வேம்பு மரம் ஏன் வீட்டருகில் வளர்க்கவேண்டும்..? என்னதான் காரணம்..?

0 338

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.

வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக் காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.

வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

சராசரியாக 15 மீ. வரை உயரமாக வளரக்கூடிய மரம். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டுள்ள தாவரமாகும். வேம்பு இலைகள், இறகு வடிவமானவை, பல சிற்றிலைகளைக் கொண்டவை, ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும்.

வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும். வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5செ.மீ. வரை நீளமானவை, மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதை காணப்படும். வேம்பு பழங்கள், பறவைகள் விலங்குகளால் உண்ணப்பட்டு, அவற்றின் எச்சத்தின் மூலமாக விதைகள் பரவலடைகின்றன.

இந்தியா முழுவதும், சாலையோரங்கள், மக்களின் பிற உபயோகங்களுக்காகப் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. வேம்பு முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

வேம்பு முதன் முதலில் இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படுகின்றது. மேலும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவக் குணத்தினை இந்தத் தாவரம் கொண்டுள்ளதாக உறுதியான நம்பிக்கை இந்திய மக்களிடம் காணப்படுகின்றது.

வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த கஷாயத்தை ஆறு தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் ஏழு நாட்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம் அல்லது வேம்பு இலைகளைக் காயவைத்து, தூள் செய்து, காலை, மாலை வேளைகளில், வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு பொடியை, பால் அல்லது வெந்நீருடன் கலந்து பருகவும் அல்லது கொழுந்தான வேப்ப இலைகளைப் பறித்து, அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும்.
இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.

ஒரு தண்டு வேம்பு வேர்ப்பட்டையுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி, இளஞ்சூடான பதத்தில் இந்த நீரால் வாய் கொப்புளித்து வர பல்வலி தீரும்.

சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் வேப்ப எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டுவர, தலைமுடி உதிர்தலும், தலைப்பேன், பொடுகுத் தொல்லையும், இளநரையும் கட்டுப்படும்.

படை, சிரங்கு குணமாக வேப்ப இலைகளிலிருந்து தயாரித்த பசையை உறங்கும் முன் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். அல்லது வேம்பு மரப்பட்டையைக் காயவைத்து எரிக்க வேண்டும். எரிந்த சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து களிம்பு தயார் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும், பாதிக்கப்பட்ட இடங்களில், குணமாகும் வரை பசையைத் தடவிவர வேண்டும்.

பத்து கொழுந்து வேப்பம் இலைகள் எடுத்துக் கொண்டு, நான்கு வாரங்களுக்குத் தினமும் காலையில் சாப்பிட்டு வர, தோல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும்.

மாதவிடாய் முறையாக இல்லாத பெண்கள் ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த சூடான பானத்தைக் குணமாகும்வரை, ஒரு கோப்பையளவு, காலை, மதியம் மற்றும் மாலையில் பருக வேண்டும்.

வேம்பு இலைகள் மற்றும் வேரின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும் திறன் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் குணமாக ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த சூடான பானத்தை, ஒரு கோப்பை அளவு பருகி வரலாம். காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் மூன்று நாட்களுக்குக் குடிக்க வேண்டும்.

வேப்பிலையுடன், மஞ்சள், அருகம்புல், பச்சரிசி, பாசிப்பயிறு இவைகளை ஒன்றாக அரைத்து, அம்மைக் கொப்புளங்கள் காணப்படும் இடங்களில் தடவிக் குளித்துவர வேண்டும்.

தலைப்பேன், பொடுகு தீர தண்ணீருடன் வேம்பு இலைகளைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, குளிர்ந்த பின்னர் சீயக்காய் உபயோகித்துக் குளித்து வர வேண்டும் அல்லது வேப்பம் பூவை அரைத்து, தலையில் நன்றாகப் பூசி, சிறிது நேரம் கழித்து தலை குளிக்க வேண்டும்.

குளிர்காலத்தில் சளித்தொல்லை அதிகமாகும். வேப்பம்பூ துவையல், இரசம் போன்றவற்றைத் தயார் செய்து முறையாகச் சாப்பிட்டு வர, சளியிலிருந்து விடுதலை கிடைப்பதுடன் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.