முலை பால் குடித்த அந்த குழந்தைக்கு தெரிந்திருக்காது ஒரு படி நெல் கூடுதலாக கேட்டதற்காக கொளுத்தப்பட்டோம் என்று..! கீழ்வெண்மணி டிசம்பர் 25 பற்றி உங்களுக்கு தெரியுமா..? உண்மை சம்பவம்

0 1,015

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள்.

நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர்.

தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48.

ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண நாயுடு குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது.

தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள்.

இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொன்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது.

மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.

பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத சொல்லியது. “இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்” என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதையும் சொல்லியது

106 பேர் கைதானார்கள். “இது சாதிய மோதல்” என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள். இவர்கள் மேல் கொலைக்குற்றத்துக்கான பிரிவு-302 போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.