நள்ளிரவு நேரம், காடாய் இருந்திருந்தால், இளகிய மனம் கொண்டவர்கள் இதைத் தொடர்ந்து படிக்க வேண்டாம்….

0 764

படித்ததில் வலித்தது

இந்த பதிவை முழுதாய் வாசிக்கும் அளவுக்கு தைரியம் எனக்கில்லை… அத்தனை உருக்கமான இந்த பதிவை படித்துவிட்டாவது திருந்தட்டும் மனித உருவில் நடமாடும் மிருகங்கள்…..

இளகிய மனம் கொண்டவர்கள் இதைத் தொடர்ந்து
படிக்க வேண்டாம்….

நள்ளிரவு நேரம், காடாய் இருந்திருந்தால்,
கோட்டானும் ஆந்தைகளும் போட்டியிட்டு
கத்தியிருக்கும் வேளை – அது
பாழும் நகரம் என்பதால்..
அவ்வப்போது கேட்கும் வாகன
இரைச்சலோடு நீண்டுகொண்டிருந்தது….

அந்த நிசப்தத்தை கிழித்தபடி ஒரு
பச்சிளங்குழந்தையின் அழுகையொலி
கேட்டது….. – அது
குப்பைத் தொட்டியில் குப்பையாய்
போடப்பட்ட குழந்தையின் கதறல் ஒலி…

அன்பென்னும் உணர்வேயில்லாத
அம்மா வெனும் பெண்ணினால்
அநாதையாக்கப்பட்ட ஓர்
அபலைக் குழந்தையின் மரண ஓலம்!!
தொடர்ந்து அந்த குழந்தையே பேசுகிறது….
கேட்போம் சற்றே மனதை திடப்படுத்திக்கொண்டு…

அம்மா…………..,

உனது கருப்பையில் இருக்கும்போது உணர்ந்த
அந்த கதகதப்பை உணரத் துடித்தது என் உடல்,
ஆனால் குளிரோ என்னை முள்ளாய்
குத்தியது உனது வேஷத்தனமான அன்பைப்போல,
பாவம் அந்த குப்பைத் தொட்டியும் மோசமாய்
அழுக்கேறிக் கிடந்தது உன் மனதைப்போலவே
உட்புறத்தில் முட்களோடு…

புரண்டுபடுக்ககூட தெம்பில்லாமல்,
கதறியழுதபடியே கிடந்தேன் – அந்த
சாலையோரக் குப்பைத்தொட்டியில்,
ஒரு ராஜாவைப்போல,

ஆம் அம்மா , புழுக்களும் வண்டுகளும்
சுற்றி நெளிந்தபடி கிடக்க ரணத்துடன்
பரிபாலனம் செய்யும் குட்டி
ராஜாவைப்போல் கிடந்தேன்…..

அங்கே நான் மட்டுமே பாவப்பட்ட மனித
இனத்தின் பிரதிநிதியாய் இருந்ததால்
நானும் ஒரு ராஜாதானே!

நான் முடிந்தவரை கத்திப் பார்த்தேன்,
மனித ரூபத்தில் இருக்கும் எந்த விலங்கும்
என்னை சீண்டவில்லை……

ஒருகால் நொண்டியான
நாயண்ணன் மட்டும் வந்தான்,
இரையைக்கண்ட ஆசையில் கண்கள் மின்ன!

அம்மா, உன்னைக் தீண்டும்போது – உனது
காமுக காதலன் அதுதான் என்னை வித்திட்ட
அந்த கயவன் எவ்வளவு
மகிழ்ந்திருப்பானென்று என்னால் யூகிக்க முடிந்தது,
அந்த கிழட்டு நாயின் கொடூர கண்களைப் பார்த்ததும்…….

அப்போதும், வழியறியாது உன்பெயரைத்தான்
கூவி அழுதேன் அம்மா!
எனக்கு தெரிந்த ஒரே மொழியும் அதுதானே!

இரக்கமற்ற உன் இதயத்திற்கு செவிகளும்
இல்லையென்பதை உணர எனக்கும் அதிக
நேரம்பிடித்தது ஒருவேளை உன்னைப்போல்
நானும் மக்காய்ப் பிறந்துவிட்டேனோ?

எனக்கு பயம் பீடித்தது சுற்றிலும் இருட்டு,
கை கால்களை அசைக்கத் தெரிந்த என்னால்
என்ன செய்துவிடமுடியும் என்று அறிந்து கொண்ட
அந்த நாய் என்னைச் சுற்றி சுற்றி வந்தது
இரையைக் கண்ட பெருமிதத்தோடு….

கோழையுடன் கூடிய அந்த நாயின் வாய்துர்நாற்றம் தாங்கமுடியாததாய்இருந்தது அம்மா,
அது உனது அழுக்கேறிய மனதைவிடவும்
கொடியதாய் இல்லையென்றே தோன்றிய போதும்
இதுவும் கொடுமையானதாகவே இருந்தது!

திடீரென உப்புத்தாளை உரசியது போல் எனது
தேகம் எரிய ஆரம்பித்தது,
அந்த நாய் தனது சொரசொரப்பான
நாக்கால் தடவ ஆரம்பித்தது போலும்..

ஆனாலும் அம்மா,
அதிலும் ஒருசுகம் இருக்கத்தான் செய்தது குளிருக்கு
நல்ல இதமான வென்னீர் ஒத்தடம்போல……

நான் கதறி அழுது அழுது
ஓய்ந்து விட்டேனென்றே நினைத்தேன் அம்மா,
அந்த சொறிநாய் தனது கூர்ப்பல்லால் – எனது
மென்தேகம் தொடும்வரை…

எனது உடம்பில் அதன் கடித்தடம் விழ
ஆரம்பித்தது நான் உயிர்வலியில் வீறிட
ஆரம்பித்தேன் அடிவயிற்றில் இருந்து…,
பசியால் அழுது துவண்ட வயிறெனும் போதும்,
சத்தம் நன்றாகவே வந்தது இதுதான் உயிர்வலியோ..?

நிச்சயமாய் என்னை எந்த அளவுக்கு
வயிறுவலித்துப் பெற்றாயோ தெரியவில்லை,
அதற்கு சற்றும் குறையாத ரணவேதனை நான்
அனுபவித்தேன்……….!

இப்போது ஓர் சப்தம் ஆபத்பாந்தவன் யாரோ
வந்து விட்டடாரென்றே நினைத்திருந்தேன்,
உன் கருப்பையில் இருந்தபோது உன்னை
முட்டாள்தனமாய் நம்பியது போலவே!

ஆனால் இதிலும் பரிதாபமாக தோற்றேன்,
அது இன்னொரு வெறிபிடித்த நாயாம்..!
கடித்தடத்தில் வழியும் ரத்ததுடன் மரண அவஸ்தையில்
கத்தும் தொண்டையோடு
நடப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு இப்போது புதிதாய் வந்த நாயின்மீது
கடுங்கோபம் வந்தது.
விட்டிருந்தால் உடனடியாய் கடித்து கொன்றிருக்குமே
நான் வலியுற வழியில்லாது போயிருக்குமேயென்று..!

ஆம் எனக்கு மட்டும் சக்தியிருந்தால்
நிச்சயமாய் முதல் நாய்க்கு ஆதரவாயிருந்திருப்பேன்.
எனக்கு விடுதலை வாங்கித் தரவந்த தேவனல்லவா அவன்.

காலபைரவர்களின் கால்மணி நேர
கடிச்சண்டையின் முடிவில் இடையில்
வந்தவன் இடையிலேயே போய்விட்டான்…..

ஆம் எனது உயிர்குடிக்கவந்த முதல்வன் அவனை
தோற்கடித்து அனுப்பிவிட்டான்..
எனது மானசீக ஆதரவுக்கு செவிசாய்த்த
ஆண்டவனுக்கு நன்றி சொல்லியபடியே அந்த
கருப்பனை உற்றுப் பார்த்தேன் – என்னை
சீக்கிரமாய் தின்றுவிடடா என்ற வேண்டுதல்
கண்ணில் தொக்கி நிற்க….!

கருப்பன் குசும்புக்காரன் போலும் – மீண்டும்
தனது கிரிவலத்தை ஆரம்பித்தான் – எனக்கே
கொஞ்சம் சுவாரஸியமாய்த்தான்
இருந்திருக்கும் போல நிச்சயமாய் அந்த
சதைபிய்யும் உயிர்வலிமட்டும் இல்லாது
இருந்தால் கைகொட்டி ரசித்திருப்பேன்
போலும் ஆனாலும் வலி உண்மைதானே!

அந்த நாய்க்கு என் இதயத்துடிப்பு
பிடித்திருந்ததோ அல்லது அந்த இடத்தின்
மாமிசம் பிடித்ததோ தெரியவில்லை அதன்
பற்கள் பட்டு என் நெஞ்செலும்பில் ஒட்டியிருக்கும்
சதை பிய்ந்து வரத்துவங்கியது….

சத்தியமாய் அம்மா நான் அப்போது நினைத்தது,
நெஞ்சில் எலும்பில்லாது போயிருந்தால்,
இந்த நாய்க்கு எவ்வளவு எளிதாய் இருந்திருக்கும்
இந்த பச்சிளம் இதயத்தை ருசிபார்க்க!

அந்தோ பரிதாபம் அந்த நாய் சற்றே
சோம்பேறி போலும் வயிற்றுப்பகுதியை
கடிக்க ஆரம்பித்தது…..

இரத்தம் ஒழுகும் வாயுடன் நின்ற அந்த நாயை
பார்க்கும்போழுது எனக்கு கோபமே வரவில்லை,
ஏனென்றால் நிச்சயமா நம்பிக்கைத் துரோகம்
செய்யப்போவதில்லை உன்னைப்போல்,
நிச்சயமாய் என்னைக் கொன்று விடுமல்லவா!!!

வெறுப்பாகவோ அல்லது உன் தேகத்தின்
நலனுக்காகவோ நீ கடைசியாய் ஊட்டிய
அந்தப்பால் வெளியேறியதைக் கண்ட
மகிழ்ச்சியுடன் கண்களை மூடிக்கொண்டேன்….
.
நாய் எனது சதையை மெல்லும்
வேலையை மெல்லத் தொடங்கட்டும்,
நான் உன்னிடம்
கேட்க வேண்டியதை கேட்டுவிடுகிறேன்?

*உனது உடலிச்சைக்கு உன்னைப்
பலிகொடுத்தாய் சரி,
நான் என்ற இந்த சதைப் பிண்டம்
வளராமலாவது தடுத்திருக்கலாமல்லவா?

*அது அந்த ஆணென்ற மிருகத்தின்
கட்டாயமாய்க்கூட இருக்கலாம்,
உருவாகித் தொலைத்து விட்டேன்,
என்னை கருவிலேனும் அழித்திருக்கலாமே அம்மா,
நான் இவ்வளவு வேதனை அனுபவிக்க வழியில்லாது
உருவில்லாது கரைந்திருப்பேனே!

*அதுவும் உன் உடல்நலம் கருதி – முயற்சி
எடுக்காததாய் எண்ணி மன்னித்து விடுகிறேன்.
*என்னைப் பெற்றாயே வலித்துப் பெற்றாயோ
வழியில்லாது பெற்றாயோ இரண்டுவிரல்
போதுமே அம்மா எனது மூச்சை நிறுத்த,
இரண்டு நிமிடங்கள் கூடத்தேவைப்பட்டிருக்காதே!

*என்மீது அவ்வளவு பாசமென்று
சொல்லிவிடாதே, சிரித்து விடப்போகிறேன்!
*சட்டத்திற்குப் பயந்து விட்டாயென்றே
அதையும் புறந்தள்ளுவோம்,
*பிள்ளைப்பேறில்லாதவர்க்கு என்னைக்
கொடுத்திருக்கலாமே அம்மா,
அவர்கள் வளர்த்திருப்பார்களே..!

அந்தளவுக்கு கூடவா பொறுப்பில்லாதவளாய்
இருப்பாய் நீ?
இங்கே எனது உடல் விறைக்கத் துவங்குகிறது…
ஆம் அந்த நாய் தனது வேட்டையை
முடிக்கும் தருணம் வந்துவிட்டது போலும்…!

எனது கழுத்துப் பகுதியில் வரும்
மூச்சைக் கண்டுபிடித்து கடிக்க
வாயைத் திறந்தபடி வந்துவிட்டான்.
கடைசியாய் உன்னிடம் சொல்ல ஒன்று
என்னிடமுள்ளது…,

“அம்மா அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தால்,
உன்ன என்மகளாய்ப் பெற்று,
என் கண்ணுக்குள் வைத்து உன்னைப்
பாதுகாப்பேன் அம்மா!
உன்னை உயிராய் வளர்ப்பேன்.
தூசு,துரும்பு அண்டாமல் பாதுகாத்து
உன்னை நல்வழியில்
வளர்த்துவேன் எனக் கூறிக்கொண்டே…”

மனிதமென்பதே இல்லாத இம்மண்ணில்
இருந்து விடைபெறுகிறேன் …

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.