மழைப்பொழிவு, பனிமூட்டம் காரணமாக பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பது எப்படி?

1 315

மழைப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக, நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்த புழுக்கள், இலைகளை உள் பக்கமாக சுருட்டி, அதற்குள் இருந்தவாறு பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும்.

இலை சுருட்டுப்புழு

புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால் செடிகள் காய்ந்துவிடும். இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் போது, தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் விளக்குப்பொறி அமைத்து, புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

தாவர பூச்சிக்கொல்லிகளான அசாடிரக்டீன் கரைசலை, ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளிக்கலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகளான கார்டப் பவுடர் 400 கிராம் அல்லது குளோர்பைரிபால் 500 மி.லி. என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு பரப்பளவில் தெளித்துகட்டுப்படுத்தலாம்.

புகையான் பூச்சி

நெல் வயல்களில் அதிக நீர் தேங்கி, வெளியேற்ற முடியாமல் உள்ள இடங்களில், புகையான் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படும். இந்த பூச்சிகள் நெற்பயிரின் தண்டு பகுதியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு, சாறு உறிஞ்சும். இதனால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்துவிடும். இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் எரிந்தது போன்ற அறிகுறிகள் தென் படும்.

தழைச்சத்து உரங்களை இடும்போது, 3 அல்லது 4 முறை என பிரித்து இட வேண்டும். செயற்கை பைரித்திராய்டு மற்றும் பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது. வேப்ப எண்ணெய் கரைசலை ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும். இதேபோல் பூச்சிக்கொல்லிகளான டைக்குளோர்வாஸ், புப்ரோபசின், பிப்ரோனில், இமிடாகுளோபிரிட் ஆகிய ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கர் பரப்பளவில் தெளித்துகட்டுப்படுத்தலாம்.

குருத்துப்பூச்சி

குருத்துப்பூச்சிகள் இளம் நெற்பயிரின் தண்டில் துளையிட்டு, அதன் அடிப்பகுதியில் இருந்தவாறு, உட்பகுதியை கடித்து உண்ணும். இதனால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடி காய்ந்துவிடும். அவ்வாறு வாடிய நடுக்குருத்தை லேசாக இழுத்தால் கையோடு வந்துவிடும். நெற்பயிரில் கதிர் பிடிக்கும் பருவத்தில், இந்த பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டால், கதிரில் மணிகள் பால் பிடிக்காமல் வெண்கதிர்களாக மாறுகின்றன. இதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்படும்.

முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் அட்டைகளை, ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில், ஒருவார இடைவெளியில் கட்டி வைக்க வேண்டும். மேலும் தாவர பூச்சிக்கொல்லிகளான அசாடிரக்டீன் கரைசலை ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவிலும், தாக்குதல் அதிகமாக காணப்படும் இடங்களில் கார்டப் பவுடரை 400 கிராம் என்ற அளவிலும் அல்லது குளோர்பைரிபால் மருந்தை 500 மி.லி. என்ற அளவிலும் அல்லது பிப்ரோனில் மருந்தை 400 மி.லி. என்ற அளவிலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

கதிர் நாவாய்பூச்சி

கதிர் நாவாய்பூச்சிகள் பூக்கும் தருணத்தில் உள்ள நெல்மணிகளின் சாறை உறிஞ்சுவதால், அவற்றில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, பதராகிவிடும். அறுவடைக்கு பின்பு உள்ள கட்டை பயிரிலும் இந்த பூச்சிகள் தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

இதனால் அறுவடைக்கு பின் கட்டை பயிர் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு மாலத்தியான் மருந்தை 200 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

கூண்டுப்புழு

கூண்டுப்புழுக்கள் நெற்பயிரில் உள்ள இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால் இலைகள் வெள்ளை நிற காகிதம் போல் காணப்படும். இலைகள் வெட்டப்பட்டு தூர்களை சுற்று குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும்.

வயலில் தேங்கியிருக்கும் தண்ணீரில் சிறிது மண்ணெண்ணெய் கலந்து, பின்னர் தூர்களில் இருக்கும் குழல் வடிவ கூண்டுகளை, பயிர்களின் குறுக்கே கயிறை போட்டு, நீரில் விழுமாறு செய்ய வேண்டும். பின்னர் அந்த நீரை வடித்து, கூண்டுப்புழுக்களை கவர்ந்து அழிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப பூச்சிக்கொல்லிகளான கார்பரைல் மருந்து 10 கிலோ, பென்தோயேட் மருந்து 400 மி.லி. என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

You might also like
1 Comment
  1. #FAB says

    தகவல்களுக்கு நன்றி சகாே…
    உங்கள் பணி தாெடர வாழ்த்துக்கள்

Leave A Reply

Your email address will not be published.