மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு

0 553

துபாயிலிருந்து

பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையை சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது

மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு

ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது ‘பேட்’ மா ற்றுவதிலிருந்து மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை.

‘மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்களே!’ என்று சமூகத்தையும் மானுடத்தையும் நோக்கி மிக அழுத்தமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

இயற்கை புதிரானது, ஆபத்தானது, அற்புதமானது, அதிசயக்கத்தக்கது, இரக்கமற்றது, தாகமானது, பேரன்பாலானது என்று கதையின் நகர்விற்கேற்ப அத்தியாயம் சொல்லியிருக்கும் ராமின் திரைக்கதை நேர்த்திக்கும், கதை சொல்லலுக்கும் ஒரு சிறப்பு ‘சபாஷ்’! மிக முக்கியமாக தமிழ்த்திரைப்படங்களுக்கேயுரிய ‘மெலோ டிராமா’வாக மாறக் கூடிய காட்சிகள் நிறைய இருந்தும் அவற்றை இயல்பாகக் கடந்து சென்றதற்காக ராமுக்கு என் அன்பு.

மிக முக்கியமாக, இந்தக் கதாபாத்திரத்தில் நாமே வாழ்ந்து விடலாம் என்று தன்னம்பிக்கையோடு அதில் ஈடுபடாமல் ஓர் இயக்குநரின் தெளிவோடு மம்மூக்காவை தேர்ந்தெடுத்ததற்காக ராமிற்கு என் பேரன்பு!!

மம்மூக்கா – சமீபத்திய இவரது மலையாளப் படங்களைப் பார்த்து விட்டு இவரது சில படங்களைப் பார்க்காமலேயே கூட இருந்தேன்.

சின்னச் சின்ன அசைவுகளில் உடல் மொழியில் முக பாவனைகளில்.. அநேகமாக அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்களில் கமலஹாசனை இந்தப் படத்தின் மூலம் வென்று விட வாய்ப்புகள் அதிகம்.

தன் மகள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியும் பிம்பத்துக்கு முத்தம் கொடுக்க முனையும்போது கதவை மூடிவிட்டு அந்த உணர்வுகளைக் கடத்துவாரே… பதின்பருவத்துப் பெண்ணின் தகப்பனாக வாழ்வில் ஏற்படும் சவால்களையும் ஏமாற்றங்களையும் சின்னச்சின்ன மகிழ்வுகளையும் துரோகங்களையும் வலிகளையும் ஒற்றை மனிதனாகப் படம் முழுவதிலும் சுமக்கிறார். ஆனால் எவ்வளவு பெரிய சுமை தெரியுமா இது என்ற அலட்டல் ஏதுமின்றி வெகு இயல்பாக. ராட்சசன்யா நீ மம்மூக்கா!!

மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எப்போதும் விறைப்புத்தன்மையோடே இருக்குமாம். கடும் குளிர் இருந்தபோதும் நடுங்கி விடாமல் உடலை விறைப்பாகவும் முகத்தைக் கோணிக்கொண்டும் நாக்கை வெளித்தள்ளிக் கொண்டும் படம் முழுதும் வருவதற்கு ஒரு பதின்பருவப் பெண்ணுக்கு அசாத்திய மனத்திடமும் உடல் உழைப்பும் எண்ணியது முடிக்கும் உறுதியும் வேண்டும்.

பதின் வயதுப் பெண் குழந்தைகளெல்லாம் நிமிடத்திற்கு நான்கு செல்ஃபிக்கள் எடுத்து தங்களை அழகு பார்த்துக் கொள்ளும் காலகட்டத்தில் ஒரு படம் முழுதும் தன்னை விகாரமாகக் காட்டும் படத்தில் நடிப்பதற்குத் துணிவும் வேண்டும். அந்தத் துணிவும் மனத்திடமும் கடின உழைப்பும் இயல்பாகவே வாய்த்திருக்கும் சாதனாவுக்குப் பேரன்பு!!

#தேனி ஈஸ்வரின் சட்டங்கள் பனிமூட்டம் நிறைந்த அந்தக்குளிரை உடலுக்குள் கடத்துமளவுக்கு அற்புதமாக இருக்கிறது.

தேர்ந்த ஓவியனின் தூரிகையின் வண்ணங்களைப் போல அமைந்த சில காட்சி சட்டங்களுக்காக அன்போடு அவரை அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அந்த நேர்த்தியான ஒற்றை வீட்டை உருவாக்கிய கலை இயக்குநரையும்..

பேரன்பின் பேரமைதியைப் படத்தில் உலவ விட்டுப் பின்னணி இசையில் அசத்தியிருக்கும் யுவனுக்கும் பேரன்பு!!

“உங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கு. இருந்தும் என்னையே ஏமாத்தியிருக்கீங்கன்னா என்னை விட உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை இருக்கும்?” என்று மம்மூக்கா விரக்தியில் சொல்லும் வசனத்திற்கு அரங்கு அதிர்கிறது.

மிகக் கூர்மையான அளவான வசனங்கள் தமிழ்த்திரையுலகில் உண்மையான பேரன்பு போல அரிதுதானே? இதற்காகவும் இயக்குநர் ராமிற்கு பேரன்பு

ஒரு தகப்பன் மகள் கதையாக மட்டுமே சுருக்கிப் பார்க்கும் திரைப்படமல்ல இது. இதன் மூலம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்க முனைந்திருக்கிறார் ராம் – பிரச்சாரமில்லாமல் இயல்பான தொனியில்.

குறைபாடுள்ள மனிதர்களைப் பேரன்போடு இந்த சமூகம் அணுகுமானால் அதுவே மானுடத்தின் வெற்றி. மாந்த நேயத்தின் ஒரு பகுதியை உரசிப் பார்த்து உண்மையில் நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என நம்மை உணர வைத்ததற்காக இயக்குநர் ராமிற்கும் படக்குழுவினருக்கும் பேரன்பு

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.