ஒரு தமிழ் நண்பரின் பதிவு சற்று கண்கலங்கி சிந்திக்க வைத்தது..! தந்தையர் தினத்தில் இப்பதிவு

310

வழக்கத்திற்கு மாறாக அன்று நான் அலுவலகத்தில் இருக்கையில் அப்பாவிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பு என்னை புருவத்தை உயர்த்தச் செய்தது.

என்னை நலம் விசாரித்தவர் சற்றே உடைந்த குரலில் எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மறைவைத் தெரிவித்தார்.

எனக்கு மட்டுமல்ல என் தந்தைக்கும் அடிப்படைக் கல்வி கற்பித்தவர் அவரே.வாழ்க்கை ஓட்டத்தில் என் நினைவில் இருந்து பலவருடங்களாக மறைந்து போனவர் இன்று நிரந்தரமாக மறைந்து போனார்.

வருத்தத்தில் தோய்த்த வார்த்தைகளால் காரணத்தை வினவினேன் தந்தையிடம்.வயதும்,நோயும்,நோயை விதைத்த கவலையும்,கவலையை விதைத்த வறுமையும்,வறுமையை விதைத்த சூழலுமெனக் கூறினார்.

நான் இன்று சுகபோக வாழ்வு வாழ அன்று விதை விதைத்து அதை சரியே விளையச் செய்தவர்.

உலகின் மிகப் பெரிய நகர்களுள் ஒன்றின் வானுயர்ந்த பலஅடுக்கு மாடிக் கட்டிட அலுவலகத்தில் கையில் ஏந்திய காப்பசினோவுடன் அவரை நினைவு கூறும் இந்த உயரத்திற்கு என்னை உந்தியவர்,தமிழக வரைபடத்தில் உருப்பெருக்கி துணை கொண்டு தேடினாலும் கிடைக்கபெறாத ஒரு கிராமத்தில் தன் நாடியைச் சுருக்கிக் கொண்டார்.

மனம் கண்ணீர்விட வேண்டியும் கண்ணீர் வராத திடத்தைக் கொடுத்தவர்.பள்ளி வேளையில் என் விலாவை இறுகப்பிடித்து தூக்கி இந்த உலகம் உன்னுடையது எடுத்துக்கொள் என விண்ணை நோக்கி என்னை எறிந்து எனக்குள் இருந்த அச்சத்தைப் போக்கியவர்.

என் உள்ளத்தை உழுது அதில் தைரியமும் தன்னம்பிக்கையும் விதைத்த விவசாயி.அந்த வலுவான கைகளை என் விலா எலும்புகள் இப்போதும் உணர்கின்றன.

என் வெற்றிகளைப் பாரட்டியவர்,தவறுகளைத் தட்டிக் கொடுத்தவர்.நான் பள்ளி கடந்து கல்லூரி சென்ற பின்னும் என் அப்பா நேரில் கண்ட வேளையில், என் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த போதெல்லாம் அப்பாவிடம் என்னை உயர்த்திக் காட்டியவர்.

உலகம் அதன் சுழற்சி வேகத்தில் மாறியபோதும் தன் கடைசி நாட்கள் வரை நான் பள்ளியில் கண்ட அதே மிதிவண்டியில் பயணித்தவர்.அவரைப் போன்ற எளிமை விரும்பிகளுக்கு இந்த உலகம் தகுதியற்றதாக மாறிப் போனதேன்?

பலநூறு வெற்றியாளர்களை உருவாக்கியவர்,மூன்று பிள்ளைகளைப் பெற்றும் அவர் உள்ளம் மகிழும்படி அவர்கள் நடவாமல் போனது ஏன்?

உதவியென வாயைத் திறந்தால் உதவ எண்ணற்றோர் இருந்தும் கடைசி வரை இறுமாப்பாய் இருந்து இறந்து போனது ஏன்?கையில் இருந்த காப்பச்சினோ ஆறியும் என் மனம் ஆறவில்லை.

என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான சிறு திரிகளைப் பற்ற வைத்த பேரொளிச் சுடர் அணைந்தது எங்கனம்?.சுடர் அணைந்தாலும் அதன் கங்கு என் மனதில் கனன்று கொண்டே இருக்கிறது…இருக்கும்… –

ஒரு தமிழ் நண்பரின் பதிவு

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.