‘வீட்டுத் தோட்டம்’ ரொம்ப ரொம்ப ஈசிதான்…!!  கொஞ்சம் கேளுங்க… 

519

பதிவுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் என்பதே இந்த பதிவின் நோக்கம்…ஆர்வம் இல்லைனாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம். ‘மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய பிராசஸ் நமக்கு ஒத்து வராது’னு சொல்றவங்க முதலில் கட்டுரையை படிங்க…ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே…!!

அனைவரின் வீட்டிலும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ‘டென்ஷன்’ இருக்கும். சின்ன பையன் கூட “போம்மா நானே டென்ஷன்ல இருக்குறேன், நீங்க வேற அத செய் இத செய்னு சொல்லிட்டு ” இப்படி யாரை கேட்டாலும், யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை…காரணம் இன்றைய பரபரப்பான சூழல்…!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிட்டே இருந்தா உங்களை யார் கவனிக்கிறது…உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்…காய்கறிகள், பூக்களை பறிக்கும் போது நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்…!!

ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை…நன்கு கழுவி சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயமா இருக்கு !?

சென்னை உட்பட பல ஊர்களில் முழுவதும் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டகாய்கறிகள் என தனி கடைகள் வந்துவிட்டன. ஆனால் எல்லோராலும் அங்கே சென்று வாங்க இயலாது.

எதுக்கு தயக்கம்?!

‘நீங்க சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லைங்க’ என சாமார்த்தியமா தப்பிக்க கூடாது…தூங்க, சமைக்க, டிவி பார்க்க, அரட்டை அடிக்க எல்லாம் இடம் இருக்குதுல அது மாதிரி இதுக்கும் ஒரு இடத்தை ஒதுக்குங்க…மாடி,பால்கனி,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே…!! வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்…அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்…! நீங்க மனசு வச்சு வேலைல இறங்குங்க முதல்ல, அப்புறம் பாருங்க இவ்ளோ இடம் நம்ம வீட்ல இருக்குதான்னு ஆச்சர்யமா இருக்கும்…?!!

ஓகே…! ஒருவழியா இடம் ரெடி பண்ணிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சா? அடுத்தது விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை…உங்களுக்காகவே சில சுலபமான வழிமுறைகள் இருக்கு…கொஞ்சம் ஆர்வம், உழைப்பு இருந்தா போதும்…தண்ணி வசதி இல்லைன்னு சொல்றீங்களா…அதுக்கும் பல ஐடியா கை வசம் இருக்கு…தொடர்ந்து படிங்க…அதை பத்தியும் சொல்றேன்…நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க…கலக்கிடலாம்…!!

எளிய முறையில் வீட்டிலேயே காய்கறி உற்பத்தி

ஆரம்பத்துல தோட்ட கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்…ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்தி பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில் இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க…உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல…

அடடா பேசிட்டே இருக்கேனே, சரி சரி வாங்க வாங்க… ஏற்கனவே நாம ரொம்ப லேட்…இனியும் தாமதிக்காம வேலையில இறங்குவோம்…காய்கறிகளை பயிரிடுவோம்…சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்…! ஒகே தயாரா…? அப்டியே படிக்க படிக்க கற்பனை பண்ணி மனதில் பதிய வச்சுகோங்க…அப்பத்தான் உடனே காரியத்தில் இறங்கக்கூடிய ஒரு உத்வேகம் வரும்…

அடிப்படை தேவைகள்

* மண் அல்லது சிமென்ட் தொட்டி

* பிளாஸ்டிக் அரிசி சாக்

* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)

* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)

20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்)

ஓகே! இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது…)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும். முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.

காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணை போட்டு நிரப்புங்கள்…இலைகள் மக்கி உரமாகி விடும்…அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்…வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !

தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.

ஒவ்வொன்றையையும் தனி தனியாக பார்க்கலாம்…

புதினா,கீரை

புதினா இலைகளை ஆய்ந்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்…வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.

கொத்தமல்லி

கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் கட் பண்ணி சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்…மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்…

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்…மண்ணிற்கு மேல் தெரிய கூடாது…வளர வளர பார்க்க அழகாக இருக்கும்…வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்…உடம்பிற்கு அவ்வளவு நல்லது…

ஓகே…இன்னைக்கு இவ்வளவு போதும்…

காலை அல்லது மாலையில் ஒரு அரை மணி நேரம் இதற்காக செலவு செய்தால் போதும்… மனதுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி இதை விட வேறு என்ன இருக்கிறது…?!

உற்சாகமாக ஈடுபடுங்கள்…

சந்தோசமான வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்…

உருளை கிழங்கு நம்ம வீட்லையேவா ?? எப்படி ?? அடுத்த பதிவில் பார்த்துடுவோம்…!

பின் குறிப்பு

தோழிகள் சிலர் என்னிடம் ‘எங்களுக்கும் வீட்ல விளையவச்சு அதை பறிச்சு சமைக்கணும்னு தான் ஆசை , ஆனா அந்த உரம், இந்த மண் போடணும் அப்டி இப்படினு பெரிசா சொல்றாங்க…ஈசியான வேலை மாதிரி சொல்லி தந்தா நல்லா இருக்கும்’ என கேட்டுகொண்டதின் காரணமாக இந்த பதிவை எளிமையாக எழுதி இருக்கிறேன்…படித்துவிட்டு சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்கவும்…காத்திருக்கிறேன். நன்றி

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.