பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூறிய தமிழக அரசின் பின்னி என்ன..? உண்மையின் மறுபக்கம்..!

0 711

நம் சமூகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் இன்று எந்த மூலை முடுக்கிலும் வர்த்தகம் நடைபெறுவதில்லை. அன்றாடம் வீடுகளில் சேரும் கழிவு மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக்கின் பங்கு சரிபாதியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலக வெப்பமயம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த சூழ்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் கூட இதற்கு காரணமாக அமைகிறது.

இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மட்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள்.

வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்பு சாதனப் பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும், அதிகரித்து வருகிறது.

சுற்றுச் சூழல் வல்லுநர்களும் இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில் வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.

ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 100-ககும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம்நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோபக பாட்டில்கள், மற்றும் அலுமினியப் பாட்டில்களையும் பயன்படுத்த நிறுவனங்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான டச்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழக்க முடியும். மாசு இல்லாத தேசமாக, உலக நாடுகளுக்கு முன்னோடியாக, விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

நன்றி : ஏ.பி. முருகானந்தம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.