கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு: எச்சரிக்கை..!

0 372

அழகுசாதனப் பொருட்களால் ஆபத்து

கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் முகப்பூச்சுகளும், வாசனை பொருட்களும் பயன்படுத்துகின்றனர். ஊடகங் களும் தேவையற்ற பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூறி விற்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.