“தீராத வலியும்,வேதனையும்!” எப்படி புரியும் உங்களுக்கு..? அந்த இரவும் பகலும் நீள்கிறது

0 275

சின்ன தம்பி…. காடுகளின் பேருயிரான யானைகளின் வாழ்வு எவ்வளவு பரிதாபத்திற்குரியதாகவும், போராட்டத்திற்குரியதாகவும் மாறியிருக்கிறது என்பதற்கு நம் கண்முன்னே… நிறுத்தப்பட்டிருக்கும் துயர்மிகுந்த சாட்சி. மயக்க ஊசியால் அதன் நினைவை சிதைத்து, பொக்லைனால் தந்தங்களை உடைத்து, கும்கியால் உடலை கிழித்து ஏதோ… அடிமைகளை வதைத்து நாடு கடத்துவதைப் போல, அந்த கம்பீரமான காட்டு யானையை அதன் வாழ்விடத்திலிருந்து அகற்றிய காட்சி, யானைகளுக்கு எதிராக தொடரும் அரக்கத்தனத்தின் நீட்சியாக ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.

அத்தனை கொடூர வதைகளுக்குப் பிறகும், அந்த யானை தன் வாழ்விடம் தேடி தவிப்போடு அலைகிறது. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி வரும் செய்திகள் பதைபதைக்க வைக்கும் வேளையில் இதே போன்ற முயற்சிக்கு சில ஆண்டுக்கு முன் பரிதாபமாக பலியான மதுக்கரை மகாராஜா நினைவில் வந்து அச்சுறுத்துகிறது. சின்ன தம்பியை அதன் போக்கில் விட்டால் மனிதர்களுக்கு ஆபத்து என்று பதறுகிறார்கள் சிலர். சின்ன தம்பியை அதன் இடத்திலேயே விட்டுவிடுங்கள் என்று கதறுகிறார்கள் சிலர். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணர்வுப் போராட்டைத்தை மூட்டியிருக்கிறது சின்ன தம்பி. ஏன் இந்த அவலம்.? இது சின்ன தம்பிக்கு மட்டுமான பிரச்னையா? இல்லை சின்ன தம்பியால் மட்டுமே வந்த பிரச்னையா?

சூழலியலாளர் சலீம் அலி இவ்வாறு எழுதுகிறார்… ‘மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், ‘ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், ‘யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களோ, பயிர் வயல்களில் நுழைந்துவிட்ட யானைகளை விரட்டியடிக்கிறார்கள். பயிர்கள் நாசமான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வேதனையில் யானைகள் மீது சினம்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. யானைகள் ஒன்றும் பொழுதுபோகாமல் ஊருக்குள் ‘வாக்கிங்’ வரவில்லை.

அவற்றுக்கு உணவு வேண்டும். அத்தனை பெரிய உடலின் முழுமையான இயக்கங்களுக்கு, ஒரு யானைக்கு நாளன்றுக்கு சுமார் 200 கிலோ உணவு தேவைப்படும். அந்த அளவு உணவு காட்டில் கிடைக்காதபோது, அவை நகர்ந்து வேறு இடங்களுக்கு வருகின்றன. இந்த எளிய உண்மையை நாம் தொடர்ந்து மறுத்துவருகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள்.

பொதுமக்கள் காடுகளுக்குள் நுழைவது பல அடுக்குகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. துப்பாக்கி உரிமங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழகக் காடுகளில் ‘வேட்டை’ என்பது கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தில் வனத்துறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விலங்குகளின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருகவில்லை. ஒரு யானையின் மேய்ச்சலுக்குத் தோராயமாக 2 ஏக்கர் தேவை என்று வைத்துக்கொள்வோம். புதிதாக 300 யானைகள் உருவாகியுள்ளன என்றால், 600 ஏக்கர் தேவை. ஆனால், நம்மிடம் உள்ள காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால், பல இடங்களில் தேயிலை எஸ்டேட், ரியல் எஸ்டேட் என்று அவை அழிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், குறைந்த மேய்ச்சல் நிலத்தை அதிக யானைகள் பங்கிட்டுக்கொள்ளும்போது இயல்பாகவே உணவுப் போட்டியும் பற்றாக்குறையும் உருவாகும். இதனால் காட்டில் உணவு உள்ள மற்ற இடங்களைத் தேடி யானைகள் நகர்ந்து செல்கின்றன. அப்படித்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்கும், பயிர் வயல்களுக்கும் யானைகள் வருகின்றன. அப்படி அவை வருவது, கால் போன போக்கில் வருவது அல்ல.
மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் ஒரு யானை நள்ளிரவில் வந்து நின்றது. விசாரித்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது யானை வழித்தடமாக இருந்துள்ளது. யானைகளின் ஜீன்களில், அதன் பாரம்பரிய வழித்தடங்களின் பாதைகள் பொதிந்துள்ளன. பல தலைமுறைகளுக்கு முந்தைய வழித்தடத்தைக்கூட ஒரு யானையால் கண்டடைய முடியும். ஆனால், அந்த வழித்தடங்கள் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குள் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்களைக் கட்டி யானைகளின் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் குழம்பிப்போகும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவதும் நடக்கிறது.

எப்படி இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது… யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது என்றால் ஒன்று… அதன் வழித்தடம் மறிக்கப்பட்டதால் வழிமாறி வந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அதன் பாரம்பரிய வழித்தடத்தில் வருகிறது என்று பொருள். அவற்றை அப்படியே விட்டால், அதன்போக்கில் கடந்துசென்று, ஏதோ ஓர் இடத்தில் காட்டுடன் இணைந்துவிடும். மாறாக விரட்டிவிடுகிறேன் என்று வெடி வெடித்து விரட்டினால், வழித்தடம் குழம்பி மேற்கொண்டு அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும்.

இன்று தமிழ்நாட்டில் சுமார் 3,000 யானைகளும், கேரளாவில் சுமார் 2,000 யானைகளும், கர்நாடகாவில் சுமார் 1,500 யானைகளும் உள்ளன. இவை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உணவுக் கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன; நகர வேண்டும். அதுதான் ஆரோக்கியமான காட்டுக்கு அழகு. இதற்கு இடையூறு செய்யும் வன ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்புக்கு இதுவே முதல்படி!”

இந்த முதல்படியில் அடியை எடுத்து வைக்காமல் சின்ன தம்பியை கும்கியாக மாற்றுவதாலோ… கொடூரமான முறையில் காட்டுக்குள் விரட்டுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது. ஏனென்றால், இது ஒரே ஒரு சின்ன தம்பி யானையின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த யானைகளின் தீராத வலியும் வேதனையும்; கேள்விக்குள்ளாகியிருக்கும் அவற்றின் எதிர்கால வாழ்வும்!

பதிவு:புன்னியமூர்த்தி

You might also like

Leave A Reply

Your email address will not be published.