நாட்டு மாடு, நாட்டு நாய் நாட்டு மீன் எங்கே..? நாட்டு மீன்களை அழித்த சீமை மீன் இது..! திலேபியா

0 3,920

நாம் சாதாரணமாய் கவனிக்காத ஒரு தகவல் . உள்நாட்டு மீன்கள் அவற்றில் உள்ள பல் வேறு வகையினம் . சிலது கேள்விபடாத ஒன்றாய் தெரிந்தாலும் இந்த கட்டுரையை படித்த பின்னர் அவ்வகையினங்களை தேடி பிடித்து காண முயற்சி செய்வோம்.

கரிசல் காட்டுப் பகுதியல் தினமும் மீன் சாப்பிட்ட மக்கள், இன்று மீன் உணவுக்கு ஏங்கித் தவிக்கிறார்கள். அப்பகுதி சம்சாரிகளின் வீட்டில் விவசாய வேலைக்கு இருந்த கருவிகளுக்கு, இணையாக இருந்த மீன்பிடி கருவிகள் இன்றைக்கு இல்லை.
மானாவாரி நிலங்கள் என்றும், கந்தகப் பூமியென்றும், கரிசல் பிரதேசமென்றும் மக்களால் சுட்டப்படுகிற – மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்யும் நிலங்கள் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பரந்து கிடக்கின்றன.

பல லட்சம் மக்கள் இந்த வகை நிலங்களில் விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்நிலங்களில் காடுகள் உண்டு. தோட்டங்கள் உண்டு. வயல்களும் உண்டு. விவசாயத்துக்கு ஆதாரமான நீராதாரம் என்று பார்த்தால் கிராமங்கள்தோறும் தவறாமல் இருக்கும் கண்மாய்கள், ஊருணி, கிணறுகள் உருவாக்கப்பட்டவை.

அத்துடன் மக்கள் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் தெப்பங்கள், நிரவிகளும் உண்டு. இவை பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களுடன் நான்கு பக்கமும் மக்கள் நீராட உகந்த நீண்ட படிக்கட்டுகள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும்.
மழைக்காலங்களில் மேலே சொன்ன நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிவிட்டால் போதும், சம்சாரிகளின் பாடும் கால்நடைகளின் பாடும் கவலையே இல்லை. அனைவர் வீடுகளிலும் தானிய மூட்டைகளும் பயறு வகைகளும் நிறைந்துவிடும்.

வயிற்றுக்கு உணவுப் பஞ்சமே கிடையாது.
கண்மாயும் ஊருணியும் நிரம்பிவிட்டால் அனைத்துக் கிணறுகளிலும் நீர் மட்டம் மேலேறித் தரைமட்டத்துக்கு வந்துவிடும். வெறும் கைகளால் தண்ணீரை எட்டித் தொட்டுவிடலாம். கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் பெருகிவிட்டால் எப்படி உணவுப் பஞ்சம் இல்லாமல் போகிறதோ, அதேபோல் வருடம் முழுமைக்கும் மீன் உணவுக்கும் பஞ்சமே இல்லை.

ஒரு சம்சாரியின் வீட்டில் விவசாயத்துக்குத் தேவையான கலப்பை, மேழி, கூனை, மண்வெட்டி, கடப்பாரைக் கம்பி இருப்பது போல், மீன் பிடிக் கருவிகளான தூண்டில், தெள்ளி, வட்டவலை, வீச்சுவலை, தூரி, பத்தல் முதலியன கண்டிப்பாக இருக்கும். ‘தெள்ளி’ என்பது கூஜா வடிவத்தில் பிரம்பால் பின்னப்பட்ட கூடு. அகப்படும் மீன்களை அதனுள் போட்டு நீரில் மிதக்கவிட்டு விட்டால், மீன்கள் சாகாமல் உயிருடன் இருக்கும். இதனுள் போட்ட மீன் தானாக வெளியே வர முடியாது.

‘தூரி’ என்பது வெள்ளத்துடன் வெள்ளமாக ஓடுகின்ற மீன்களைப் பிடிப்பதற்காகப் பிரம்பினால் செய்யப்பட்ட ஓர் அரிய கருவி. ‘பத்தல்’ என்பது வெள்ளத்தை எதிர்த்து நீந்தி ஏறி வருகின்ற மீன்களைப் பிடிக்கும் அற்புதமான மீன்பிடி கருவி. உருளையான மரக்கட்டையில் ஏராளமான துளைகள் இருக்கும். வட்டவலை தனி நபரும், வீச்சுவலை இருவர் சேர்ந்தும் மீன்பிடிக்க உதவுபவை.

மீன் பிடிப்பில் அற ஒழுங்கு
நிரம்பி வழியும் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன்களை யாருமே வியாபார நோக்கத்துக்காகப் பிடிப்பதில்லை என்பதுடன், தேவைக்கு அதிகமாகப் பிடித்து வீணாக்குவதும் இல்லை. சிறிய குஞ்சு மீன்கள் கிடைத்தால், அவற்றை அப்படியே தண்ணீரில் விட்டுவிடக் கூடிய அற ஒழுக்கம் கிராமத்து ஜனங்களிடம் இருந்தது.
நீர்நிலைகள் முற்றாக வற்றி, ஊர்சாற்றி மீன் பிடிப்பதை ‘கண்மாய் அழியப் போகிறது’ என்று குறிப்பிட்டு, எல்லா ஊர் ஜனங்களும் அன்று மீன்களைப் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தேவைக்கு அதிகமான மீன்களைச் சொந்த பந்தங்களுக்கெல்லாம் கொடுத்தது போக, களங்களில் வட்டவட்டமாய் வெயிலில் காய வைத்துக் கருவாடாகச் சேமித்து வைத்துக்கொள்வார்கள்.

அந்த நேரத்தில் ஊரைச் சுற்றியும் மீன்கள் காயும் காட்சி, கடற்கரை கிராமமோ என்று எண்ணத் தோன்றும்.
மீன் வகைகள் என்று எடுத்துக்கொண்டால் வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, விளிச்சிக் கெண்டை, அயிரை, நரிக் கெழுறு, மஞ்சக் கெழுறு, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று வகைவகையாய்க் குமிந்துவிடும்.

இவ்வளவு மீன் வளம் இருந்த மானாவாரி கிராம மக்கள், இன்றைக்குக் குளங்களில் மீன்களையே பார்க்க முடியவில்லை. அவர்கள் மீனுணவை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கரிசல் பிரதேச மக்களில் இந்தத் தலைமுறையினர் மேலே நான் சொன்ன மீன் இன வகைகளைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். மீன்பிடிக் கருவிகளையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்று குளங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரே மீன் வகை ‘ஜிலேபிக் கெண்டை’ அல்லது ‘டெவலப்மெண்ட் கெண்டை’. இந்த இரண்டும் ஒன்றே. தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 160 வகை மீன்களில் இது கிடையாது.

இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia). இது ஆப்பிரிக்க வகை மீன். 1952இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, 1960களில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியன் டெவலப்மெண்ட் ஆபிசர்களால் (பி.டி.ஓ.) கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
கரிசல் காட்டு சம்சாரிகள் வரிசையில் நின்று, இந்த மீன் குஞ்சுகளை வாங்கி வந்தார்கள்.

அதனுடைய உண்மையான பெயரான திலேபியா மருவி ஜிலேபிக் கெண்டை என்றும், டெவலப்மெண்ட் அதிகாரிகள் குஞ்சுகளைக் கொடுத்ததால் டெவலப்மெண்ட் கெண்டை என்றும் அழைக்கப்படுகிறது.
உள்ளூர் மீன்களின் எதிரி
இன்று கரிசல் பிரதேச நீர்நிலைகளில் இந்த மீனே ஆதிக்கம் செலுத்திவருகிறது.

மற்ற வகை பாரம்பரிய மீன்கள் காணாமல் போய்விட்டன. இந்தத் திலேபியா மீன் நம்முடைய பாரம்பரிய மீன்களுக்குப் பரம எதிரி என்பதையோ, உள்நாட்டு மீன் இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டது என்பதையோ யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை.
தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும், இந்தத் திலேபியா மீன் வகை அதில் வாழும். நம் மீன்கள் சாப்பிடும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடும்.

இது போக நம் இன மீன்களின் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதில் படு கில்லாடி இந்தத் திலேபியா. இனப்பெருக்கத்திலும் திலேபியாவை மிஞ்சிய மீன் இல்லை. பெற்றோர் அக்கறை அதிகம். தன்னுடைய மீன் குஞ்சுகளில் 70 முதல் 80 சதவீதத்தை இது காப்பாற்றி விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நம்முடைய இன மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மாதிரியான உணவை உண்ணும். சில மீன்கள் பூச்சி, புழுக்களைச் சாப்பிடும். சில அழுகிய சதைப் பகுதியைச் சாப்பிடும். ஆனால், இந்தத் திலேபியாவுக்கு உணவில் எந்த விதிவிலக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்பிடும்.
இதே நிலை நீடித்தால், கடைசியில் திலேபியா மட்டுமே மிஞ்சும். திலேபியாவை ஒரு பெரு நோய் தாக்கினால் நம் பகுதிகளில் மீன் இனமே ஒட்டுமொத்தமாக அழியும் பேராபத்தும் இருக்கிறது. வெளிநாட்டு வகைமைகள் நம் நாட்டுக்கு இறக்குமதியாகும்போது, நாம் பல விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

குறிப்பாக, நம்முடைய பாரம்பரியத்தின் மூலவேர்களை.
திலேபியா மாதிரியே இன்னொரு இறக்குமதியுடன், கரிசல் காட்டு சம்சாரிகள் இன்றைக்கு மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அதை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனுடைய பெயர் Prosofis Julifora. சத்தியமாக இது ஹாலிவுட் நடிகையின் பெயர் அல்ல. வேலி கருவேல மரம் அல்லது சீமைக் கருவேல மரம். அது பற்றி இன்னொரு சமயம் பேசுவோம்.
– சோ. தர்மன், எழுத்தாளர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.