ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை – ஆதாரத்தை வெளியிட்டார் முகிலன்

0 505

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சூழலியல் போராளி முகிலன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முகிலன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்.
EMAIL:[email protected]
அலைபேசி: 9385804483

பத்திரிக்கையாளர்களுக்கு வணக்கம்

தூத்துக்குடியில் இயங்கி தற்போது தமிழக அரசின் அரசாணை மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஸ்டொ்லைட் நிறுவனம் எக்காலத்திலும் இயங்குவதற்கு தகுதியற்றது என்பதற்கான மிக முக்கிய ஆவணங்களை இன்று உங்கள் முன் வெளியிடுகிறோம்.

ஸ்டெர்லைட் தாமிர ஆலை துப்பாக்கி சூடு நிகழ்வில் உலகம் இதுவரை அறிந்திராத உண்மைகளை தற்போது உங்கள் முன் வெளியிடுகிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்கள் 22.05.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதனால்தான் 14பேர் இறந்தனர் என்பதுதான் அரசு தரப்பில் கூறப்பட்டு வரும் செய்தியாகும். அரசு கூறியதை வைத்துதான் பலரும், திரையுலக பிரபலங்களும் கூட “மக்கள் செய்தது தவறு, காவல்துறை வேறு வழியின்றி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது எனவும், மக்கள் கூட வேறு வழியின்றி எதிர்வினையாக கலவரத்தில் ஈடுபடுவது இயல்புதானே என்றும் கூறி வருவதை அனைவரும் அறிவோம். ஆனால் மே-22 இல் நடந்த உண்மை சம்பவம் வேறானது என்பதை உங்கள் முன் ஆதாரத்தோடு வெளியிடுகிறோம்.

முதலில் காவல்துறை போராடிய மக்கள் மீது எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்புதான் தீ வைப்பு சம்பவம் காவல்துறை பாதுகாப்போடு நடந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக முன் வைக்கிறோம்.

மே-22 அன்று பேரணியாக வந்த மக்கள் காலை 11.50மணிக்குதான் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைகின்றனர். காலை 11.55மணிக்கு தூத்துக்குடி மமாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக வந்து சேருகின்றனர்.

மக்கள் மீது எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் சரியாக காலை 11.56 மணிக்கு காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.

மக்கள் அச்சமடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் கிழக்குப்பற சாலை வழியாக ஓடி வந்து தென்புறமாக ஓடி தூத்துக்குடி-நெல்லை 4வழி நெடுஞ்சாலையை அடைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நிற்கின்னர். அப்போது நேரம் பகல் 11.59 மணி.

ஆனால் மக்கள் கூட்டத்தில் இருந்த சிலர் மட்டும் தென்புறமாக செல்லாமல் வடக்குபுறமாக ஓடி ஒரு மாற்றுதிறனாளிகள் படிப்பகம் அருகே நின்று கொள்கின்றனர்.

மக்கள் 4 வழி சாலையில் காவல்துறையால் தடுத்து நின்று கொண்டு இருக்கும் போதே சரியாக மதியம் 12.01 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேற்கு புறத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த காவல்துறை கண்ட்ரோல் ரூமில் இருந்து நெல்லை சரக டி.அய்.ஜி தனது காரில் டெம்போ டிராவலர் வாகன பாதுகாப்போடு வெளியேறுகின்றார்.

இந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்ற கந்தையா அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புற பகுதியில் கிழக்கு புறமாக இருக்கும் இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளார். அவரை காட்சி ஊடகங்கள் படமெடுக்கின்றன. காவல்துறை போட்டோகிராபரும் அவர் அருகே இளஞ்சிவப்பு நிற ஸ்கூட்டியை நிறுத்தி வைத்து விட்டு படம் எடுக்கின்றார். கந்தையா அருகே சந்தோஷ் என்ற இளைஞரும் காவல்துறை தாக்குதலால் கடுமையாக காயமுற்று அமர்ந்து இருக்கின்றார். அவர் செய்தியாளர்களிடம் தான் இறந்தால் காவல்துறையே முழு பொறுப்பு என கூறுகிறார். இந்த சம்பவத்தின் போது, அங்கு இருந்த எந்த வாகனமும் தீக்கறையாக்கப்படவில்லை என்பது காட்சி ஊடகம் பதிவுகள் மூலம் நாம் அறிய முடிகிறது.

பகல் 12.02 க்கு போலீஸ் போட்டோகிராபர் தனது இளஞ்சிவப்பு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு மாவட்ட. ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து தெற்கே சென்று மேற்குபுறமாக செல்லும் போதும் அங்கு எங்கும் தீவைப்பு நிகழ்வுகள் நடைபெற்று இருக்கவில்லை.

பகல் 12.04 மணிக்கு மாவட்ட. ஆட்சியர் அலுவலக தெற்கு பகுதியில் வெள்ளை சட்டை-கருப்பு பேண்ட் போட்ட அரசு அதிகாரிகள் யாருக்காவோ காத்துக் கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் கிழக்குபுற சாலையை பார்த்து விட்டு வேகமாக. ஓடி வருகிறார். உடனே அங்கிருந்த சீருடை அணிந்த-சீருடை அணியாத காவல்துறையினரும் வேகமாக ஓடிவந்து சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புறத்தில் மேற்காக உள்ள போலிஸ் கன்டரோல் ரூமுக்கும் மற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டடத்திற்குள்ளும் ஓடிவந்துவிடுகின்றனர்.

சரியாக 12.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப்புறத்திலிருந்து சுமார் 40 பேர் சைக்கிள் ஸ்டாண்டுக்கு தீவைத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை தரையில் தள்ளிவிட்டு தீவைத்தனர். இதை காவல்துறையினர் யாரும் தடுத்து விரட்டவும் இல்லை, துப்பாக்கியால் சுடவும் இல்லை, கண்ணீர் புகைக்குண்டு எறிந்து கலைக்கவும் இல்லை.

அதேபோல், தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் நான்குவழிச்சாலயிலிருந்து வரவில்லை. இந்த துப்பாக்கிச்சூடும், தீவைப்பு சம்பவமும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கூட்டுச்சதியாகும்.
ஈழப்படுகொலைபோல் ஸ்டெர்லைட் நிர்வாகமும், அரசும் சேர்ந்து நடத்திய படுகொலையாகும்.

சுற்றுச்சூழல் சட்டங்களையும், விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்கள் மூலம் தீவைப்பு சம்பவத்தை நடத்தி குற்றநிறுவனமாக மாறியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும், உலகத்திலும் எங்கும் இயங்க தகுதியில்லாத, சட்டவிரோத கிரிமினல் நிறுவனமாக மாறியுள்ளது. உடனடியாக இந்த படுகொலைக்கு காரணமாக உள்ள வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டும்.

இந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் நிறுவனம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.