சத்துணவு முட்டை ஊழல் தப்பித்தது நிறுவனம்..! பாதித்தது யார் தெரியுமா..?

0 356

சத்துணவு முட்டை ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை..!

ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமானவரி சோதனை ந

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

இந்நிறுவனம் போலி பெயரில் நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் ஆண்டி பாளையத்தில் உள்ள அந்த நிறுவனம், வட்டூரில் உள்ள அதன் உரிமையாளர் குமாரசாமி வீடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ராசிநியுட்ரிபுட் என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், குடோன்கள், உறவினர்கள, நண்பர்கள் வீடுகள் உள்பட 78 இடங்களில் ஒரே நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தின் வரவு செலவு புத்தகங்கள், வங்கி இருப்பு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நடந்த தொடர் சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் இருந்து 17 கோடி ரொக்கப்பணம், 10 கிலோ தங்கம் மற்றும் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இதற்கிடையே வருமான வரித்துறையினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க கிறிஸ்டி நிறுவனத்தின் கேஷியர் கார்த்திக்கேயன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேற்று அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு சுய நினைவு திரும்பியுள்ளதால் அவரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள கணக்காளர் கார்த்திக்கேயன் வீட்டில் நேற்று அங்குலம், அங்குலமாக பல மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் ஆட்களை இறக்கி சோதனை செய்த போது 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த பென் டிரைவ்களில் கிறிஸ்டி நிறுவனத்தின் வெளிநாடு மற்றும் உள் நாட்டு முதலீடுகள், தொழில் விவரங்கள், குமாரசாமியின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிகாரிகளே திகைத்துள்ளனர்.

குமாரசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான கேஷியர் கார்த்திக்கேயன் போலி நிறுவனங்கள் தொடங்கியதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் குமாரசாமியின் வங்கி கணக்குகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குமாரசாமியை காப்பாற்றும் வகையில் ரகசியங்கள் அடங்கிய பென்டிரைவ்களை வீட்டு கிணற்றில் வீசி விட்டு கார்த்திக்கேயன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் பிடிக்கப்படட்ட குமாரசாமியை பெங்களூரு அழைத்து சென்று முதலில் விசாரணை நடத்தினர். நேற்று அவரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விளை அதிகாரிகள் கேட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதகாவும் கூறப்படுகிறது.

இன்று குமாரசாமியை திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இதே போல வரி ஏய்ப்புக்கு துணை போனதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதா தேவியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

நிறுவனத்தின் கணக்கு வழக்கு மற்றும் அனைத்து தகவல்களையும் பென் டிரைவ் எக்ஸ்டர்னர் ஹார்டு டிஸ்க் மூலம் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். அவற்றை மேலாளர், கணக்காளர், அக்கவுண்டன்ட் ஆகியோர் தங்களது பொறுப்பில் வைத்திருந்தனர்.

திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 5-வது நாளாக இன்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போதைய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள பரிவர்த்தனைகள், ரகசிய ஆவணங்கள், வரவு செலவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த ஆய்வு முடிவில் கிறிஸ்டி நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது, ரொக்கப்பணம் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

வருகிற 11-ந் தேதி தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை வினியோகத்திற்கு மாநில அளவிலான டெண்டர் நடக்கிறது. அதில் இந்நிறுவனம் பங்கேற்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமாக கோழிப்பண்ணைகள் இல்லாததால் தினமும் 50 லட்சம் முட்டைகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 400 பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.

முட்டைகள் வழங்கும் கோழிப்பண்ணைகளுக்கு அந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும்.

வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் நீடிப்பதால் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகம் செய்த முட்டைக்கு உரிய பணம் கணக்கில் வரவு வைக்காததால் பண்ணையாளர்கள் பணம் கிடைக்குமா? என்ற தவிப்பில் உள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.