பட்டா என்கிற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பாரம்பரியமாய் வாழ்ந்தவனை வெளியேற்றுவது என்பது சுத்த அயோக்கியத்தனம்..

0 406

பட்டாவின் பெயரால் பழகுடியினர் மீது நீதிமன்றம் அரசு நடத்தும் பயங்கரவாதம்.

2019 ஜீலை 28க்குள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைத்த தன் தாத்தன்,பூட்டன்,ஓட்டன் உடம்புகளை எல்லாம் தோண்டி எடுத்து ,ஓடியாடிய இடத்தையும், மூதாதை சுவாசித்த மூச்சுக்காற்றையும் இறுகப்பிடித்துக்கொண்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் ஆதியில் இருந்து வாழ்ந்த நிலத்தை ,பட்டா போட்டு கொடுக்க அரசு என்கிற அமைப்பு உண்டாகாத காலத்திற்கு முன்பு உரிமை பெற்ற இடத்தை உச்சநீதிமன்றத்தின் உதவியோடு உள்ளூர் தாசில்தார்கள் காலிசெய்வார்கள்..

பட்டா கேட்டு வனப்பகுதிகளுக்குள் வாழ்கிற பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் கோரிக்கை அந்தந்த மாநில அரசால் நிராகரிக்கப்பட்ட 11,21,446 குடியிருப்புகளை ஜீலை மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்கிற உத்தரவு, ஆண்டாண்டு காலமாய் வனத்தை நம்பி வாழ்ந்துவரும் “பூர்வகுடி “ “பாரம்பரிய மக்கள் “மீது அரசு மற்றும் உச்சநீதிமன்ற நடத்திய பயங்கரவாத செயலாகும்.

காடென்பது வெறும் விலங்குகளுக்கு மட்டுமே சொந்தம் என்கிற பார்வை உயிர்கோல சூழலை புரிந்துகொள்ளாத முட்டாள்தனமான பார்வை, நாட்டிற்குள்_இருந்துகொண்டு_நாங்கள்_நாகரீகம்_அடைந்துவிட்டோம் என்று_கூறி_காட்டை_ஆக்கிரமிப்பவன்தான்_இங்கு_ஆக்கிரமிப்பாளனே_ஒழிய காட்டை_பூர்வீகமாகக்_கொண்டவனும்_அங்கேயே_வாழ்பவனும்_ஆக்கிரமிப்பாளன்_இல்லை. உங்களின் பட்டா பாஸ்புக் சட்டமும் ,கோர்ட்டும், அரசாங்கமும் வருவதற்கு முன்பே அங்கு வாழ்ந்தவன் எப்படி வந்தேறியாக இருந்திருக்க முடியும்.

உணவு சங்கிலியில் விலங்கும் ,மனிதனும் இணைந்து வாழ்வதே எதார்த்தமானதாகும். பட்டா வைத்துக்கொண்டவன்தான் வாழமுடியும் என்று பரம்பரையாக வாழ்பவனை வெளியேற்றும் நீங்கள் வேதாந்தா, டாடா பிர்லாவின் முன்னோர் எந்த காட்டில் பிறந்த வளர்ந்தார்கள் என்பதை உங்கள் சட்டங்கள் விளக்கி சொல்ல முடியுமா? பழங்குடியனுக்கும் பாரம்பரியனுக்கும் இல்லாத உரிமை எப்படி டாடாவுக்கும் பிர்லாவுக்கு போனது ?என்பது உங்கள் செல்லறித்துப்போன மூளைகளுக்கு எட்ட வாய்ப்பு இல்லைதான்.

ஊழல் நிறைந்த நிர்வாக சீர்கேட்டில் தமிழ்நாடு “வருவாய்த்துறை “இரண்டாம் இடத்தில் இருக்கிறது. லஞ்சம் வாங்குவதற்கே அரசு அதிகாரியாக வந்தேன் என்று சொல்லும் இந்த நாட்டின் அரசு அதிகாரிகளுக்கு சொகுசு விடுதிகட்டி இருப்பவனும், மகாராஜாடீ எஸ்டேட்காரணும் கொடுக்க முடிந்த லஞ்சத்தை தமிழ்நாட்டு எல்லைக்குள் வாழ்கிற 7148 பழங்குடியும் 1881 பாரம்பரியனும் கொடுத்திருக்க வாய்ப்பு இல்லைதான். அதனால்தானோ என்னவோ நீங்கள் போட்டிருக்கிற சட்டத்திற்கு உட்பட்ட பட்டா இவர்களின் கைகளுக்கு வரவாய்ப்பு இல்லாமல் போனது.

#இந்திய_அரசியலமைப்புச்_சட்டம்_சரத்து_341ன் படியும் ,1976 schedule – வகுப்பு பழங்குடியினர் திருத்த சட்டத்தின் படியும் ,பாரம்பரியமாய் வாழ்பவனை வெளியேற்ற முடியாது. வன உரிமைச்சட்டம் 2006-ன்படி பட்டியல் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் இதுதான் நீதி.

தமிழ்நாட்டில் 3.5 விழுக்காடு உள்ள பழங்குடியினர் மக்களில் 1.2 விழுக்காடு சேர்வராயன் மலை, கொல்லி மலை, ஆணை மலை, சத்தியமங்கலம், நீலமலை ஆகிய பகுதிகளில் வாழ்கிற ஏரவல்லான், கசப்பர், அரநாடான், ஊராளி, கொச்சி வேலன், மன்னான், மலையாளி, மலமலகான், மலையரையான் இவர்கள் யாருக்கும் உங்கள் பங்குச் சந்தையில் கணக்கு இல்லை, உங்கள் IPL ஆட்டத்திற்கும் இவர்கள் கைதட்ட மாட்டார்கள்,
வெள்ளி,சனி இரவு உயர் நட்சத்திர விடுதி களியாட்டத்தில் நீலநிற வெளிச்சத்தில் நவ நாகரீக உடையில் ஒரு கையில் மதுக்கிண்ணமும் மறுகையில் புகையோடும் சேர்ந்து வாழ்கிற அவசரநிலை அவர்களுக்கு இல்லைதான். அதனால்தான் இது அவசர வழக்கும் இல்லை அத்தியாவசியத் தேவையான வழக்காகவும் இல்லை. அதனால் தான் ஜூலை 28க்குள் வெளியேறுங்கள் என்று நீதிமன்றம் அவசர கெடுவிதித்து இருக்கிறது.

பதிவு: ராஜிவ்காந்தி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.