காமராஜர் ஆட்சிக்காலத்தில் உண்மையாகவே எத்தனை அணைகள் கட்டப்பட்டது..! புரளிகளை நம்பாதீர்கள்..!

0 415

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 90 லட்சத்து 96 ஆயிரம் என்று சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே போகிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப அரசின் திட்டப்பணிகள் இல்லை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக விவசாயத்தை மேம்படுத்த அணைகள் கட்டுவது போன்ற திட்டப்பணிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாதது விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.

இதன்விளைவாக விவசாயத்தை நம்பி இருந்த தமிழக மக்கள் படிப்படியாக விவசாயத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்தொழிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக இருப்பது நீர் ஆதாரம் தான்.

கடந்த 140 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தத்தளித்து வரும் சூழ்நிலையில் விவசாயத்தை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. 1950-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்த விவசாய நிலப்பரப்பு தற்போது பெருமளவு குறைந்து விட்டது.

ஆரம்ப காலத்தில் விவசாயத்துக்காக தண்ணீரை தேக்கி வைக்கவே அணைகள் கட்டப்பட்டன. அதன்பின்பு, அணைகள் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அணைகள் இல்லாததால் இன்று தண்ணீருக்காக தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் மேட்டூர், கீழ்பவானி (பவானிசாகர்), பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், சோலையார், அமராவதி, ஆழியாறு போன்றவை 100 அடி உயரத்துக்கும் அதிகமான உயரத்தை கொண்ட அணைகள் ஆகும்.

இதுதவிர பெருஞ்சாணி அணை 77 அடி உயரத்திலும், பரம்பிக்குளம் அணை 72 அடி உயரத்திலும், வைகை அணை 71 அடி உயரத்திலும், திருமூர்த்தி அணை 60 அடி உயரத்திலும், கிருஷ்ணகிரி அணை 52 அடி உயரத்திலும், பேச்சிப்பாறை அணை 48 அடி உயரத்திலும் உள்ளன.

இந்த அணைகளில் மேட்டூர் அணை, பாபநாசம் அணை போன்றவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை ஆகும்.

1955-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்னை மாகாணத்துடன் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், பாலக்காட்டை அடுத்த மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். தற்போது இந்த அணையால் பாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கேரள மாநில மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் 60 ஆண்டுகளை கடந்தும் மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன. இந்த அணைகள் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.

படிக்காத மேதையான காமராஜர், இத்தனை அணைகளை கொண்டு வந்தபோதும் அவருக்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டாதது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இருக்கின்ற அணைகளை முறையாக பராமரித்து மழைக்காலங்களில் போதிய அளவு நீரை சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் குரலாக இருந்து வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.