மஞ்சளை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா..?

0 349

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.

மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி.
தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

இதன் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை.  நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை.  இவை மஞ்சள் என்கிற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும். 10 நாள்களுக்குச் சிகிச்சையைத் தொடரலாம்.

மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.

மஞ்சளை நன்கு காய வைத்து, இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை 1 டம்ளர் நீரில் கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சுத்தமான மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சுத்தமான பஞ்சை நனைத்து கண்களில், மூக்கிலிருந்து பக்கவாட்டில் ஒரு நாளைக்கு ஆறு முறை வீதமாக விட்டு வந்தால் கண்ணில் நீர் வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.

ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சளய் தூள் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு இருமலுடன் வரும் காய்ச்சல் குணமாகும்.

மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

மரமஞ்சள் என்பது ஏறுகொடி. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் காடுகளில் விளைகின்றது. காலேயகம், தாறவி போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. மரமஞ்சள் தண்டு கட்டைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.

மரமஞ்சள் அதிக மணமுள்ளவை. பெர்பெரின் எனப்படும் அல்கலாய்டு அதிக அளவில் இந்த தாவரத்தில் காணப்படுகின்றது. மரமஞ்சள் தண்டு கட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கம்.

தண்டு கட்டைகள் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டவை; இவை உடல் வெப்பத்தை அகற்றும்; பசியைத் தூண்டும்; உடலை பலப்படுத்தும்; சுவாச நோய்கள், மூலம், மயக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மருந்துகளில் மரமஞ்சளும் சேர்கின்றது. மேலும் குடற்புண், அஜீரணம் போன்றவற்றிற்கான மருத்துவத்திலும் நேரடியாக உபயோகமாகின்றது.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.

மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.