தண்ணீர் இருந்தும் தாகம் தணியவில்லை..! தற்கொலைகள் மட்டுமே அரங்கேறுகிறது

0 267

மதுவினால் தற்கொலை செய்த குடிகார தந்தையின் மகன் இதுகுறித்து நமது வாசகர் சுஜாதா ஜெயராமன் எழுதியுள்ள கவிதை.

சிறுவனே பொருமுகின்றதடா மனம் !
குடிக்கும் தந்தை உன் உயிரையும் குடித்தான் !
குடித்து விட்டு அவன் அடிக்கும் அடி பொறுக்காமல்
கயிற்றில் துடித்து உயிர் விட்டாயா கண்ணா !
காசு தராமல் தாயையும் உன்னையும் தவிக்க விட்டானா !
ஆசைப்பட்ட வாழ்க்கையை குடியால் நாசமாக்கி விட்டானா !
குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல்
உன் தாயின் உழைப்பில் வந்த காசையும் திருடி சென்று
போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து
தாயையே போட்டு போட்டு உதைத்தானா !
கதறிய தாயை கைகால் மிதித்து அவள் தலைமயிர் பற்றி இழுத்து
அவள் தாயையும் உன் தாயையும் கேடு கேட்ட சொற்களால்
தினம் தினம் காது கூசும் படி வசைபாடினானா !
படித்து மனனம் செய்யும் வேளையில் பக்கத்திலே உட்கார்ந்து
உன் சந்தேகம் தீர்க்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய தகப்பன்
உன் பிறப்பையே சந்தேகப்படுத்தி உன்னை வெறுப்பின் கோடிக்கு
உதைத்து தள்ளினானா உன் குடிகார தகப்பன் !
நாறி போன உன் தகப்பனின் குடி பழக்கத்தால்
ஒரு சுற்றமும் நட்பும் வீட்டு வாசல் மிதிக்காமல் போன விரக்தியா !
குடிபோதையில் குடும்ப போதையும் சேர்த்து
உன் அன்பு சகோதரியின் கையையே சேர்த்து இழுத்து
நடத்தையில் மிருகத்தையே கேவலப்படுத்தினானா !
இத்தனை கொடுமையும் ஈரெட்டு வயதுக்குள்ளே
நித்தம் நித்தம் சகிக்க முடியாமல்
வாழ்க்கையும் வேண்டாம் உயிரும் வேண்டாம் என்று
மொத்தமாய் உன்னை கொன்று போட்டு விட்டதா !
எனக்கு கொள்ளியும் போட வேண்டாம்
காரியமும் செய்ய வேண்டாம் என்று
தகப்பனுக்கு போட்ட உன் கடைசி கட்டளையின் வரிகளால்
தகப்பனால் நீ பட்ட வலி உணர முடிகிறது !
ஆனால் அவசரப்பட்டு விட்டாயே கண்ணா !
நீ தலையெடுத்து தாயையும் தங்கையையும் காப்பாய் என
கனவு கண்ட உன் குடும்பத்தின் ஆசைக்கு
ஒரேயடியாய் கொள்ளி வைத்து விட்டாயே !
உன் மரணத்தால் உன் தகப்பன் திருந்துவானா, தெரியாது !
ஆனால் உன் தாய் அனல் பட்ட புழுவாய்
வாழ்நாள் முழுக்க வருந்துவாள் இது உறுதி !
ஒன்று புரிந்திருக்கும் கண்ணா உனக்கு,
மதுக்கடையினால் மரித்து போன உயிர்கள் ஆயிரம் !
மரித்து போன குடிமகன்களால்
வேரோடு செல்லரித்து போகும் குடும்பங்கள் ஆயிரமாயிரம் !
உன் மரணம் மதுக்கடைகளை ஒரேயடியாய்
மூடி விடுமா, சந்தேகமே !
நீ ஆவியாய் வந்து மதுக்கடைகளை உடைப்பேன் என்று
கடைசியாய் கூறியது வேண்டுமானால் நடக்கலாம் !
இங்கு மதுக்கடைகளை மொத்தமாய் மூட சொல்ல
மக்களிடையே ஒற்றுமை இல்லை !
குடும்பங்களை கூட்டோடு அழிக்கும்
மதுபான கடைகளை உடைக்க ,
வேற்றுலகில் உன்னை போல் அலையும்
ஆயிரமாயிரம் ஆவிகளை கூட்டி கொள் !
அங்கு ஒற்றுமை நிச்சயம். இங்கு வெற்றியும் நிச்சயம்
மிகுந்த வேதனையில் சொல்கிறேன் கண்ணா !
கால சக்கரம் மூன்று நாட்கள் பின்னே செல்ல முடிந்தால்
உன் உயிரை முடித்து கொள்ளும் முடிவை மாற்ற ஆயிரம் மனங்கள் இங்கு கதறியபடி காத்திருக்கின்றன!

You might also like

Leave A Reply

Your email address will not be published.