மாடு மேய்த்தல் கேவலமா..? தினமும் காபி, டீ குடிப்பவர்களே சற்று இதனையும் படியுங்கள்..!

0 396

நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்:

“நன்றாக படி, இல்லையெனில் மாடு மேய்க்க வேண்டியதுதான்.” சில நேரங்களில், “நீ மாடு மேய்ப்பதற்குதான் லாயக்கு,” என்று சிலரை மக்கள் திட்டுவதும் உண்டு. சில அரசியல் கட்சியினர், “அந்த கட்சிக்கு ஓட்டளித்தால், நீங்கள் அனைவரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்,” என்று ஏளனமாக பிரச்சாரமும் செய்தனர்.

இவற்றிலிருந்து பொதுவாக அனைவரும் பெறக்கூடிய தகவல்: மாடு மேய்த்தல் என்பது கேவலமான ஒரு தொழில், எந்த தொழிலும் செய்ய திறனில்லாத மனிதர்களால் செய்யப்படும் தொழில்.

ஆனால் சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்தோமெனில், மாடு மேய்த்தல் என்பது நிச்சயம் கேவலமானதல்ல; மாறாக, அஃது ஒரு புண்ணியமான தொழில் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மாடு மேய்த்தால்–கிடைக்காது

மாடு மேய்ப்பதன் மகத்துவத்தை அறிவதற்கு முன்பாக, வேறு சில விஷயங்களை ஆராய்வோம். சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கிராமப்புற பகுதியில் சில வாரங்கள் நான் தங்கியிருந்தபோது, ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞரைச் சந்தித்தேன்.

உள்ளூரில் 6 ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள அந்த இளைஞர், சொந்த ஊரை விட்டு தொலை தூரம் சென்று, தொழிற்சாலை ஒன்றில் பணியாளராக பணிபுரிகிறார்.

அவரது நிலை ஒன்றும் அசாதாரணமானது அல்ல; கிராமத்திலுள்ள பல்வேறு இளைஞர்கள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து வருவது இந்தியாவின் அன்றாட நிகழ்வாகி விட்டது.

இருப்பினும், “நீங்கள் ஏன் இங்கேயே விவசாயம் அல்லது பசு பராமரிப்பில் ஈடுபடக் கூடாது?” என்று அந்த இளைஞரிடம் நான் வினவினேன். அவரது பதில் எதார்த்தமாகவும் உடனடியாகவும் வந்தது. “விவசாயம் செய்தாலும் மாடு மேய்த்தாலும் யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள், சாமி.”

அந்த பதில் முதலில் எனக்கு சற்று நகைப்பைக் கொடுத்தது. ஆயினும் அதன் ஆழத்தை உணர்ந்தபடி தொடர்ந்து வினவினேன்: “விவசாயம் செய்யும் உங்களின் தந்தை எவ்வளவு சம்பாதிக்கின்றார்?”

“சுமார் இருபதாயிரம் வரை மாத வருமானம் உள்ளது.”

நகரமயமாக்கம்

கிராமங்களிலிருந்து மக்களை நகரத்திற்கு மாற்ற வேண்டும் என்பது சுயநலம் கொண்ட சில தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் திட்டம்; நகரங்களில் அதிகமான மக்கள் குடியேறினால் இவர்கள் நாலு காசு அதிகமாக சம்பாதிக்கலாம் என்பதே நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, நகரங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களையும் கிராமங் களைப் பற்றிய கெட்ட அபிப்பிராயங்களையும் அப்பாவி மக்களின் மனதில் சூட்சுமமாக பதிய வைக்கின்றனர். நகரங்களில் வாழ்பவர்கள் ஏதோ ஸ்வர்கத்தில் வாழ்வதுபோன்ற ஒரு மாயையில் வைக்கப்படுகின்றனர்.

“என் மகன் டவுன்ல வேலை செய்கிறான்,” என்று சொல்வதில் கிராமத்தினரும், “என் மகன் சென்னையில் வேலை செய்கிறான்,” என்று சொல்வதில் நகரத்தினரும், “என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான்,” என்று கூறுவதில் சென்னைவாசிகளும் மகிழ்ச்சியடைகின்றனர்.

என்ன வேலை செய்கிறான், அந்த வேலையால் என்ன பலன், என்ன விளைவுகள், அதனால் அவன் மகிழ்ச்சியாக உள்ளானா–இதையெல்லாம் யோசிக்கும் சீரான மனோநிலையில் நம்மவர்கள் இல்லை. நகர வாழ்வின் சில சொகுசுகளில் மயங்கும் பொதுமக்கள், அதிலுள்ள பல்வேறு பிரச்சனைகளைக் காணத் தவறிவிடுகின்றனர்.

உதாரணமாக, நகர வாழ்க்கை மனிதனின் ஆயுளை வெகுவாகக் குறைக்கின்றது, மற்றும் பல்வேறு புத்தம்புதிய நோய்களை உருவாக்குகின்றது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களோ நகரத்தில் இருப்பதால்தான் இவ்வளவு வியாதிகள் வருகின்றன என்பதை அறியாதது மட்டுமின்றி, நகரத்தில் வாழ்வதால் இந்த வியாதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு எளிதாக உள்ளது என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொள்கின்றனர்.

(நகரமயமாக்கத்தின் காரணங்களும் விளைவுகளும் இங்கே விரிவாக விவாதிக்கப்படவில்லை.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.