சின்னதம்பி யானையின் அரசியல், கும்கியாக எவ்வாறு மாற்றுவார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்

0 279

குடும்பத்தினரிடமிருந்து பிரித்து தனியாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, உணவில்லாமல் தொடர்ந்து துன்புறுத்தப்படும் யானை, மனரீதியாக மிகவும் பலவீனமாகிவிடுகிறது.

சமீபத்தில் டாப்சிலிப் பகுதியில் காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் சமவெளிக்கு வந்ததை அடுத்து, அந்த யானை கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார்.

இதற்கு வனநல ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கும்கியாக மாற்றுவது என்பது யானைக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வன்முறையை ஏற்படுத்தும் நடைமுறை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதற்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அது போன்ற திட்டம் இல்லை என்று தெரிவித்து நிம்மதி அளித்துள்ளது.

ஒரு யானை எப்படி கும்கியாக மாற்றப்படுகிறது? என்று வன நல ஆர்வலர் ஆண்டனி ரூபின் நம்மிடம் விரிவாக பகிர்ந்துகொண்டார். “கும்கியாக மாற்றப்படும் யானை, துளைகளுடன் கூடிய கட்டைகளால் ஆன கூண்டில் தனியே அடைக்கப்படும். மது அருந்திய நிலையில் இருக்கும் மாவூத்துகள் யானையை நீண்ட பிரம்பால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

வலி தாங்காமல் யானை அலறினாலும் தொடர்ந்து அடிப்பார்கள். அதே நேரம் யானைக்கான சாப்பாடு கொடுக்கப்படாது” என்கிறார் ரூபின்.

குடும்பத்தினரிடமிருந்து பிரித்து தனியாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு, உணவில்லாமல் தொடர்ந்து துன்புறுத்தப்படும் யானை, மனரீதியாக மிகவும் பலவீனமாகிவிடுகிறது. மாவூத்துகளின் கட்டளையை நிறைவேற்றினால் தான் சாப்பாடு கொடுக்கப்படும்.

பசியிலிருந்தும் வலியிலிருந்தும் விடுபட மாவூத்துகள் என்ன கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றும் மனநிலைக்கு யானை வந்துவிடும். தன் இனத்தையே துன்புறுத்த கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றும் ‘அடிமை’ மனநிலைக்கு அந்த யானை தள்ளப்படுகிறது.

சின்னத்தம்பி யானையின் வழித்தடத்தில் இருந்த மணல் அகற்றப்பட்டதால் , பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தான் வழித்தடத்தை தேடி சின்னத்தம்பி சமவெளிக்கு வந்துவிட்டதாக ஆண்டனி ரூபின் கூறுகிறார். யானையின் வழித்தடங்கள் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் இதுபோன்று நிறைய சின்னத்தம்பிகள் இன்னும் சமவெளிக்கு வர வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

மேலும் பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள டாப் சிலிப் பகுதியில் ஏன் சின்னத்தம்பி விடப்பட்டது? என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் ரூபின். “யானை ஒரு நாளுக்கு 22 கி.மீ. வரை கடக்கும் என்று வனத்துறையினருக்கு நன்றாகவே தெரியும். வெறும் 100 கி.மீ. தூரத்தில் விட்டால், கண்டிப்பாக பிரிக்கப்பட்ட தன் குடும்பத்தையும் இருப்பிடத்தையும் தேடி வரும் என்று அவர்களுக்கு தெரியும்.

வனத்துறையினரிடம் உள்ள கும்கி யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போதுள்ள கும்கி யானைகளின் வயதும் 35-க்கும் மேல் உள்ளது. எனவே தான் சின்னத்தம்பி 100 கி.மீ. தூரத்துக்குள் விடப்பட்டதோ? என்று தோன்றுகிறது’’ என்கிறார்

செய்தி: News 18

You might also like

Leave A Reply

Your email address will not be published.