காலை வணக்கம், மாலை வணக்கம் சொல்றிங்களே உண்மையாகவே தமிழில் இவை உருவான வார்த்தைதானா..? விளக்கம்

0 1,380

தமிழில் சில தவறான சொல்லாடல்களைத் தொடர்ந்து சிலர்/பலர் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறேன்… ஒன்றிரண்டை இங்கே சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.

பல ஆங்கில வார்த்தைகள் , வழக்குமொழிகளை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துப் பயன் படுத்தி வருகிறோம். முதன்மையான ஒன்று, ‘ காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் (மதிய வணக்கம்)’ என்று வேளைக்குத் (?) தகுந்தவாறு முகமன் கூறுவது
( pun intended)… இது ஆங்கிலத்தில் அவர்கள் பயன்படுத்தும்

‘ good morning, good evening, good night (good afternoon)’ என்பவற்றின் நேரடித் தமிழாக்கம் தாம். அதுவும் பிழையான தமிழாக்கம் அல்லவா ?. ஆங்கிலத்தை நினைத்துக் கொண்டு தமிழில் பேசுவது !. ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழில் மொழிமாற்றம் செய்தால், ‘ நல்ல காலை, நல்ல மாலை, நல்ல இரவு (நல்ல மதியம்) என்றல்லவா இருக்க வேண்டும் ?. பிறகு ஏன் அவர்களின் ‘வேளை’யையும், நமது ‘வணக்க’த்தையும் கலந்து கட்டி ஒரு சொல்லைக் கண்டு பிடித்திருக்கிறோம் ?. உண்மை என்னவென்றால் , அவர்களின் முகமன் கூறும் பாணி அது. ‘இந்தப் பொழுது உங்களுக்கு நற்பொழுதாகுக’ என்று வாழ்த்தித் தொடங்குகிறார்கள்…

நம் வழக்கம் என்னவெனில், எப்போது ஒருவரை ஒருவர் சந்திக்கிறோமோ அல்லது தொலைபேசியில் பேசுகிறோமோ அப்போது மரியாதை தெரிவிக்குமுகமாக,
‘வணக்கம்’ என்பதுதான்… அதாவது ‘வேளை’ எதுவாக இருந்தாலும் பொதுவாக ‘வணக்கம்’ என்பதே வழக்கம். காலைக்கொரு வணக்கம் , மாலைக்கொரு வணக்கம், இரவுக்கொரு வணக்கம் என்பது வழக்கமில்லை.
காலை வணக்கம் இத்யாதி நமது தவறான சொல்லாடல் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அறியாமல் பயன்படுத்தி வந்தவர்கள் திருத்திக் கொண்டு, உங்களின் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்…. நல்ல தமிழ் உரையாடலை எங்கெங்கும் கேட்க விரும்புகிறேன்….

kavignar thamarai : சரியான இன்னொரு உதாரணம் , ‘waterfall’ – நீர்வீழ்ச்சி….. சரியாகச் சொன்னீர்கள் சாமுவேல்… அருவி என்பதே அழகான தமிழ்ச்சொல்…

kavignar thamarai :

மானிடர் யாரும் என்பதே சரி… ஓசைக்காக அப்படி மாற்றி எழுதப்பட்டிருகிறது…. பாடல்கள், கவிதைகளில் இவற்றுக்கு இடம் உண்டு.. poetic license என்று சொல்வார்கள். மாற்றி எழுதப் பட்டிருக்கும், சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று பொருள். சொல், பொருள், ஓசை,இடம் இப்படிப் பல காரணங்கள் உண்டு. திரைப்படப் பாடல்களில் நான் முடிந்த வரை இலக்கணங்களைக் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு, ஓர் ஆகிய வார்த்தைகளைச் சரியாகப் பயன்படுத்தப் பெருமுயற்சி செய்து வருகிறேன். ஆனாலும் ஓசைக்காக இவற்றைப் பலியிட்டதுண்டு… கண்ணதாசன், வாலி உட்பட…

வேல்முருகன் : நல்ல தமிழில் நான் பேச முயற்சித்தால் என்னை ஏதோ வேற்று கிரகவாசிபோல பார்க்கிறார்கள்.!!?கவிஞரே

Kavignar Thamarai ;

மனம் தளராதீர்கள் வேல்முருகன்…. நான் எல்லோரோடும் (திரைஉலகிலும்) முடிந்தவரை நல்ல தமிழில்தான் பேசுகிறேன். திரைப்படங்களில் ஆங்கிலம் கலக்காத தமிழில் பாடல் எழுதிக் கொடுங்கள் என்றுதான் என்னிடம் கேட்கிறார்கள் என்பதை அறிவீர்களா ?. ஊடகங்களிலும் நான் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள்.. என்னைப்பார்த்துப் பலர் தமிழிலேயே பேசக் கற்றிருக்கிறார்கள்… தேவைப் படுகிற இடத்தில்தான் ஆங்கிலம் பேசுகிறேன்… உறுதியாக இருங்கள்.

முயற்சித்தால்’ என்பதும் சரியான சொல்லாடல் அல்ல. ‘முயன்றால்’ என்பதே சரி. முயற்சித்தேன் என்பது தவறு, ‘முயன்றேன்’ என்பதே சரி. இனி முயன்று பாருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.