26 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ள இடுக்கி அணையின் 10 சிறப்புகள்

0 410

1992ம் ஆண்டுக்கு பின்னர் முழு கொள்ளளவையும் இடுக்கி அணை எட்டியிருப்பதால், 26 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை திறப்பதற்கும், தண்ணீர் வெளியேறும்போது மக்களின் பாதுகாப்புக்கு போதிய ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு முப்படைகளின் உதவியையும் கேரள அரசு நாடியுள்ளது.

இடுக்கி அணையின் 10 சிறப்பு அம்சங்கள்
படத்தின் காப்புரிமை idukki.gov.in

01. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் செறுதோனி அருகே பெரியார் ஆற்றின் குறுக்கே குறவன் மலை (839 அடி உயரம்), குறத்தி மலை (925 அடி உயரம்) ஆகியவற்றின் குறுக்கே இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

02. ஆசியாவில் அரைவட்ட (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட மிக உயர்வான அணைகளில் இடுக்கி அணையும் ஒன்றாகும்.

03. கடல் மட்டத்திலிருந்து இந்த அணையின் நீர்மட்டம் 2,400 அடி என கணக்கிடப்பட்டாலும், இடுக்கி அணையின் மொத்த உயரம் 555 அடியாகும்.

04. 1969ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இதன் கட்டுமானப்பணி தொடங்கியது. 1973ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணையில் தண்ணீர் சேமிப்பது ஆரம்பித்தது. இந்த அணையின் உபரி நீர் வெளியேறும் மதகுகளை கொண்ட அணையாக செறுதோனி அணை உள்ளது.

05. 1981ம் ஆண்டு முதல் முறையாக இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டது. 2ம் முறையாக 1992ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியதோடு, தற்போது 3ம் முறையாக அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

06. இந்த அணையின் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யும் முதல் எந்திரம் 1975ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி சோதனை ஓட்டத்தை தொடங்கியது.

07. இடுக்கி அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் வணிக ரீதியான செயல்பாட்டை 1976 பிப்ரவரி 12ம் தேதி அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார். இந்த பணித்திட்டத்திற்கு கனடா நிதி ஆதரவு வழங்கியது.

08. இடுக்கி அணை, மேல்மட்டத்தில் 365.85 மீட்டர் நீளமுடையது. கீழ்மட்டத்தில் 19.81 மீட்டரும், மேல்மட்டத்தில் 7.64 மீட்டர் அகலமும் கொண்டது. இதனை கட்டுவதற்கு 4லட்சத்து 64 ஆயிரம் கனமீட்டர் காங்கிரீட் பயன்படுத்தப்பட்டது.

09. 43 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மூலமட்டம் என்ற இடத்தில் இருக்கும் இடுக்கி அணையின் மின் உற்பத்தி நிலையம் 780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இந்த அணை உள்ளது.

10. கேரளா மாநிலத்தின் ஓணம் பண்டிகை மற்றும் கிறிஸ்து பிறப்பு விழா காலங்களில் மட்டும் இடுக்கி அணை சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.