விவசாயிகளின் நண்பன் ஆந்தையுமா..? என்ன ரகசியம்..?

0 259

விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும்.

அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்…. என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, “யாரோ இறக்க போறாங்க..!” என்று கிராமங்களில்  பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்தைகளுக்கு இடம் உண்டு
நம் நாட்டில் ஆந்தை கெட்ட சகுனத்தின் குறியீடாக பார்க்கப்பட்டாலும், மேலை நாடுகளில் ஞானத்தின் சின்னமாக, அறிவின் சின்னமாக பார்க்கின்றனர். இதனால்தான் பல கல்வி நிறுவனங்களில் ஆந்தையின் சின்னத்தை பொறித்திருக்கிறார்கள்.

தானியக் கிடங்குகளிலும், நெல், காய்கறி, வேர்க்கடலை உள்ள வயல்களில் எலிகள் தொந்தரவு அதிகம். பெரும்பாலும் வயல்களில் உள்ள எலிகளை பாம்புகள் சாப்பிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மனித நடமாட்டத்தால் பாம்புகளின் நடமாட்டமும் குறைந்து வருவதால், இரவு நேரங்களில் எலிகளை பிடித்து உண்பவை ஆந்தைகளே. ஒரு எலி தன் வாழ்நாளில் 500 முதல் 2000 குட்டிகளை ஈனும் என்றும், வருடத்தில் 5, 6 முறை குட்டிப் போடும் என்றும் ஒருமுறைக்கு 10-12 குட்டிகளை ஈனும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த அளவுக்கு இனப்பெருக்கம் செய்து விவசாயத்திற்கும், தானிய சேமிப்பு கிடங்குகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் எலிகளின் அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் ஆந்தைக்கு பெரும்பங்கு உண்டு.

இந்தியாவில் 4 வகையான ஆந்தை இனங்கள் இருக்கின்றன. சின்ன புள்ளி ஆந்தை, பெரிய ஆந்தை, கோட்டான் எனப்படும் தானியக் கிடங்கில் உலவும் ஆந்தை, மீன் பிடிக்கும் ஆந்தை, இமாலயன் பனி ஆந்தை என்று பிரித்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆந்தையை ‘கோட்டான்’ என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் கூகை என்பார்கள். அமாவாசை இருட்டிலும் ஆந்தைக்கு துல்லியமாக கண் தெரியும். ‘கோட்டான்’ என்று சொல்லப்படுகிற தானியக் கிடங்கு ஆந்தையே, பெரும்பான்மையான இடங்களில் இருக்கிறது. இதுவே எலிகளை கட்டுப்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறது.

புள்ளி ஆந்தை பயிர்களில் இருக்கும் வெட்டுக்கிளி, புழுக்கள், பூச்சிகளை சாப்பிடும். இதோடு பல்லி, ஓணான், சுண்டெலிகளையும் சாப்பிடும்..!
ஜீரண சக்திக்கு பேர்போன ஆந்தை, எலிகளை சாப்பிட்ட பிறகு உருண்டையாக ஒரு கழிவை கக்கும். அதில் எலியின் மயிர், நகங்கள், எலும்புகள் அடங்கியிருக்கும். துளியும் சதையோ, ரத்தமோ ஒட்டியிருக்காது. அப்படியென்றால் அதன் ஜீரண உறுப்புகளின் பிரித்தறியும் திறனை தெரிந்துகொள்ளுங்கள்.

புறா, காகம், கோழி இவையெல்லாம் பறக்கும்போது ‘படபட’வென ஓசை எழும்பும். ஆந்தையின் இறகுகள் மிக மிக மென்மையானதால் பறக்கும்போது ஒலியை எழுப்பாது. நமக்கு அருகிலே இருந்து பறந்து சென்றாலும் அதை கண்டறிய முடியாது. தன் கழுத்தை 359 டிகிரி அளவுக்கு சுழற்றும் தன்மையுடைய ஆந்தை, திரும்பவும் 0 டிகிரி நிலைக்கே (ஆரம்ப நிலைக்கு) வந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆந்தைக்கு பக்கத்தில் போனால் கழுத்தை திருகிக்கொண்டு அதுவாகவே இறந்துவிடும் என்று சிலர் சொல்வதை கேட்டிருப்போம். அதுக்கு இதுதான் காரணம். பிறந்து சில நாள் ஆன ஆந்தை குஞ்சுகூட, எலியை சாப்பிடும் தன்மையுடையது.

ஆனால் தமிழ்நாட்டில் இதை பார்ப்பதும் அரிதாகி வருகிறது. மனித நடமாட்டங்கள், வாகன ஓசைகள், விளக்கு வெளிச்சம் என ஆந்தையின் சத்தத்தை கேட்பதே அரிதாக இருக்கிறது. இந்த தலைமுறை குழந்தைகளும் பாடப் புத்தகத்திலும், புகைப்படங்களிலும்தான் ஆந்தையை பார்த்து வருகிறார்கள். விவசாயத்திலும் இதன் பங்கு இருந்து கொண்டிருக்கிறது. இயற்கையை இயற்கையாக இருக்கவிட்டாலே போதும் எல்லா உயிர்களும் இந்த பூமியில் வாழும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.