மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்..! இடையில் என்ன நடந்தது..?

0 268

பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீர் ஆவியாகி, மேகங்களாக உருவாகி, மழையாக பொழியும் இந்த இயற்கை நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதே நீரின் இந்தச் சிக்கனமான மறுசுழற்சி முறை பூமியில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் போதுமான நீரைக் கொடுக்கிறது. அப்படியானால், ஏன் இன்று தண்ணீர் தட்டுப்பாடு பூதாகரமாக உருவெடுத்து மனிதரைத் தவிக்க வைக்கிறது? என்ன தீர்வு இருக்கிறது? பதிலைப் பெற இந்தியாவில் தண்ணீரின் நிலையை ஆராய்வோம்.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் .இந்தியாவில், நீர் வளம் படுமோசமடைந்திருப்பது யாவரறிந்த விஷயம். இம்மக்கள் எங்கிருந்து தண்ணீரைப் பெறுகிறார்கள்? வடக்கே தொலைதூரத்தில், இமயத்திலுள்ள பனிக்கட்டிகளும் பனியாறுகளும் உருகுவதால் வசந்த காலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. என்றாலும் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பெரும் பகுதி, வானம் பார்த்த பூமியாகவே காணப்படுகிறது; வறண்ட பூமி நனையவும், கிணறுகளும் ஏரிகளும் நிரம்பவும், நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் நதிகள் கரைபுரண்டோடவும் வருடா வருடம் பெய்யும் பருவ மழையையே அது நம்பியிருக்கிறது. ஆனால் இந்தப் பருவ மழையை நம்பவே முடியாது; இது “புரியா புதிரான, முன்னுரைக்க முடியாத இயற்கை நிகழ்வு” என விவரிக்கப்படுகிறது. “செயற்கைகோள் முதல் ஆற்றல்மிக்க சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரை இன்று தொழில்நுட்பம் எல்லா விதத்திலும் முன்னேறியிருந்தாலும் . . . [பருவ மழையை] முன்னறிவிக்க முடியாதிருப்பது ஆச்சரியமே.”

பருவ மழை சாதாரணமாக மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பெய்கிறது, ஆனால் அந்தச் சமயத்தில் எப்போதும் அடை மழைபோல் பொழியாமல், அவ்வப்போது கொஞ்ச நேரத்திற்குக் கனத்த மழை பெய்கிறது. அப்போது, அணைகள் நிரம்பி வழிவதால் தண்ணீரைத் திறந்துவிட வேண்டியிருக்கிறது. ஆறுகள் கரைபுரண்டோடி, வயல்களையும் வீடுகளையும் வெள்ளத்தில் மூழ்கடிக்கின்றன. நவீன தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக எங்கும் காடுகள் அழிக்கப்படுவதால் “மதிப்புமிக்க” மழை நீரை வேர்களில் சேமித்து வைத்து, பின்னர் மெல்ல மெல்ல நிலத்தில் கசிய விடுவதற்குப் போதுமான மரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மேற்பரப்பிலுள்ள மண் அடித்துச் செல்லப்படுகையில் நில அரிப்பு ஏற்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் வண்டல் மண் மண்டிவிடுவதால் அவற்றின் ஆழம் குறைந்து, போதுமான நீரைத் தேக்கி வைக்க முடியாதவையாய் ஆகின்றன. இவ்வாறு, மதிப்புமிக்க மழைநீர் பெருமளவு வீணாகிறது.

ஒரு வழியாக மழைக் காலம் ஓய்கிறது. இனி வருடத்தின் மீதமுள்ள நாளெல்லாம் வெயில் அடிக்கிறது; சுட்டுப் பொசுக்கும் கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம்! மளமளவென நிலம் வறண்டுவிடுகிறது, வயல்கள் இறுகிப் போய், வெடித்து, பொட்டல் காடாய் ஆகின்றன. பாய்ந்தோடிய ஆறுகள் மணல் நிறைந்த ஆற்றுப்படுகையில் சிற்றோடைகளாக காட்சியளிக்கின்றன. நீர்வீழ்ச்சிகள் மாயமாய் மறைகின்றன. நிலத்தடி நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பெறுவதற்காக வெகு ஆழத்திற்கு ஆழ் துளைக் கிணறுகளைத் தோண்ட வேண்டியிருக்கிறது, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மழை பொய்த்துப் போனாலோ, வறட்சி தலைதூக்குகிறது, விவசாயம் நொடிந்துவிடுகிறது, ஆடுமாடுகள் செத்து மடிகின்றன, போதாக்குறைக்கு, கிராமவாசிகள் நகரை நோக்கி படையெடுக்கிறார்கள், இதனால் நகர்புறத்தில் இன்னுமதிக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

ஆனால் தொன்றுதொட்டே இந்த நிலைதான் என சொல்ல முடியாது. பண்டைய காலத்தில் இந்தியா எங்குமிருந்த மக்கள், பருவ மழை ஓய்ந்துபோனால் ஆறுகளும் ஏரிகளும் வறண்டுவிடும் என்றும் அவற்றை மட்டுமே நம்பியிருப்பதில் பயனில்லை என்றும் அறிந்திருந்தார்கள். உடனடி தேவைகளைக் கவனிப்பதற்காகவும் மழை காலத்துக்குப் பிறகு பயன்படுத்துவதற்காகவும், மழை நீர் விழுகிற இடத்தில் அந்நீரைப் பிடித்து வைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார்கள். இப்படித்தான் மழை நீரை சேமித்து வைத்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.