கோவிலில் ஏன் சாதி..? சாதிக்கு ஓரு கடவுளா..? சாதி மத வெறியர்கள் படிக்க வேண்டாம்,

0 388

இறைவன் முன் அனைவரும் சமம் என்று எழுதி விட்டு ஆளுக்கு ஒரு மரியாதை ,ஐநூறு ரூபாய்க்கு ஒரு தரிசனம்,ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தரிசனம் , இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு தரிசனம் , சாமிய காசு கொடுக்காம பார்த்தா தெய்வ குத்தம் ஆயிடும் என்பது போல?

எங்காவது ஒரு மூலையில் தர்ம தரிசனம் என்று ஒரு பலகை .பட்டியில் ஆடு அடைப்பதை விட கேவலமாக வரிசையாக கூண்டு கட்டி அதில் வந்த பின்பும், கட்சிக்காரன் ,அரசாங்க எடுபுடி இவன் எவனாவது வந்தா அவனுக்கு விரைவு தரிசனம் இப்படி பார்த்து நகர கோவில்கள் , அதுக்கு இங்க போனா பரிகாரம் இதுக்கு இங்க போனா பரிகாரம் அப்படின்னு கல்லா கட்டற கோவில் எல்லாத்தையும் விட்டு தூர வந்து வெகு நாளாச்சு.

சாமி , பூஜை ,புன்ஸ்காரம் , இதையெல்லாம் கடந்து இதை காரணமாக வைத்து உருவாக்கப்பட்ட விஷயத்தை அதன் மூலம் உருவாக்கப்பட்ட வெவ்வேறு விதமான கட்டிடக்கலையை தேடி பயணித்தல் சுகம்.அதுவும் ஆளே வராம ஏகாந்தமா ஈசன் உட்கர்ந்திருக்கற கோவில்கள் வரம்.

டேய் படம் எடுக்காத கேமெராவ கொண்டா ? சாமிய படம் எடுக்க முடியாது ?விழமாட்டார் ? காமெரா புகைஞ்சு போயிடும் ? சாமிய கும்பிட்டியா போயிட்டெ இருங்கற சைத்தான்களோட சத்தம் எதுவும் இல்லாம !

எந்த சாமிய வேணா படம் எடுக்கலாம்!அவருக்கு எத்தனை கை இருக்கு.அதில் என்னென்ன ஆயுதங்கள் இருக்கு அதில் எதெது நமக்கு தெரியும் ? அந்த சாமியோட பேர் உண்மையில என்ன ?

கல்வெட்டு யாரோடதெல்லாம் இருக்கு ? எந்த காலத்துல கட்டியிருக்காங்க ?எப்ப எப்ப திருப்பணி செஞ்சிருக்காங்க.எந்த மன்னர் எல்லாம் தானம் கொடுத்துருக்கார்.

அப்படின்னு பாத்து பாத்து இரசிக்கறது இருக்கே.அதெல்லாம் சொன்னா புரியாது அனுபவிக்கனும்.

அப்படி ஒரு ஊர் ஒக்கூர் .ஊருக்குள்ள போய் கோவிலுக்கு முன்ன நின்னதுமே அந்த கோவிலின் தோற்றம் அது இருந்த இடம் எல்லாம் வேறோரு கோவிலோட இருப்பை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது.

இதுவரை நாங்கள் சந்தித்த பண்பான சிவாச்சார்யர்களில் இவரும் ஒருவராக இடம் பிடித்துவிட்டார்.கோவில் கட்டுமானத்தை பற்றி விவரித்தவுடன் ஒரு சிறுவனின் ஆர்வத்தோடு அவருடைய மகனையும் பேரனையும் அழைத்து கூட நிறுத்திக்கொண்டு மிக ஆவலுடன் தகவலை உள்வாங்கி கொண்டார்.

கல்வெட்டு இருக்கும் இடத்தை காண்பித்து அதை நீரால் அவரது பேரனை விட்டு சுத்தப்படுத்தி வாசிக்க சொல்லி தகவல் அறிந்து கொண்டார்.வெகு நாளாக திருப்பணிக்கு முயற்சி செய்வதாகவும் இன்னும் ஈடேறாமல் இருப்பதையும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

மூன்றாம் குலோத்துங்கர் தொண்டை மண்டல சிறப்பான தூங்கானை மாட கோவிலை, வெற்றி கொண்ட பாண்டிய தேசத்தில் கட்டியிருக்கிறார்.அடித்தளம் மட்டும் கருங்கற்களால் இருக்க அதன் மேல் எழுப்பப்பட்ட செங்கல் தளி சோழர்களின் கட்டுமானத்திறனை நேர்த்தியை நூற்றாண்டுகள் கடந்தும் நமக்கு எடுத்துரைத்தவண்ணம் நின்று கொண்டிருக்கிறது.

பிற்காலத்தில் எப்போதோ செய்யப்பட்ட திருப்பணியில் அம்மன் கோவில் சுவற்றில் வைத்து கட்டப்பட்ட தூண் கல்வெட்டு ஒன்று மூன்றாம் இராஜராஜரும் இக்கோவிலை போற்றி புரந்ததை சொல்கிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் வெடாலில் இருக்கும் இராஜராஜரின் தூங்கானை மாட கோவிலை நினைவு படுத்தும் இந்த தூங்கானை மாடக்கோவில் தன் வரலாறு கலையாமல் தன்னை புதுப்பிப்பவர்களை எண்ணி காத்திருக்கிறது.

ஒக்கூர் – புதுக்கோட்டை

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்

பதிவு, புகைப்படம் : பரந்தாகன் தமிழ்செல்வம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.