காட்டில் பிடிபடும் யானைகள் அனைத்துமே, கும்கிகளா ? (இந்தக் கட்டுரை மற்றும் வீடியோவை இறுதிவரை பாருங்கள்)

0 402

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது. “கூடாவே கூடாது” என்றோ, “அந்த அட்டகாசம் செய்கிற காட்டு யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும்” என்றோ, சமீபத்தில் விடாமல் யானைகள் பற்றி நமது கண்களிலும், காதுகளிலும் ஊடகங்கள் மூலம் விழுகிற ஓயாத சத்தங்கள் இவை…

ஊடகங்கள் சொல்வது போல பிடிக்கின்ற அனைத்து யானைகளும் கும்கிகளா ? எல்லா யானைகளையும் கும்கியாக மாற்ற முடியுமா ? என்பதற்கு முன்னர் மேலும் சில விசயங்கள் பற்றி பறசுவோம்…

“கும்கி” என்கிற பெயரே நம்மில் பலரிற்கு “கும்கி” சினிமா வந்த பின்னரே மனதில் பதிந்திருக்கும். அதில் வருகிற யானைகள் பற்றிய பல அபத்தமான தகவல்கள் நமது மனதில் பதிக்கப்பட்டு விட்டது. அந்தப் படத்தில் காட்டப் பட்டதுபோல கும்கி என்பது தனியாரிடம் உள்ள வளர்ப்பு யானைகள் இல்லை. தனியார் யாரும் இப்போதைக்கு கும்கி யானைகள் செய்யும் பணிகளை செய்ய, தமது யானைகளை பயன்படுத்தவே முடியாது. இப்போதைக்கு கும்கி யானைகள் அரசின் கீழுள்ள வனத்துறையினரிடம் மட்டும்தான் உள்ளது…

சரி கும்கி யானைகள் என்றால் என்ன ? கும்கிகளின் வேலைதான் என்ன ? கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்…

பெரிய கனமான பொருட்களை நகர்த்த எந்திரங்கள் இல்லாத கடந்த வெள்ளையர் அரசின் காலங்களில், இந்தியாவில் அதிலும் குறிப்பாக பெரும் மரங்கள் உள்ள நமது மேற்கு தொடர்ச்சி மலையில் வெட்டுமரத் தொழிலுக்கு பெரும் பயனாய் இருந்தது, “யானைகளே”. என்ன முரண் பாருங்கள் யானைகளின் வாழிடத்தை அழிக்க யானைகளே பயன்படுத்தப்பட்டன.வரலாற்றில் என்றைக்குமில்லாத அளவிற்கு அன்றைக்கு மிக அதிகமான மரங்களை வெட்டப்பட்டன். அதற்காக அதிக எண்ணிக்கையில் யானைகள் தேவையாக இருந்தது. இந்தப் பணிக்கு பயன்படுத்த காட்டு யானைகளை பிடிக்கும் பொருட்டு, யானைகளையே கவர்ந்திழுக்கும் பொறியாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்…

அதாவது, காட்டு யானையை பிடிக்க, பருவத்திற்கு வந்த பெண்யானையை காட்டில் கட்டி வைத்து விடுவார்களாம். பெண் யானை வெளிப்படுத்தும் வாசனையால் ஈர்க்கப்பட்டு, அங்கு வரும் ஆண்யானைகளின் மனநிலை என்பது, கொஞ்சமும் ஆபத்துபற்றி யோசிக்காத நிலையில்தான் இருக்கும் (இந்த விசயத்தில் எல்லா உயிரினங்களுக்கும் சவால்கள் எல்லாமே சாதாணமாகத்தான் இருக்கும்) . அந்த நேரத்தில் வளர்ப்பு யானைகளைக் கொண்டு பிடித்து விடுவார்கள். அப்புறம் என்ன ? எதற்கோ ஆசைப்பட்டு இங்கு வந்து சிக்கி வாழ்நாள் முழுவதும். மரங்களை இழுப்பதும், தூக்குவதுமான வேலையாக அடிமைப்பட்டுக் கிடப்பதுதான்…

அன்றைக்கு இப்படிக் கவர்ந்திழுக்க கட்டிவைக்கப் பயன்படும் “பெண்” யானைகளின் பெயர்தான் “கும்கி”. ஆனால் இன்றைக்கு இருக்கின்ற கும்கிகள் அனைத்தும் ஆண் யானைகளே. இப்போது உள்ள கும்கிகளின் வேலை முற்றிலும் வேறானது…

கடந்த நூற்றாண்டுகளில் காடுகளை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த மனிதர்கள். தொடர்ந்து வந்த மனித எண்ணிக்கை பெருக்கமும், அவர்களுக்கான அதீத தேவையும் அதிகமானபின், காட்டை அழித்து பயிர் செய்வதும், காட்டிற்கு அருகில் குடியேறுவதும் தொடர்ந்தது. இப்போதைக்கு காடுவேறு நாடுவேறு என்ற நிலை மாறிக்கொண்டே செல்கிறது. இதன் விளைவாக விலங்கு மனித மோதல்கள் தவிர்க்க இயலாத நிலையே தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் மனிதர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிகம்…

வனம், வனவிலங்குகள் பற்றிய புரிதலற்ற நிலையில், மனிதர்கள் தொடர்ந்து செய்த தவற்றால், மனிதர்கள் வாழுமிடங்களில் யானைகள் வருவதை தடுக்க முடியாத நிலை உருவாகியபோது அவற்றை மீண்டும் காட்டிற்குள் விரட்ட(!) வளர்ப்பு யானைகளை பயன்படுத்தும் யோசனை வந்தது….

முதலில், வளர்ப்பு யானைகளான கோவில் யானைகளையே யானை விரட்டும் வேலைக்கு பயன்படுத்தும் யோசனை கூட வந்திருக்கிறது. ஆனால் கோவில் யானைகளோ பிறந்தது முதலே மனிதர்களோடு மனிதர்களாய் புளியோதரையும், தோசையும், தயிர்சாதமும் தின்றே வளர்ந்தவைகள். அவற்றை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு பிறகு வந்துவிட்டார்கள். பிறகுதான் காட்டில் வாழ்கிற யானைகளை பிடித்தே கும்கியாக மாற்றும் செயல் இந்த அளவிற்கு மாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது….

இப்போதைக்கு காடுகளில் உள்ள யானைகளை எப்படியெல்லாம் பிடிக்கிறார்கள் என்றால், பெற்றோரை இழந்த அல்லது கூட்டத்திலிருந்து தனித்து அனாதைகளாக இருக்கும் குட்டிகளை பிடித்துவந்து முகாம்களில் வளர்க்கப் படுகிறது. மனிதக் குடியிருப்புகளுக்கு அருகே அடிக்கடி வந்து தொந்தரவோடு மனிதர்களையும் கொல்லுகிற பெரிய யானைகளை பிடித்து வந்து முகாம்களில் அடைத்து வைத்து வளர்க்கிறார்கள். இப்படி பல காரணங்களால் காட்டில் உள்ள யானைகள் வனத்துறையால் பிடிக்கப்படும். பிடிக்கப்பட்ட யானைகளை காட்டில் உள்ள முகாம்களிலேயே வளர்க்கப்படுகிறது….

பிடித்து வரப்பட்ட பழக்கப்படாத வளர்ந்த யானைகளை “கரால்” எனப்படுகிற பெரிய பெரிய மரங்களால் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்ட குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டு, வெளியே விடாமல் உணவுக் கட்டுப்பாடுகளோடு சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரையிலும் கூட சிறை வைக்கப்பட்டு, பாகன்களின் சொல்பேச்சு கேட்கும்படியாக வழிக்கு கொண்டு வரப்படும்…

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக உள்ள முதுமலை-தெப்பக்காடு யானைகள் பயிற்சி முகாம் புகழ்பெற்றது. ஆனைமலைக் காடுகளிலும் கோழிகமுத்தி, வரகளியாறு பயிற்சி முகாம்கள் செயல்படுகிறது. இப்படி பிடித்து வளர்க்கப் படுகிற அனைத்து யானைகளுமே கும்கிகளா என கேட்டால் “இல்லை” என்கிற பதிலே சரியான பதில்…

சரி எந்த மாதிரி யானைகளை கும்கிகளாக மாற்றம் பெற தேர்வு செய்யப்படுகிறது என்றால்,
இந்த முகாம்களில் உள்ள யானைகளில் பருமன், வலிமை, மற்றும் நீண்ட தந்தங்களை அடிப்படையாக கொண்டும் பாகன்களில் உத்தரவுகளுக்கு உடனடியாக கீழ்படிந்து உடனடியாக கட்டளைகளை செய்து முடிக்கிற யானைகளே கும்கிகளாக மாற்றம் பெறுகிறது. இப்படி தேர்வடைந்தவை காட்டு யானைகளை விரட்ட சிறப்பு பயிற்சி கொடுக்கிறார்கள். அப்படி பயிற்சி பெற்ற ஆண் யானைகளே “கும்கி” எனப்படுகிறது. அதாவது தனது இனத்தை வீழ்த்த பயன்படும் தேர்ந்த அடிமைகள் இவை. இப்போதைக்கு பெண் யானைகள் கும்கிகளாக முடியாது…

மிக முக்கியமான விசயம் என்னவென்றால், கும்கியாக வேண்டுமானால் முதலில் பலமுள்ள பெரிய தந்தங்கள் மிக அவசியம். பெரிய தந்தங்களை உடைய ஆண் யானைகளை கண்டுதான் மற்ற யானைகள் பயம் கொள்ளும்….

தகுதிகள் இல்லாது, கும்கிகளாக தேர்வு செய்யப் படாத மற்ற பிடிபட்ட யானைகள், வளர்ப்பு முகாம்களிலேயே பாகன்கள் மூலம் வளர்க்கப் படுகின்றன…

பல யானை விரட்டும் சம்பவங்களில் கும்கிகளும். பல திறமையான பாகன்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பல நேரங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட கும்கிகளும் பயன்படுத்துவது உண்டு. விரட்டுவதற்கு மட்டுமல்லாமல் பிடிபட்ட யானைகள் வாகனங்களில் ஏற்றவும் கும்கிகள் பயன்படுத்தப் படுகிறது….

இந்த நவீன காலத்தில் ஊருக்குள் வருகின்ற யானைகளை மிச்சமிருக்கின்ற காட்டிற்குள் விரட்ட சைரன் பொருத்திய வாகனகங்களே அதிகமாக பயன்படுத்தப் படுகின்றது. அதேபோல வாகனங்களில் யானைகளை ஏற்ற பெரும்பாலும் ஜேசிபிக்களே பயன்படுத்தப் படுகிறது. என்பதை சமீபத்திய நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்…

இன்னும் கொஞ்ச நாட்களில் யானைகளை பிடிக்க இப்படியான கும்கிகளின் தேவையே இருக்காது. அந்த வேலைகளை இந்த மாதிரியான மெஷின்களே பார்த்துக் கொள்ளும். அப்புறம் கொஞ்ச நாட்களில் அந்த மெஷின்களும் தேவைப்படாது…

காரணம், அதற்குமேல் இங்கு யானைகள் இருப்பதுகூட சந்தேகம்தான். இப்படி காட்டுயிர்களுக்கு எதிராக மனிதர்கள் வரிந்து கட்டிக்கொண்டு போராடுவதையும், அவற்றின் வாழிடங்களை அழிக்க போட்டி போட்டுக் கொண்டு அலைவதையும் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது…

எதிர்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!. இல்லாத காட்டினுள் இல்லாத யானையை தேடும் நிலையை நமது பேரன்பேத்திகளுக்கு ஏற்படுதிவிடுவோம் என நினைத்து கொஞ்சம் கவலையாக கூட இருக்கிறது. நமது பேரசைகளை கொஞ்சம் குறைத்து பிற உயிரினங்களும் வாழ இடம் கொடுப்போம்…

பேரன்போடு, உங்களது கருத்துகளை எதிர்பார்த்து,
Ramamurthi Ram

வீடியோவை காண

You might also like

Leave A Reply

Your email address will not be published.