தமிழரின் சிறு தானிய உணவு வகைகள் ..?

0 287

மூத்தக்குடியாம் தமிழ்க்குடி நோய் நொடியற்ற குடியாக இருக்கவேண்டும். உணவிகளில் சிறு தானியங்களை வைத்து பலவிதமாக சமைக்கும் குறிப்புகளை கீழே தொகுத்துள்ளேன். அரிசி , கோதுமை மட்டுமே சேர்ப்பதை தவிர்த்து, சிறு தானியங்களையும் பாரம்பரியமிக்க அரிசி வகைகளையும் உண்டு நோயற்ற வாழ்வை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்


இந்த பதிவை இரண்டுமுறை பதிவிடத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்தனர் ஆனால் எத்தனை தாய்மார்கள் / மனைவிமார்கள் தமிழரின் சிறுதானிய உணவை சமைத்து குடும்ப ஆரோகியத்தை பேணுகின்றனர் என்று தெரியவில்லை. ஏன் பெண்கள் தான் சமைக்க வேண்டுமா என கேட்பது புரிகிறது. பெண்களுக்கு இருக்கும் கைப்பக்குவம் ஆண்களுக்கு இருப்பதில்லை…எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது… ஈ…ஈ….

சரி கீழே புதிய வகை சிறு தானிய உணவுகளை, பானகங்களை பார்ப்போம். அதற்கும் முன் தலைவர்.வே.பிரபாகரனை பற்றி ஒரு சுவாரசிய செய்தி……..

தமிழன தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் போராளிகளுக்கு தரும் உணவில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். கடைநிலை போராளிகளிற்கும் போதுமான கேலோரியுடன் கூடிய உணவு கிடைக்கிறது என்பதை உறுதி செய்த பின்னர்தான் அவரது உணவிற்கான ஒதுக்கீடுகளை செய்யுமாறு நிதித்துறையின் வழங்கல் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி தலைவர் தன்னுடன் உள்ளவர்கள் அனைவரையும் விதவிதமான உணவை சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர். சிலசமயங்களில் போராளிகளிற்கு தலைவர் பிரபாகரனே வித்தியாசமான உணவு சமைத்து வழங்குவார். அவர் சமையல் செய்தால் போராளிகள் அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள் ஏன் என்றால் அவ்வளவு ருசியாக சமைப்பார்.

ஒருநாள் கறி சரியில்லையாம். தலைவரின் வெளிவட்ட பாதுகாப்பு முகாம் அது. ‘இப்படியெல்லாம் சாப்பிட முடியாது. அண்ணை வைக்கிற கறி மாதிரி இருக்க வேண்டும்’ என போராளிகள் கறித்தாச்சியை கவிழ்த்து ஊற்றிவிட்டார்கள்.

இது சர்ச்சையாகி,விடயம் தலைவர் வரை உடனடியாக சென்றுவிட்டது. அவர் உடனடியாக அங்கு சென்று, முதலில் போராளிகளை கண்டித்திருக்கிறார். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் நடக்கக்கூடாதென கண்டித்தவர், பொறுப்பாளரையும் கண்டித்திருக்கிறார். நன்றாக சமைத்து கொடுக்க வேண்டுமென அவருக்கு கூறிவிட்டு, அன்றுதலைவரின் தலைமையிலேயே கறி வைக்கப்பட்டது.

“இதுக்காக மூன்று நேரமும் நான்தான் வந்து கறி வைக்க வேணுமென்டு அடம்பிடிச்சு என்னை சமையல்காரனாக்கிப் டபோடாதையுங்கோ” என கூறியதும் அனைவரும் உரத்த சிரித்துவிட்டனர்.

தலைவர் எப்படி போராளிகள் மன வலிமையுடன் உடல் வலிமையில் அதிகம் கவனம் செலுத்தினாரோ அதே போல் ஒவ்வோர் தமிழரும் தங்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆரோகியத்தை பேணவேண்டும்.

பாகம் -2 உணவு வகைகளை பார்ப்போம்:

1) கர்ப்பிணிகளுக்கு இஞ்சி பானகம் :

தேவையானவை:
துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு – தலா 2 தேக்கரண்டி, வெல்லம் – ஒரு தேக்கரண்டி அல்லது வெல்லம் / கருப்பட்டி – 2 தேக்கரண்டி, உப்பு – அரை சிட்டிகை, நீர் – 250 மி.லி.

செய்முறை:
துருவிய இஞ்சியை நீரில் நன்றாகக் கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன் வெல்லம் / கருப்பட்டி சேர்த்து வடிகட்டவும். இதில் எலுமிச்சை சாறு, உப்பு, தேவையான அளவு சுத்தமான தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்துவது நல்லது.

நன்மைகள்:
மசக்கை நேரத்துக்கு உகந்த பானம். பசியைத் தூண்டும், நாக்குக்கு ருசியைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும்.

2) கர்ப்பிணிகளுக்கு முள்ளங்கி சோள சப்பாத்தி :

தேவையானவை:
முள்ளங்கி – 1, சோள மற்றும் கோதுமை மாவு – முக்கால் கிண்ணம், சோயா மாவு – 2 தேக்கரண்டி, மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு, கலப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். கலப்பு எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். இதற்கு கலவைக் காய் குழம்பு ருசியாக இருக்கும்.

நன்மைகள்:
முள்ளங்கியில் இரும்பு சத்து சத்து, கோலின் எனப்படும் வைட்டமின் அதிகம் உள்ளது. கோலின், சிசுவின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. சோயா மாவு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். கோதுமை மாவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன.

3) கேழ்வரகு வேர்க்கடலை அல்வா :

100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கிண்ணம் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ வெல்லம் / கருப்பட்டி , கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்

நார்ச்சத்து, இரும்புச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்தசோகையைத் தடுக்கும்.

4) சாமை மாம்பழக் கேசரி :
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு, நெய்-2 மேசைக் கரண்டி.

செய்முறை:
ஒரு கிண்ணம் சாமை அரிசியுடன் 3 கிண்ணம் நீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லம் / கருப்பட்டி சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். பாதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். மீதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, அலங்கரித்துப் பரிமாறவும்.

5) கேழ்வரகு இனிப்பு அடை :
தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம், வெல்லம் – முக்கால் கிண்ணம், தேங்காய் துருவல் – கால் கிண்ணம், ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 மேசைக் கரண்டி, நெய் – தேவையான அளவு.

செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

6) கேழ்வரகு குலுக்கு ரொட்டி :
தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம், பச்சரிசி மாவு – 2 மேசைக் கரண்டி, பொடித்த வெல்லம் – அரை கிண்ணம், வறுத்த வேர்க்கடலை – 2 மேசைக் கரண்டி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
கேழ்வரகு மாவை இளம்பதமாக வறுத்து..பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.