ஸ்டெர்லைட் போரட்டம் என்ன ஆனது..? மக்களின் மறுபக்கம்..!

0 203

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நச்சுப்புகையை வெளியிடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஒரு தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டமும், அதே நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டாம் என  இன்னொரு தரப்பினரும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட குமரெட்டியாபுரம் ஊர்மக்களிடம் பேசினோம், “தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நாசாக்கார ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. பகலைவிட இரவில் அதிகளவில் புகை வெளிவிடப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மண் நிறம் மாறி மலடாகிறது. இந்த தண்ணீரைக் குடித்த ஆடு, மாடுகளும் பல நோய்களுக்கு உள்ளாகி இறந்துள்ளன. தமிழகத்தில் வாழத்தகுதியற்ற நகரமாக தூத்துக்குடி மாறி உள்ளது என ஒரு சுற்றுச்சூழல் ஆய்வு கூறுகிறது. இதனால் அதிகப்  புற்றுநோயாளிகள் உருவாகி வரும் நகராகவும் தூத்துக்குடி மாறிவிட்டது.

இந்நிலையில், சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது இரண்டாவது ஆலையை நிறுவ உள்ளது இந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலை. புதிதாக நிறுவ உள்ள இந்த ஆலை, ஏற்கெனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது. இதனால் பாதிப்புகளும் பெருகும்.  மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சிப்காட் விரிவாக்கப் பகுதியில்  2-வது ஆலையை நிறுவ அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலையையும் மூடிட வேண்டும்.” என்றனர்.  

ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சமூக அமைப்புகளிடம் பேசினோம். “ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்வி, விளையாட்டு  விவசாயம், மகளிர் மேம்பாடு, வாழ்வாதாரம் ஆகிய சமுதாயப் பொறுப்பு உணர்வுத் திட்டங்களை ச் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் இலவசத் தொழிற்பயிற்சியால் பல  பெண்கள் சுயதொழில் துவக்கி நடத்தி வருகிறார்கள். இந்த ஆலையின் 2-வது விரிவாக்கத்தால் இன்னும் பல சமுதாயத் திட்டங்கள் அதிகரிக்கும் ” என்றனர்.
ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, காவல்நிலையம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (12.22018) ஊரில் உள்ள மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டப்பந்தலில் அமர வைத்து கோஷம் எழுப்பினர். ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புப் போராட்டம், இன்னொரு பக்கம் ஆதரவாக மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.