வாரிசு சான்றிதழும் சரி செய்யப்பட வேண்டிய விசயங்கள்!!

0 745

ஒரு தனி நபர் இறந்த பின் அவருடைய சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அடைவதற்கு வாரிசு சான்றிதழ் தேவைபடுகிறது. தனி சொத்து மற்றும் பூர்விக சொத்து இரண்டிலுமே வாரிசு உரிமைப்படி சொத்து, வாரிசுகளுக்கு தடைகள் எதுவும் இல்லாதபட்சத்தில் தானாக இறங்கும்.

இந்துகளுக்கு இந்து சட்டப்படியும், இஸ்லாமியர் & கிறிஸ்தவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியே வாரிசு சான்றிதழ் வழங்கபடுகிறது.
வாரிசுகள் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள், மூன்றாம் நிலை வாரிசுகள் என்று இந்த சட்டத்தில் பிரிக்கபடுகிறது.

நீதிமன்ற பாகபிரிவினை வழக்குகளில் அனைத்து நிலை வாரிசுகளையும் கணக்கில் கொண்டே சொத்துகள் பங்கு பிரிக்க படுகிறது.ஆனால் கள நிலவரம் என்னவென்றால் வாரிசு சான்று வாங்க சென்றால் வாரிசு சான்றிதழில் முதல்நிலை வாரிசு பெயரை மட்டும் சேர்க்கிறார்கள்.

முதல்நிலை வாரிசுகளில் யாராவது இறந்து விட்டு இருந்தால் இரண்டாம் நிலை வாரிசுகளாகிய அவர்களின் வாரிசுகள் அதில் சில நேரங்களில் இடம் பெறுகிறார்கள் அல்லது முதல் நிலை வாரிசு பெயரை போட்டு அவர் இறப்பு என்று குறிப்பு எழுதி வாரிசு.
சான்று கொடுக்கிறார்கள்.

ஒரு இறந்துவிட்ட நிலகிழார் பூர்விக சொத்துக்களை ( தாத்தா, முப்பாட்டன், பரம்பரை ) 20 ஏக்கர் வைத்துள்ளார். அவருக்கு 1 மனைவி, 2 மகன்கள், 1 மகள்கள், என 4 வாரிசுகள் இருக்கிறார்கள். மேற்படி 20ஏக்கர் அனைவருக்கும் ¼ பங்கு சேரும் . இதனை கணக்கு செய்து முதல்நிலை வாரிசு சான்றிதழ் தருகிறார்கள் , மேற்படி வாரிசு சான்றிதழ் அடிப்படையில் ஆளுக்கு 5 ஏக்கர் எடுத்து கொள்கிறார்கள்.அதில் 2 மகன்களில் 1 மகன் தன் பங்கை வேறு நபரிடம் விற்றுவிடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

விற்ற நபருக்கு அச்சொத்து சுய சம்பாத்தியம் இல்லை. பூர்வீக சொத்து என்பதால் அவரின் பங்கு 5ஏக்கர் மேல் அவர் முழுஉரிமை கொண்டாட முடியாது. அவருக்கு இருக்கும் மகன்கள், மகள்களுக்கும் அதில் உரிமை இருக்கிறது. அவர்கள் மேஜராக இருந்து மேற்படி கிரயம் செல்லாது என தந்தை விற்பனையை எதிர்த்து வழக்கு போடலாம்.

விற்றவரின் வாரிசுகள் மைனராக இருந்தால் 18 வயதானவுடன் மேற்படி கிரயத்தை எதிர்த்து வழக்கு போடலாம். இவ்வாறு சட்ட குழப்பங்கள் அதிகமாக மேற்படி நடைமுறைகளால் வருகிறது.அதனால் தான் வாரிசு சான்று பூர்வீக சொத்தை பொறுத்தவரை முழுமையானதா இல்லை, வாரிசு சான்று கொடுக்கும் பொழுதே முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, வாரிசுகளையும் வாரிசு சான்றிதழில் கொடுத்து விட்டால் மிக பயனுள்ளதாய் இருக்கும்.

பெங்களூர் புறநகரில் தேவனஹள்ளி , தோட்பெல்லாபூர் பகுதிகளில் இப்படி 15 ஆண்டுகளுக்கு முன் நிலங்களை விற்றவர்கள் தற்போது வாரிசுரிமை மைனர் சொத்து என்று வழக்குகள் நிறைய தொடர்ந்து கொண்டு இருகிறார்கள். நிலங்கள் விலை உயர உயர மக்களின் சபலங்கள் அதிகமாகி சும்மா போட்டு தான் பாரப்போமே என்று மைனர், வாரிசு உரிமை வழக்குகளை போட்டு கொண்டு இருகின்றனர்.

வாரிசு சான்றிதழில் முதல்நிலை வாரிசு வாங்குவதற்கே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறது. இதில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகள் சேர்த்து வாங்க வேண்டுமா என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு புரிகிறது. என்ன செய்வது எதிர்காலத்தில் சட்டசிக்கல் இல்லாமல் இருக்க இதனை செய்தல் வேண்டும்.

சில தனி சொத்து சுயசம்பாத்தியக்காரர்கள் இறந்த பின் வாரிசு சான்று வழங்கும் போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகளால் குழப்பங்கள் வருமா என்றால் , அது நிச்சயம் வராது . கிரைய பத்திரத்தில் சுயார்ஜிதம் என்றும் முன் கிரைய ஆவணமும் போடும் போது வாரிசு சான்றிதழில் இருக்கும் முதல் நிலை வாரிசுகள் மட்டும் கையெழுத்து போட்டால் போதுமானது.

அடுத்து வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தால் என்று கேள்வி பட்டாலே அதனை அப்படியே நிலுவையில் வைத்து விடுகின்றனர். வட்டாட்சியர் கண்டிப்பாக அவரை சேர்க்காமல் வாரிசு சான்று வேண்டும் என்று கேட்டால் நீதிமன்றம் மூலம் அவர் 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனதால் இருந்து விட்டதாக கருதப்படும் உத்தரவு வாங்க வேண்டி இருக்கிறது. இந்த விசாரனையை RDO நீதிமன்றத்திற்கு மாற்றினால் மிகவும் நல்லதாக இருக்கும் VAO ரிப்போர்ட்டும் கிராமத்தில் விசாரித்து பெற்று கொள்ளலாம். நீதிமன்றங்களுக்கு செல்வதால் அங்கு இருக்கும் பல்வேறு வழக்குகளில் கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைந்து கண்டு கொள்ள படாமலேயே கிடக்கிறது . நடுத்தர மக்கள் கையிருப்பு பணங்களும் அதிகமாக செலவாகி கொண்டே இருக்கிறது.

ஒருவர் FIXED DEPOSIT , தனியார் பேருந்து உரிமைகள் போன்ற அசையும் சொத்துகளுடன் இறந்துவிட்டார் இறந்த இடத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இவர்கள் குடியேறி இருகின்றார்கள் . அதற்கு முன் பல ஆண்டுகள் வேறு ஊரில் இருந்தார்கள் அங்கு கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதினால் அங்கு இருக்கும் வட்டாட்சியருக்கு அனுப்பிவிட்டு விசாரித்து அறிக்கை பெறலாம். ஆனால் அதனை செய்யாமல் அப்படியே அதனை நிறுத்தி வைத்து விடுகிறார்கள் . அதாவது ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் நிலை, நமது வருவாய் துறைக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.

ஒருவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று தருவதில்லை . அதனை நீதிமன்றம் மூலம் இப்பொழுது RDO மூலம் பரிகாரம் தேடி கொள்ள சொல்கின்றனர்.
அதனை 10 ஆண்டுகள் வரை நிச்சயம் நீட்டிக்கலாம். அதனால் எந்தவித கள சிக்கலும் வரபோவதில்லை ! ஊரில் சாட்சிகள் எல்லாம் இருப்பார்கள் . 20 வருஷம் ஆனால் தான் புது தலைமுறை வரும் . 10 ஆண்டுகள் அதனால் வரை வட்டாட்சியரிடம் மனு செய்து வாரிசு சான்று வாங்கலாம் என்று மாற்றப்பட வேண்டும். ,

இரு மனைவி சிக்கல்கள் , தத்து பிள்ளை சிக்கல்கள் போன்றவற்றால் சச்சரவுகள் ஏற்படும் போதும் வாரிசு சான்றுகள் கொடுக்கப்படாமல் நிலுவையில் போட்டு விடுகின்றனர். அதனையும் RDO நீதிமன்றங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்தி முடிவு எடுக்க வைக்கலாம்.

இப்படி வாரிசு சான்றிதழ்களில் மக்கள் பல்வேறு சிக்கல்களால் காலதாமதம், அலைக்கழிச்சல், கூடுதல் செலவுகள், என அவதிபடுவதை குறைத்து மேற்கண்ட சீர்திருத்தங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672 : www.paranjothipandian.in

You might also like

Leave A Reply

Your email address will not be published.