கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகுள் தேடுபொறியில் இந்த மனிதரை பார்த்து இருப்பீர்கள் யார் தெரியுமா..?

0 207

கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து போயிருந்தார்கள்.

மகப்பேறு மருத்துவராக ஆகிவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற பிறகு, ராணுவத்தில் சேர்ந்து மகப்பேறு துறையில் மேற்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் எழவே முடியாத நிலைமை. அப்படி மீண்டு வந்த போது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை.

துவண்டு போக வேண்டிய நிலைமை. டாக்டர் வெங்கடசாமி மனந்தளர்கிற ஆளில்லை. நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார்.

அது விடுதலைக்குப் பிந்தைய ஆரம்பக் காலம். ஒருவருக்குக் கண் பார்வை மங்கினாலோ, கண்புரை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட அது நடைப்பிண நிலைமை தான். அழைத்துச்செல்லும் அளவுக்கு ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில் கண்பார்வை தெரியாமல் ஒரு ஓரமாக முடங்கிட வேண்டும்.

சாப்பாட்டை எடுத்துப்போட்ட தர ஆளிருக்க மாட்டார்கள். இப்படிப் பலர் கண்பார்வை போனதற்குப் பிறகு சீக்கிரமே உடல் நலிந்து, இறந்து போவதை வெங்கடசுவாமி கண்ணுற்றார்.

(இனிமேல் டாக்டர் வெங்கடசாமியை, ‘டாக்டர் வி’ என்றே அழைப்போம். ) நம்மைத்தேடி வர முடியாத ஏழைகளைத் தேடிப்போவோம் என்று முடிவு கட்டிக்கொண்டார் டாக்டர் வி. அப்படித் துவங்கியது தான் இலவச கண் சிகிச்சை முகாம்கள். ஊர் ஊராகப் போய்ப் பல பேரின் பார்வையை மீட்டுத்தந்தார்கள். அப்படி ஓயாமல் உழைத்தும் கையளவு பேரையே காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர் வி கண்டுகொண்டார். விலை குறைவான அனைவருக்குமான கண் மருத்துவமனையைத் துவங்கினால் என்ன என்கிற எண்ணம் ஓய்வு பெற்ற ஐம்பத்தி எட்டு வயதில் உருவெடுத்தது.

ஹார்வார்டில் இருந்த தங்கை நாச்சியார், அவருடைய கணவரை தோள் கொடுக்க அழைத்தார். வங்கிகள், நண்பர்களிடம் கடன் கேட்டார்கள். ‘சேவை செய்வதற்கு இந்த வயதான காலத்தில் கடனா?’ என்று ஏளனம் செய்தார்கள். கைவிரித்தார்கள். வீட்டில் இருந்த நகைகளை, வீட்டை எல்லாம் அடமானம் வைத்து சில கருவிகளோடு சகோதரர் ஸ்ரீனிவாசன் வீட்டையே மருத்துவமனை ஆக்கி பதினொரு படுக்கைகளோடு பயணத்தைத் துவங்கினார்கள்.

கட்டணம் தரக்கூடிய நோயாளிகளிடம் பணம் பெற்று ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரமே நாச்சியாரின் கணவரும், சகோதரியும் குழுவில் இணைந்து கொண்டார்கள். அரவிந்த் கண் மருத்துவமனை கிளை பரப்ப ஆரம்பித்தது.

அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் போயிருந்த போது மெக்டொனால்ட் உணவகங்களை டாக்டர் வி கண்டார். அவருக்குள் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பாய்ச்சல் ஒரு கேள்வியை எழுப்பியது.

“மெக்டொனால்ட் பல கோடி பர்கர்களை விற்றுத் தீர்க்கிறது. கோககோலா பல கோடி குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. இவர்களால் முடியும் என்றால் என்னால் சில லட்சம் கண் பார்வை அறுவை சிகிச்சைகளைச் சாதிக்க முடியாதா?”. மெக்டொனால்ட்டின் ‘assembly line’ முறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.

ஒரே அறையில் வரிசையாகப் பல்வேறு மருத்துவர்கள் கண் நோயாளிக்குச் சிகிச்சை தந்தார்கள். கண் என்பது உள்ளே இருக்கும் உறுப்பு என்பதால் நோய் தொற்றுக்கான வாய்ப்புக் குறைவு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளோடு அதி விரைவாக அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்தார்கள். ஆண்டுக்கு நானூறு அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டிருந்த மருத்துவர் இதனால் இரண்டாயிரம் அறுவை சிகிச்சைகள் வரை செய்வது சாத்தியமானது.

இன்னொரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற நடைமுறையை மாற்றினார்கள். பத்தாவது முடித்திருந்தால் போதும். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நேர்முகம் நடத்தி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வார்கள்.

இரண்டாண்டுகள் தீவிர பயிற்சிக்கு பிறகு ‘நடைமுறை அறிவு’ மிக்கச் செவிலியர்கள் தயார். இவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தர முடியாது என்றாலும் கிடைக்கிற நிறைவு சொற்களில் அடங்காதது. ‘கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியை விட வேலை நிறைய, சம்பளம் கம்மி தான். ஆனா பஸ்ல போறப்ப எல்லாரும் அடையாளம் கண்டுப்பாங்க. அவ்ளோ மரியாதை கிடைக்கும்.

அன்பை பொழிவாங்க. எழுந்து நின்னு உக்காருமானு சொல்வாங்க. வேறென்ன வேணும்’ என்று பேராசிரியர் சி.கே.பிரகலாத்திடம் ஒரு செவிலியர் தெரிவித்தார்.

அடிப்படையான சோதனைகள், கவனிப்புகள் ஆகியவற்றைச் செவிலியர் வேகமாக முடித்து விடுவார்கள். பின்னர்த் துரிதமாக மருத்துவர்கள் இயங்கி அறுவை சிகிச்சையை முடிப்பார்கள்.

தற்சார்புள்ள நிறுவனமாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. கையுறை, கருவிகள், மருந்துகள் என்று கிட்டத்தட்ட அனைத்துமே தானே தயாரித்துக் கொள்கிறது. 30% பணமுள்ள நோயாளிகளிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டு மிச்சமுள்ள சிகிச்சைகளை இலவசமாகவோ, மிகவும் மலிவாகவோ செய்ய முடிகிறது.

எடுத்துக்காட்டாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்ப் பொருத்தப்படும் Intraocular lens. இதன் விலை சில ஆயிரங்களில் இருந்தது. சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்தன. தானே தயாரித்து இருநூறு ரூபாயில் நோயாளிகளுக்குச் சிறந்த தரத்தோடு அரவிந்த் கண் மருத்துவமனை தர ஆரம்பித்தது.இன்றைக்கு மிகக்குறைந்த விலையில் இந்த லென்ஸ்கள் உலகின் 160 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் டாக்டர் வியின் வழியாக இருந்தது. வருகையாளர் அறை, மருத்துவர் அறைகள், வரவேற்பு அறை ஆகிய அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆடம்பர அலங்காரங்கள் அறவே கிடையாது. ஆனால், மருத்துவச் சேவையில் துளியும் சமரசம் இல்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தேவையான லாபத்தையும் தொடர்ந்து ஈட்டிக்கொண்டே இருக்கிறது.

‘கண்ணொளியின் மூலம் மக்களைப் பசி, பயம், வறுமையில் இருந்து விடுவிக்க இயலும். உடம்பை உறுதி செய்து, சிந்தனை, ஆத்மாவை முழுமையடைய வைக்க இயலும். கண் பார்வை மக்களின் சிந்தனை, செயல்பாட்டை உயர்த்த வல்லது’ என்றொரு பேட்டியில் நம்பிக்கை நிறையப் பேசினார் டாக்டர் வி. அவரின் விழி வேள்விக்காக இறுதி வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

இந்தியாவில் கண் சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10% பேரே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்களைக் கொண்டுவரும் கனவுப்பயணத்தைத் தொடர்ந்திட இன்னும் ஆயிரமாயிரம் அரவிந்த் கண் மருத்துவமனைகளும், சில நூறு டாக்டர் விக்களும் தேவை.

பதிவு: author : பூ.கொ.சரவணன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.