப் பை (கட்டைப்பை) ஆகியவை செய்து கொடுக்கின்றோம். இது அத்தனையும் பல்வேறு அளவுகளில் தேவைக்கு ஏற்ப தைத்துக் கொடுக்கின்றோம்.

ஸ்கிரீன் பிரிண்டிங்:
துணிப் பையில் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் நிறுவனத்தின் லோகோ, மணமக்கள் புகைப்படம், இதர டிசைன்கள் ஆகியவை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்கிள் & மல்டி கலரில் பிரிண்ட் செய்து கொடுக்கின்றோம்.

தையல்:
எங்களுடைய யூனிட்டில் சுமார் 18 பெண் தொழிலாளர்களும், வெளியில் 30 பெண்களும் தையல் பணியில் உள்ளனர். கூடுதலாக ஆர்டர் வரும் பட்சத்தில் 100 பெண்கள் வரை தைத்து கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் ஆட்கள் உள்ளனர்.

விலை:
பாலித்தீனைக் காட்டிலும் பருத்தியின் விலை அதிகம். குறைந்த பட்சம் தாம்புலப் பை ரூ.10 முதல் ரூ.20 வரை (பிரிண்டுடன்), சிறிய சுருக்குப்பை ரூ.15 முதல் ரூ.25 வரையும், கட்டப்பை (காய்கறிப்பை) ரூ.30 முதல் ரூ.60 வரையும், தோளில் சுமந்து செல்லும் பை ரூ.30 லிருந்து ரூ.70 வரை ஆகும். மொத்தமாகஆர்டர் கொடுப்பவர்களுக்கு விலை மாற்றமிருக்கும்.

தொழில்:
தைத்து மட்டுமே கொடுப்பவர்களுக்கு கட்டிங் செய்து கொடுக்கின்றோம். தொழிலாக செய்ய விரும்புபவர்கள் ஆர்டர் வாங்க முடியும் என்றால் தாராளமாக துவங்கலாம். பெண்கள் குழுவாக இணைந்தும் இதைத் துவங்கலாம். ஒன்றை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் துணிப் பைகளை சந்தையில் விற்கும் திறன் வேண்டும். இல்லையயனில் முதலுக்கே மோசமாகிவிடும். குறைந்த பட்சம் இத்தொழிலை துவங்க ரூ.4 லட்சம் வரை தேவைப்படும்.

இன்றைய தேவை:
துணிப் பை தயாரிப்பில் மதுரை முக்கிய மையமாகும். இங்கிருந்து தயார் செய்யப்படும் பைகள் பல்வேறு இடங்களுக்குச் இன்றும் செல்கின்றன. மதுரையின் பழமையான தொழிலுக்கு நல்ல வரவேற்புள்ளது. ஜவுளிக் கடைகளில் இந்த மாற்றம் வரவில்லை. ஜனவரிக்குப் பிறகு ஜவுளிக் கடைகளிலும் துணிப் பைகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் துணிப்பை தொழில் ஜொலிக்கும்.

ஜிஎஸ்டி:
துணிப்பைக்கு 0% வரியாக மட்டுமே இருந்தது. ஜிஎஸ்டி-க்குப் பின் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விளங்கும் துணிப்பைகள் தயாரிப்புக்கு 0% வரி விதிக்குமேயேனால் இன்னும் இத்தொழில் வலுப்பெறும் என்று இருவரும் நம்மிடமிருந்து விடைபெற்றனர்.

தொடர்புக்கு:9884952604, 733925 2770
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை
மாதம்: ஆகஸ்ட்
எழுத்து: பிரபு சந்திரன்

பகிருங்கள் உங்களாலும் பிளாஸ்டிக் குறைய ஆரம்பிக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.