தமிழர் அறியவேண்டிய தலைவர் – மனோன்மணீயம் சுந்தரனார்

0 259

நீராறும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் எனத்துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ் உலகிற்கு தந்தவர். இப்பாடல் இடம்பெற்ற மனோன்மணீயம் என்ற நாடகத்தின் பெயரையே இவர்தம் பெயரான எம்.ஏ.சுந்தரம்பிள்ளை என்ற பெயருடன் இணைத்து மனோன்மணீயம் சுந்தரனார் என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

“எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”

இவைதான் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்ட வரிகள்.

அதாவது பல்வேறு உயிரினங்களையும் உலகங்களையும் படைத்த பரம்பொருள் போல

கன்னடத்தையும் தெலுங்கையும் மலையாளத்தையும் துளுவையும் படைத்துவிட்டு ஆரியம் போல வழக்கொழிந்து போகாமல் நிலைத்திருக்கும் தமிழை வாழ்த்துகிறார் சுந்தரனார்.

சமஸ்கிருதத்தையும் திராவிடத்தையும் விட தமிழை உயர்ந்ததாக கடவுளாக உயர்த்திக் கூறும் இவ்வரிகள் ஏன் நீக்கப்பட்டன?

தமிழன் தமிழகத்தை ஆளவில்லை,
ஆள்பவனெல்லாம் வந்தேறி,
அதனால் நீக்கப்பட்டன.

யார் இந்த சுந்தரனார்?

இதோ அறிந்துகொள்ள முற்படுவோம்.

  • திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆலப்புழை எனும் ஊரில் 1855,ஏப்ரல் மாதம் 05ஆம் நாள் பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் என்னும் வாழ்க்கை இணையருக்கு மகனாக பிறந்தார்.
  • ஆலப்புழையில் தொடக்கக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயின்ற பின் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார். பின் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தமிழ்ல் இளங்கலை பயின்றார். இவரது அறிவாற்றலைக் கண்ட கல்லூரி முதல்வர் இவரை அழைத்து இக்கல்லுரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே முதுகலைப் பயில அனுமதியளித்தார்.
  • அப்பகுதியில் முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதினால் அனைவரும் இவரது பெயருடன் எம்.ஏ. என்ற அடைமொழியை சேர்த்தே அழைத்தனர்.
  • பின் நெல்லை கல்லூரில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
  • வரலாற்றுப் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டி வரலாற்று ஆய்வுகளின் மீது இவருக்கு நாட்டம் ஏற்பட அதன்பின் கல்வெட்டறிஞர் கோபிநாத ராவுடன் இணைந்து கல்வெட்டுகளைத் தேடிச்சென்றார். அதன் விளைவாகத் திருவாங்கூர் வரலாற்றையும் எழுதினார்.
  • தமிழ் வரலாற்றை ஆய்வு செய்த மனோன்மணீயம் சுந்தரனார், இத்தனை பாரம்பரியமிக்க தமிழ் மொழியில் ஆங்கில மொழிக்கு உள்ளது போல நாடகமாக்கங்கள் இல்லையே என வருத்தப்பட்டுள்ளார்.
  • இக்குறையை நீக்க அவரே நாடகம் ஒன்றினை எழுத முற்பட்டு, தனது தமிழ்ப்பற்று, வரலாற்று ஆர்வம், தத்துவ நாட்டம் இவையனைத்தையும் இணைத்து மனோன்மணீயம் என்ற நாடகத்தினை எழுதினர்.
  • தமிழின் மீதான இவரது பற்று இந்நூலின் முதல் பாடலான நீராறும் கடலுடுத்த எனத் துவங்கும் பாடலில் வெளிப்பட்டது.
  • 1970இல் இப்பாடலினை தமிழகத்தின் பொது வாழ்த்துப் பாடலாக தமிழக அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளபட்டது.
  • பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாப்பதும், புதிய துறைகளில் நூல்கள் இயற்றப்பட வேண்டியதும் தமிழ் மொழிக்கு தமிழர் ஆர்வலர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுவில் இருந்து தமிழ் வரலாறு, தத்துவம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கல்வித் திட்டங்களை வகுத்துள்ளார்.
  • சாத்திரசங்கிரகம், சிவகாமியின் சபதம், ஒரு நற்றாயின் புலம்பல் போன்ற நூல்களையும், திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், திருஞான சம்பந்தர் கால ஆராய்ச்சி போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழின் வளர்ச்சிக்கு தனது அளப்பரிய பங்கினை ஆற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் 1897 ஏப்ரல் 26 அன்று காலமானார். அவர் மறைவினும் அவரது தமிழ் தொண்டானது தமிழர் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.