ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கையொடிஞ்சு ஆம்புலன்ஸ்ல இவரைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.

0 269

நாங்கள் சமூகத்தை நேசிப்பவர்கள்!”
நேர்காணல்

“கடைசியா, பையனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது. நானும் இணையரும் எங்க மகனுமா சேர்ந்து எங்க வீட்டுல போட்டோ எடுத்துக்கிட்டது. அதற்கப்புறம் ஒண்ணா புகைப்படம் எடுத்துக்கக்கூட வாய்ப்பு கிடைக்கலை. அது நடந்து பதினெட்டு வருஷமாச்சு” – கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்துக்கும் மேலான தனிமைச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு பிணையில் வெளிவந்த சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன், நம்மிடம் சொன்ன இந்த வார்த்தைகளின் விளைவு. 18 வருடங்கள் கழித்து ஒன்றாக ஒரு குடும்பத்தைப் புகைப்படம் எடுப்பதற்காகவும் முகிலனிடம் பேசவும் கரூருக்குப் பயணப்பட்டோம்.

ஒரு வருடத்துக்குப் பிறகு தன் இணையரைச் சந்தித்த அவ்வளவு பூரிப்புடன் நம்மைப் பார்த்து வரவேற்றார் பூங்கொடி முகிலன். அருகில் அவர்கள் இருவரின் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் மகன் கார்முகில். “எங்கள் திருமணம் நடந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான்” என்று உரையாடலைத் தொடங்கினார் முகிலன்.

“நாங்கள் அமைப்பு சார்ந்து வேலை செய்யும் ஆட்கள். எங்கள் அலுவலகம் அருகிலேயே இவங்க வீடு இருந்தது. அதனால் எங்கள் அலுவலகத்தில் அன்றாடம் நடக்கிற விஷயங்கள் இவங்க வீட்டிலிருந்து பார்த்தாலே தெரியும். அப்படியே என்னையும் பார்க்கத் தொடங்கினாங்க. திருமணம் செய்துக்க முடிவெடுத்தப்போ இவங்களை முதன்முதலில் நான் அழைத்துச் சென்றது கோவைச் சிறைச்சாலைக்குத்தான். பொய் வழக்கு போடப்பட்டு, தோழர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகப் பூங்கொடியையும் உடன் அழைத்துச் சென்றேன். ‘என்னுடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும்.

சிறைவாழ்க்கைதான் நமக்கு நிரந்தர வாழ்க்கை. வெளியில் இருப்பதெல்லாம் விடுமுறை மாதிரி. என்னுடன் வாழவேண்டுமென்றால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சிறையில் வைத்தே பேசினேன். எங்கள் திருமணம் சிறையில்தான் முடிவாச்சு.”

இடைமறித்த கார்முகில், “திருமணம்தான் சிறைச்சாலையில் முடிவாச்சு. ஆனா, திருமணத்தைக் கிட்டத்தட்ட அரசியல் மாநாடு மாதிரி நடத்தினாங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்ல… “நாங்க சீர்திருத்தத் திருமணம் செய்துகிட்டோம். நோட்டீஸ் அடிச்சு ஊருக்கே அழைப்பு விடுத்தோம். இரண்டாயிரம் பேருக்கு மேல் எங்கள் திருமணத்தில் கலந்துகிட்டாங்க. பலபேர் முன்னிலையில் ‘தனிநலன் கருதாத குடும்பநலன், குடும்பநலன் கருதாத சமுதாய நலன்’ என்கிற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுதான் எங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினோம்.

‘காவிரி மறுதோன்றி அச்சகம்’ என்கிற ஒரு அச்சகத்தை ஆரம்பித்தோம். அச்சக வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பொது வேலைகளுக்காக என்று முடிவு செய்தோம். சரியாக 20 மார்ச் 1998 அன்று கார்முகில் பிறந்தாரு. பிறக்கிற அன்றைக்குக் காலையில்கூட அச்சகத்துல வேலைகளை முடிச்சுட்டுதான் மருத்துவமனைக்குப் போனோம” என்று கூறி வியப்பில் ஆழ்த்துகிறார் முகிலன்.

சுற்றுச்சூழலியலில் முதுகலைக்கல்வி, விவசாயிகளுக்காகக் கறுப்புக்கொடிப் போராட்டம் என்று கார்முகிலும் தொடர்ச்சியாகப் பொதுவாழ்க்கையில் பங்கெடுக்கிறார்.

“கார்முகிலும் அவங்க அப்பா மாதிரிதான்… மூணு வயசு இருக்கும். பஸ்சுல உட்கார்ந்திருக்கோம்.குண்டா ஒரு போலீஸ்காரர் வண்டியில ஏறினாரு. பக்கத்துல உட்கார வெச்சிருந்த கார்முகில் `லஞ்சப்பணத்தில் தொந்தி வளர்க்கும் ரவுடிக் கும்பல் ஒழிக’ன்னு பாடவே ஆரம்பிச்சிட்டாரு. அவ்வளவு சண்டித்தனம். சமாதானப்படுத்தி பஸ்ஸோட முன் இருக்கைக்குக் கூட்டிட்டு வந்து உட்கார வைக்கறதுக்குள்ள பெரும்பாடாகிடுச்சு. தைப்பொங்கல், எங்க திருமணநாள், கார்முகிலுடைய பிறந்தநாள் என வருடத்தில் மூன்று நாள் மட்டும் எங்களுக்கான நாளா இருக்கும். அந்த நாள்கள்ல மட்டும் குடும்பமா வெளியூர் போயிட்டு வருவோம். ஆனால் 2010-ல் கூடங்குளம் அணு உலைப் பிரச்னையில் இவர் கைது செய்யப்பட்டதுக்கு அப்புறம் அதுவும் இல்லை. கைதாகி இவர் எங்க இருக்காரு என்கிற எந்தவிவரமும் தெரியலை. இது எனக்குப் புதுசு இல்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கையொடிஞ்சு ஆம்புலன்ஸ்ல இவரைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. நான் வீட்டில் இருந்தேன். ஏதோ ஒரு தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. இவருடைய குரல். ‘கண்ணு! போராட்டத்துல கையொடிஞ்சிருச்சு.

ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டுப் போயிட்டிருக்காங்க. இது ஆம்புலன்ஸ் டிரைவரோட நம்பர்’னு சொல்லிட்டு போனை வெச்சிட்டாரு. ஊருக்கு ஏதாவது பிரச்னைனா இவருதான் முன்னால போய் நிப்பாரு. இவருக்கு ஏதாவது பிரச்னைனா என்னைத் தவிர யாருகிட்டையும் இவருக்குப் பேசத் தெரியாது. என்னோட நம்பர் தவிர இவருக்கு வேற யாருடைய எண்ணும் நினைப்புலேயே இருக்காது” என்று சொல்லும்போதே, இருவரின் கண்களும் கலங்குகின்றன.

‘‘இவரு இப்படி உயிருக்கு ஆபத்துன்னு போன் செய்யற சமயத்துல எல்லாம் நான் வீட்டுலதான் இருப்பேன். எந்த வேலையும் ஓடாது. அழுகை வரும். பக்கத்துல கஷ்டத்தைச் சொல்லக்கூட ஆட்கள் இருக்க மாட்டாங்க. உடனே கிளம்பி அச்சகத்துக்குப் போய் உட்கார்ந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். மறுபடியும் இவரு அழைப்பாருங்கற நம்பிக்கை” என்று பூங்கொடி தழுதழுக்கவும் அவரின் கரங்களைப் பற்றிக்கொள்கிறார் மகன் கார்முகில்.

ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நேசிக்கும் இந்தக் குடும்பத்தைப் பார்க்கும்போது, பாரதிதாசனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்…….
தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்!”

முகிலன்
நன்றி ஆனந்த விகடன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.