எரிக்கப்பட்ட ராஜலெட்சுமியின் சாம்பல் திகட்டலிலிருந்து எழுவதாக எடுத்துக் கொள்ளுங்கள்..!

0 455

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது…

வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறர் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த தலையை வீசிவிட்டு தினேஷ்குமாரும் சாரதாவும் சசிக்குமாரும் ஒரு வாகனத்தில் ஏறி காவல்நிலையம் செல்கின்றனர்.

கடந்த 22.10.2018 அன்று இரவு 7.30 மணிக்கு வீசப்பட்ட தலித் சிறுமி ராஜலெட்சுமியின் துண்டிக்கப்பட்ட தலை 2 மணிநேரம் கிடக்க ஒட்டுமொத்த தலித் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணிக்கு அங்கு வந்த போலீசார் தலையையும் வெற்று உடலையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

என் மகள் ராஜலெட்சுமியின் தலையில்லாத முண்ட உடல் துடித்தது சார்… என் நெஞ்சுலயும் மடியிலயும் ஆசையா வளர்ந்த என் மகள கொன்னுட்டான் சார் அந்த படுபாவி என்று சின்னப்பொண்ணு என் கைகளைப் பிடித்து கதறியபோது ஒடிந்த கந்தலான அந்த தாயாரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வற்றிய குளத்தில் உள்ள இறுதி தண்ணியும் கசிவது போல அந்த தாயாரின் கண்களிலும் வெயில் படர்ந்த கண்ணீரை பார்க்க முடிந்தது.

சென்னையில் சுவாதி கொல்லப்பட்டபோது, டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்ட போது நீதிக்காக ஆர்ப்பரித்த ஜனத்திரள்களில் சிறு துகள்களாவது ராஜலெட்சுமியின் சேரி வீட்டினை எட்டிப் பார்த்திருக்கும் என்று நம்பிக்கையோடு சென்றேன். எங்களை யாரும் பார்க்க வரல சாமி, மகளை பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்கிறோம் என்று சொன்னபோது அவரது முகத்தை பார்க்க முடியாமல் குற்றவுணர்ச்சியோடு வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

என்னதான் நடந்தது? விசாரணையில் எவிடன்ஸ் குழு முழுமையாக இறங்கியது. சாமிவேல், சின்னப்பொண்ணு தம்பதியினருக்கு அருள்ஜோதி, ராஜலெட்சுமி என்கிற மகள்களும், சற்குணநாதன் என்கிற மகனும் இருக்கிறார்கள். சாமிவேல் தோட்டி வேலை செய்பவர். இறப்பு சடங்கில் பிணங்களை அடக்கம் செய்கிற பணியில் ஈடுபட்டிருப்பவர்.

சேலம் – ஆத்தூரிலிருந்து சுமார் 5கி.மீ தொலைவில் உள்ளது தளவாய்பட்டி. அங்கிருந்து 1கி.மீ தொலைவில் தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள் சாமிவேல் குடும்பத்தினர். இவர்களது கடைக்குட்டி ராஜலெட்சுமி 8ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்களது வீட்டிற்கு அருகாமையில் தினேஷ்குமாரும், அவரது மனைவி சாரதாவும் தோட்ட வீடு கட்டி வசித்து வருகின்றனர். சுமார் 2 ஏக்கர் நிலம் தினேஷ்குமாருக்கு உள்ளது. பெரிய அளவில் வீடும் உள்ளது.

கடந்த சில தினங்களாக ராஜலெட்சுமியிடம் தினேஷ்குமார் ஆபாசமாக பேசியிருக்கிறார். பாலியல் வன்புணர்ச்சியிலும் ஈடுபட முயற்சி செய்திருக்கிறார். தனக்கு நடந்த கொடுமையை ராஜலெட்சுமி தனது பெற்றோரிடம் கூற, விபரம் தெரியாத அந்த தம்பதியினர் இது வெளியே தெரிந்தால் நம் குடும்பத்தினருக்கு அசிங்கம். அந்த குடும்பத்தோடு பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வோம் என்று முடிவெடுத்துள்ளனர். தினேஷ்குமாரின் இந்த பாலியல் ரீதியான வக்கிர நடவடிக்கை கிராமங்களில் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இதற்கெல்லாம் காரணம் ராஜலெட்சுமி தான் என்று வன்மம் கொண்டு ராஜலெட்சுமியை கொன்றிருக்கிறார் தினேஷ்குமார்.

இது முக்கிய காரணம். மற்றொரு காரணமும் எங்களது விசாரணையில் தெரிய வந்தது. தினேஷ்குமார் – சாரதா குடும்பத்தின் சில உண்மைகள் சிறுமி ராஜலெட்சுமிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தங்களது குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து கொண்டு திட்டமிட்டு கொலை செய்திருக்கிறான் தினேஷ்குமார்.

கொலை செய்த தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும் அவரது தம்பி சசிக்குமாரும் பிடித்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் என்கிற செய்தி முற்றிலும் தவறானது. ஆத்தூர் காவல்நிலையத்திற்கு தினேஷ்குமார் நேரடியாக சென்று சரணடைந்திருக்கிறான். உடன் இருவரும் சென்றிருக்கின்றனர். இருசக்கர வாகனத்தை சசிக்குமர் ஓட்ட, அதற்கு பின்பு தினேஷ்குமாரும் சாரதாவும் உட்கார்ந்து கொண்டு சென்றிருக்கின்றனர்.

போகிற போது தினேஷ்குமார், பறத் தேவிடியா பசங்களா நான் ஜாமீனில் சீக்கிரம் வருவேன். உங்களை எல்லாம் விடமாட்டேன். என் வீட்டையும் என் நிலத்தையும் என் மாட்டையும் எவனும் எதுவும் செய்யக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறான் தினேஷ்குமார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் தினேஷ்குமாரின் மனைவி சாரதா, என் கணவர் சமீப காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். என் குழந்தையைக் கூட கொல்ல முயற்சி செய்தார். என் கணவருக்கு என் குழந்தை மீது அதிக பாசம். அந்த குழந்தையை யார் தூக்கினாலும் கோபப்படுவார். அந்த பொண்ணு ராஜலெட்சுமி என் குழந்தையை தூக்கியதனால் என் கணவர் எரிச்சலடைந்தார் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

போலீசார் இரண்டு நாட்கள் மருத்துவர்களோடு தினேஷ்குமாரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆய்வு செய்து பார்த்தபோது அவரது மனநலம் சரியாக இருக்கிறது என்றும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் போலீஸ் விசாரணையில் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக நடித்தேன் என்றும் தினேஷ்குமார் கூறியிருக்கிறான்.

இந்த கொலை வழக்கில் சாரதாவும், தினேஷ்குமாரின் தம்பி சசிக்குமாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவர்களுக்கு தெரியாமல் இந்த கொலை நடந்திருக்காது. கொலையை செய்துவிட்டு தற்போது தன் கணவனை காப்பாற்றிக் கொள்வதற்காக சாரதா நாடகம் ஆடுகிறார் என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினேஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் சின்னப்பொண்ணுவின் வீட்டை தேடி உள்ளே வந்து சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி சிறுமி ராஜலெட்சுமியை வீச்சரிவாளால் வெட்டியிருப்பானா? மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவனுக்கு எப்படி சாதியைச் சொல்லி இழிவுபடுத்த தெரிகிறது? மனநலம் பாதிக்கப்பட்டவன் என் நிலத்தையும் என் வீட்டையும் மாட்டையும் எவனும் ஒன்னும் செய்யக்கூடாது என்று எப்படி மிரட்ட முடியும்?

அதுமட்டுமல்லாமல் சாரதா போலீசாரிடம், என் கணவருக்கு முனி பிடித்திருக்கு என்று கூறியிருக்கிறார். அதாவது தினேஷ்குமார் இந்த கொலையை செய்யவில்லை சாமி தான் இந்த கொலையை செய்திருக்கிறது என்று கதை கட்டுகிற வேலையில் சாரதா முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்.

சில முற்போக்குவாதிகள் களத்திற்கு செல்லாமல் சாரதாவிற்கு வக்கீல் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சாரதா தலித் பெண் என்றும், ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்த தினேஷ்குமாருக்கு எப்படி சாதிய வன்மம் இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது முற்றிலும் பொய். சாரதா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

தன் கணவன் ஒரு கொலையை செய்தால் ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? மிகப்பெரிய ஒரு குற்றத்தை செய்துவிட்டானே, எப்படி நம்மால் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியும். நம் வாழ்க்கையை கெடுத்துவிட்டானே என்று புலம்புவார்கள். ஆனால் சாரதா பேச்சுக்கு பேச்சு தன் கணவன் தினேஷ்குமாரை, என் அம்மு ரொம்ப நல்லவர், அவருக்கு முனி பிடித்துவிட்டது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருப்பதே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணியில் ஒரு சதிக் கும்பல் பொது தளத்திலும் விசாரணையிலும் எப்படி பேச வேண்டுமென்று பயிற்சி கொடுப்பது தெரிய வருகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் போலீசாரின் நடவடிக்கை கேவலமாக இருக்கிறது. பாதுகாப்பில் இருந்த போலீசார் தினேஷ்குமாருக்கு சொந்தமான 7 – 8 மாடுகளுக்கு புல் அறுத்துபோடுவது, தண்ணீர் கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த ராஜலெட்சுமியின் தந்தை சாமிவேல், போலீசாரிடம் சென்று நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பிற்கு வந்தீர்களா? கொலைகாரனின் மாடுகளை பராமரிக்க வந்தீர்களா? என்று கேள்வி எழுப்ப, போயா வேலையைப் பாரு, செத்து போன உன் மக இனிமேல் உயிரோடு வரப்போறாளா? உயிரோடு இருக்கும் மாடுகளை காப்பாற்ற வேண்டாமா? என்று எகிறிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வாடகை வண்டியை பிடித்து அந்த மாடுகளை பாதுகாப்புடன் தினேஷ்குமாரின் மாமியார் வீட்டிற்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

மாடுகளின் மீது கரிசனம் காட்டுகிற போலீசாருக்கு கொல்லப்பட்ட சேரி குழந்தையின் குடும்பத்தின் வலியை புரிந்து கொள்ள மறுப்பது ஏன்?

மீ டு இயக்கம் இன்று இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பரவியிருக்கிறது. படித்தவர்களும் வசதிபடைத்தவர்களும் பிரபலங்களும் தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வதற்கு தளம் இருக்கிறது. அதை பதிவு செய்வதற்கு ஊடகங்கள் இருக்கின்றன. அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று அரசு அதிகாரிகள் நிர்பந்திக்க்ப்படுகின்றனர். ஆனால் தனக்கு நடந்த பாலியல் வன்முறை தன் குடும்பத்தினரிடம் சொன்னால் என்பதற்காகவே தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் சேரி சிறுமி.

மீ டு வன்முறையை கேள்விப்பட்டிருக்கிறோம். சாதி வெறியர்கள் மீ டு படுகொலையை சேரியில் நடத்துகிறார்கள். ஆனால் இதுபோன்ற சேரி படுகொலைகளுக்கு நீதிக்குரல்கள் வருவதில்லை. ஊடகங்கள் வருவதில்லை. அரசு அதிகாரிகள் வருவதில்லை.

சேரியைப் போன்றே எங்கள் நீதியையும் ஒதுக்கி வைத்திருக்கும் உங்கள் முற்போக்கு முகமூடி கழண்டு தொங்குகிறது. இறுதியாக ஒரே ஒரு கேள்வி. தினேஷ்குமார் மட்டும் தான் இந்த கொலையை செய்தானா? ராஜலெட்சுமிக்கு குரல் கொடுக்காமல் களத்திற்கு வராமல் கள்ள மௌனம் காக்கிற நாம் தினேஷ்குமாரின் கொலையின் பங்காளிகளா? எதிராளிகளா?

சேரியின் கேள்விக்கு உங்களின் எதில் என்ன?

இந்த கேள்வியை நான் எழுப்புவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எரிக்கப்பட்ட ராஜலெட்சுமியின் சாம்பல் திகட்டலிலிருந்து எழுவதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பதிவு: எவிடன்ஸ் கதிர்

சாதி உனக்கு முக்கியமான ஒன்று என்றால் தாராளமாய் வைத்து கொள் தயவு செய்து வன்மத்தில் ஈடுபடாதே..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.