தாத்தா பாட்டிகளுடன் சிறுவயதில் வாழ்ந்த நபரா நீங்கள் இவையெல்லாம் நினைவுள்ளதா..?

0 350

சிறுவயது நினைவுகளை அசைபோடுகையில் ஓடியாடி விளையாடியது, ஆடிப்பாடித் திரிந்தது எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆடிப் பாடிய பாடல்களுள் பெரும்பாலானவை தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த நாட்டுப்புறப் பாடல்களையே. சிறு வயதில் பாடிய பாடல்களை இன்று நினைவு படுத்திப் பார்க்கையில் சில பாடல்களே நினைவில் நிற்கின்றன.

என் தாத்தா நாடகங்களில் நடித்த அனுபவங்களையும் அதில் வரும் பாடல்களையும் பாடிக் காட்டிய நாட்களில் அதை அப்பொழுது கேட்டு சிரித்து விட்டுப்போனது தான் மிச்சம். சிறு வயதில் அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை.

என் தாத்தாவும் ஆத்தாவும் (பாட்டி) கிண்டலும் கேலியுமாகப் பாடிய பாடல்களில் முழுமையாக மண் வாசனை கலந்திருந்தது அன்று புரியவில்லை. வெளியூர்களில் பணியாற்றும் வேளையில் நம் மண்ணை நினைக்கும் பொழுது அவையாவும் மனதில் மின்னலாக வந்து செல்கின்றன. இன்று, அவர்கள் பாடிய பாடல்களில் நினைவில் நிற்பவை சொற்பமே!!

ஞாயிற்றுக் கெழமை திருடன் வந்தான்
திங்கட் கெழமை திருடிப் போனான்
செவ்வாய்க் கெழமை செயிலுக்குப் போனான்
புதன் கெழமை புத்தி வந்தது
வியாழக் கெழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கெழமை வீட்டிற்கு வந்தான்
சனிக் கெழமை சாப்புட்டுப் படுத்தான்.

மேலே குறிப்பிட்ட பாடல் எனக்கு கிழமைகளைச் சொல்லிக் கொடுக்கையில் என் பாட்டி எனக்குப் பாடிய பாடல். இன்னும் சின்ன வயதில் பாட்டி அவரது காலில் அமர வைத்து காலை மேலும் கீழுமாக அசைத்த படி பாடிய பாடல்..

குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சி குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா

பையன் வந்தாப் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சுருக்குப் பையில போட்டுக்கோ..

பந்தல்ல பாகற்காய் இருக்கற வீடுகளே இல்லாத இன்றைய சூழல்ல இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் எங்கே பாடுவது என்று தோன்றினாலும் அவரவர்க்கு நினைவில் வரும் பாடல்களே பதிவு செய்து வைப்பது, நம் முன்னோரின் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவும்.

நெருங்கிய உறவினர்கள் பலரும் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றிவரும் வேளையில் வருடத்திற்கு ஒரு முறையோ இரு வருடத்திற்கு ஒரு முறையோ அனைவரும் ஒன்று கூடுவதுண்டு. அப்படிக் கூடும் பொழுது பெரியவர்களை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்படி வரும் பாடல்களில் இருக்கும் நையாண்டிக்குத் தனி சுவை தான். என் மாமா ஒருவர் இது போன்ற பாடல்களைப் பாடுவார். அவரிடம் அண்மையில் “உங்களுடைய பாடல்களேல்லாம் நினைவில் உள்ளனவா?” என்று கேட்டதற்கு அவரது நினைவில் இருந்து வந்தவை சில பாடல்கள் மட்டுமே.

மாமரத்துக்கும் பூமரத்துக்கும் மயிலுக்கண்ணாடி
இந்த மங்கம்மா போடறது ஸ்டைலுக் கண்ணாடி
பாப்பாத்தா காப்பித் தண்ணி பஸ்ட் க்ளாஸு
போத்தனூரு வாழைப்பழம் புட்டு விளாசு

*

பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
போயிலை காம்பு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
தங்க நகை வேணுமா
காது நல்லா கேக்குது
மெதுவா சொல்லடா பேராண்டி

என்ன தான் சினிமாப் பாடல்கள் வந்துவிட்டாலும் மண் வாசனை வீசும் பாடல்களுக்குத் தனி சுவை தான். நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்!! சுவையான பாடல்கள் பலதும் வெளியே வரலாம்.

*

விளையாட்டுப் பருவத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கு வாய்ப்பாட்டோ, பாடலோ பாடியதை நினைத்தால் நம் வாழ்வியலில் நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவிற்கு ஒன்று கலந்த ஒன்று என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கோலி குண்டு விளையாடும் பொழுது.. குழியில் குண்டைப் போட்டால் பத்து பாயிண்ட், மற்றவரின் குண்டை அடித்தால் பத்து பாயிண்ட் என்று ஒவ்வொரு பாயிண்டிற்கு ஒரு வரியுண்டு. இன்று நினைவில் இருப்பவை இவை மட்டுமே..

ஐயப்பன் சோலை
ஆறுமுக தகுடி
ஏழுவா லிங்கம்
எச்சுமுச்சுக் கோட்டை
தொம்பா பேட்டை
தேசிங்கு ராஜா.

அது போல நொண்டி விளையாடுவதற்கென்று சில பாடல்கள், ஓடி விளையாடுவதற்கு, ஒளிஞ்சு விளையாடுவதற்கு என்று எதற்கெடுத்தாலும் பாடல்கள் தான். இன்று இது போன்ற பாடல்களை பாடுபவரும் இல்லை. பாடல்களை நினைவில் வைத்திருப்பவரும் இல்லை. வேறென்ன பாடல்கள் என்று யோசிக்கும் பொழுது

மலை மேல தீப்பிடிக்குது
பிள்ளைகளா ஓடுங்க..
மலை மேல தீப்பிடிக்குது
பிள்ளைகளா ஓடுங்க..

என்று மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்து ஓடிய நாட்கள் நினைவில் வருகிறது. உங்கள் நினைவில் உள்ள பாடல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.