செயற்கை கருத்தரிப்பு மையங்களின் விஸ்வரூபம் வியாபாரமாகிறதா..!

0 1,139

ஊரெங்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நாற்பதுக்கும் அதிகமான பிரத்யேகமான கருத்தரிப்பு மையங்கள் வந்துவிட்டன

உலகமயமாக்கலுக்கு பிறகான வாழ்வியல் முறை மாற்றங்கள் காரணமாக, மக்களிடம் கருத்தரிப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தொழில் அதிபர்களும், கார்ப்பரேட் முதலைகளும் கூட கருத்தரிப்பு மையங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ஆடித்தள்ளுபடியில் துணி விற்பதைப் போல சில கருத்தரிப்பு மையங்கள் ‘ குழந்தை பெற சிறப்பு சம்மர் ஆஃபர்’ அறிவிக்கும் விளம்பரங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

குழந்தையின்மை

குழந்தையின்மையால் ஏக்கத்திலேயே வாழ்நாளைக் கழிக்கும் தம்பதிகளுக்கு அறிவியல் தந்த வரப்பிரசாதம்தான் செயற்கைக் கருத்தரிப்பு முறை.

ஆனால் இதை முழுக்க முழுக்க வணிக நோக்கில் மட்டுமே இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். பொதுவாக திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லையென்றால் தான் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடுவார்கள் ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில், திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்களின் வாசலில் வந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை குறித்த பிரச்னைகளுக்கு பல தவறான தகவல்களை அள்ளித்தரும் இரவு நேர மிட்நைட் மந்திரங்கள் போன்ற டிவி ஷோக்களை பார்த்ததும், இணையத்தில் தவறான தகவல்களைப் படித்தும், குழந்தையின்மை குறித்த தவறான புரிதல்களால் பயந்து போய் கருத்தரிப்பு மையங்களை நோக்கி ஓடுகிறார்கள்.

குழந்தைப்பேறுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பலர் செலவு செய்யத் தயாராக இருப்பதால், கருத்தரிப்பு மையங்களில் கனஜோராக வியாபாரம் நடக்கிறது. சிகிச்சைக்காக லட்சங்களில் பணம் பெரும் பல கருத்தரிப்பு மையங்கள் நேர்மையாக செயல்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருக்கிறது.

பல கருத்தரிப்பு மையங்களைப் பொறுத்தவரையில் அவர்களது மையங்களுக்கு வரும் தம்பதிகளுக்கு எப்படியாவது குழந்தை தங்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர், கருவைச் சுமக்கும் தாயின் உடல்நிலையை பற்றி சில மையங்கள் கவலைப்படுவதில்லை. குழந்தை தங்க வேண்டும் என்பதற்காக செலுத்தப்படும் ஹார்மோன் ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தெளிவாக சிகிச்சைக்கு வருபவர்களிடம் விளக்குவதே கிடையாது. தங்களது மையங்களுக்கு வந்தால் 100% குழந்தை பிறக்கும் என உத்திரவாதம் தந்தால் மட்டுமே தொழிலில் போட்டியாளர்களை சமாளித்து காலூன்றமுடியும் என்பதால் எப்படியாவது குழந்தையை உருவாக்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் செயற்கை கருத்தரிப்பு மூலமாக எல்லோருக்கும் தீர்வு சொல்ல முடியாது என்பதே அறிவியல் சொல்லும் எதார்த்தம்.

ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அதை நேரடியாக பெரும்பாலான கருத்தரிப்பு மையங்கள் சொல்வது கிடையாது. அதேசமயம் சில தம்பதிகளும் தங்களுக்கு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை, எப்படியாவது குழந்தைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருக்ககூடிய பிரச்னை இது. மிகவும் சிக்கலான உளவியல்ரீதியான பிரச்னையும் கூட

இந்தியாவில் வாடகைத்தாய்

அயல்நாடுகளில் வசிக்கும் பணவசதி படைத்த பலர் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் வறுமையில் வாடும் பெண்களைப் பயன்படுத்துவது வெளிப்படை. இந்தியாவில் வாடகைத்தாய் நடைமுறை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி அயல் நாட்டில் இருப்பவர்களுக்கு இங்குள்ள ஏழைப் பெண்களை வாடகைத்தாயாக்கி பல புரோக்கர்களும், கருத்தரிப்பு மையங்களும் பல லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றன. பல ஹார்மோன் ஊசிகளை போட்டுக்கொண்டு, யாரோ ஒருவருக்காக குழந்தையை சுமந்து, உடலை உருக்கி செய்யும் வேலைக்கு, புரோக்கர்கள் பத்தில் ஒரு மடங்கு பணத்தை மட்டும் தந்து ஏமாற்றவும் செய்கிறார்கள். இந்நிலையில் அயல்நாட்டினருக்கு குழந்தை பெற்றுத்தர இங்குள்ள பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தக்கூடாது என சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம்.

கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் முறைகேடுகள் வெளிப்படையாகத் தெரிவது கிடையாது..

கருத்தரிப்பு மையங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், சிகிச்சை பெறுபவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் கடுமையான சட்டங்கள் தேவை. சில ஃபெர்டிலிட்டி சென்டர்கள் பணத்துக்காக பல்வேறு அயோக்கியத்தனங்களைச் செய்வதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன

.

தம்பதிகள் சிகிச்சைக்கு வரும்போது கணவருக்கு விந்தணுக்கள் தரம் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தால் அவரிடம் இருந்து அதை வாங்கி பலப்படுத்துவாக சொல்கிறார்கள். இதற்கு சில ஆயிரங்கள் முதல் லட்சம் வரை கூட வசூலிக்கிறார்கள். தன்னிடம் குறைபாடு இருந்தாலும் தனது விந்துவில் இருந்து வாரிசு உருவாகும் வாய்ப்பு இருப்பதால் கணக்கு பார்க்காமல் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு ஏற்கனவே விந்து தானம் செய்த மற்றொருவரின் விந்தணுவை எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு செலுத்திவிடுவதாக சர்ச்சைகள் எழுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மையக்கருவாக கொண்டு மேலோட்டமான முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது,

கருத்தரிப்பு

மற்றொரு நபரின் விந்துவை ஒரு பெண்ணுக்கு செலுத்துவதாக இருந்தால் தம்பதிகள் இருவரிடமும் கையெழுத்து வாங்கவேண்டும் . கையெழுத்து பெற்று சட்டபூர்வமகாவே இந்த சிகிசிச்சையை செய்ய முடியும்.

ஆனால் அவற்றையெல்லாம் பின்பற்றாமல் மறைமுகமாக பணத்துக்காக சில மையங்களில் தில்லுமுல்லு நடக்கின்றன.

கருத்தரிப்பு மையங்கள் செல்வதே ஆபத்து என இக்கட்டுரை மூலம் பயமுறுத்த முயலவில்லை. கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று ஆரோக்கியமான குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

கருத்தரிப்பு மையங்கள் தான் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் வசந்தம் தந்துள்ளது. ஆனால் கருத்தரிப்பு மையம் என்பது ஒரு வியாபாரமாக மாறும்போது, மக்கள் விழிப்புடன் இல்லாத பட்சத்தில் கருத்தரிப்பு மையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கும், சிகிச்சை பெறுபவர்கள் ஏமாற்றப்படவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.