எதற்காக வாழ வேண்டும்? தற்கொலை சிந்தனையில் இருப்போருக்காக

0 359

(தற்கொலை எண்ணம் பரவி வரும் இவ்வேளையில் இறை உணர்தலின் வழியாக நான் பெற்றவை இவை)

அன்பே,
இது உனக்காக எழுதப்படுவது. இதை நீ வாசிக்கும் இந்த கணத்தில் உன்னுடனே நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்படுவது.

ஏதோ ஒரு எல்லைக்குச் சென்றதாகவும் இனியும் நகர்வதற்கு இடமில்லை என்பதாகவும் நீ நினைக்கிறாய். இங்கு எல்லை என எதுவுமே இல்லை என்பதை உனக்கு நான் உணர்த்த வந்தேன்.

நீ தேர்ந்தெடுத்த பாதைகள் உன்னை வழி நடத்தின. நீ தேர்ந்தெடுத்த மனிதர்கள் உன்னை இங்கு அழைத்துவந்தனர். இப்போது நீ திரும்பிப் பார்க்கிறாய். பாதைகள் தென்படவில்லை. உன்னை அழைத்துவந்த மனிதர்கள் இருந்தும் இல்லாமல் இருக்கின்றனர்.

”இனி எங்கு செல்வது, எவருடன் செல்வது?” எனத் தவிக்கிறாய். உனது பரிதவிப்பின் குரல் கேட்டு ஒரு சிலர் ஓடி வருகின்றனர். அவர்கள் உனது இந்த நிலைக்குக் காரணம் என்ன என்று விசாரிக்கின்றனர். “இந்த நிலையிலும் என்னிடம் நீதி விசாரணை எதற்கு? என்னை அரவணைத்துக்கொள்ளுங்கள்.” என்று கூறித் தேம்புகிறாய்.

காலிடறிக் கீழே விழும் குழந்தையை ஓங்கி அடித்துவிட்டு பின்னர் தூக்கிவைக்கும் கூட்டம் இது. தடுமாறிக் குழந்தை கீழே விழுந்தால் அதற்குத் தரைதான் காரணம் எனச் சொல்லி அந்தத் தரையை அடித்து குழந்தையைச் சிரிக்க வைக்கும் கூட்டமிது. குழந்தையின் தடுமாற்றத்துக்குக்கூட நியாயம் கற்பிக்காமல் அரவணைக்காத மனிதர்களிடம் நீ எவ்வளவு அழுதும் என்ன பயன்?

”யாருமே இல்லை” என்கிறாய். “இனி வாழ்வது வீண்” என்கிறாய். அன்பே, இந்த சமூகத்தில் யாருமே இல்லாமல் இருப்பதைவிடப் பேரின்பம் ஏதுமில்லை என்பதை உனக்கு நான் உரைக்கிறேன்.

”சுற்றத்தில் உள்ளவர்கள் கூட்டமாக வாழ்கிறார்கள். நான் தனிமைப்பட்டுவிட்டேன்” என்று கலங்குகிறாய். அவர்கள் கல் மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். நீ உன் உடலைத் தவிர எப்பொருளும் இன்றி விடுதலை அடைந்து நிற்கிறாய்.

துயரத்தில் இருப்பவர்களை அரவணைக்காத மனிதர்கள் ஒருவருக்கொருவர் கல் மூட்டைகள் ஆகின்றனர். உன்னை அணைக்கவும் எவருமில்லை. உன்னால் அணைக்கப்படவும் எவருமில்லை எனும்போது நீ புதுப்பிறவி எடுத்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள். இப்பொழுதுதான் பிறந்திருக்கிறாய். நிர்வாணமே உன்னைப் போர்த்தியிருக்கிறது.

இனிதான் நீ இவ்வுலகை அறிந்துகொள்ளப்போகிறாய். நீ கருவறையிலிருந்தபோது நிகழ்ந்தவை உனக்கு எவ்வாறு நினைவில் இல்லையோ அவ்வாறு இதுவரை நிகழ்ந்தவற்றை நினைவிலிருந்து அகற்றிவிடு.

”நான் எதற்கு வாழ வேண்டும்?” என்று கேட்கிறாய்.

செல்லமே, நீ வாழ்க்கைக்காக மட்டுமே வாழ வேண்டும். யாரும் எதற்காகவும் வாழ வேண்டாம். ஏதேனும் ஓர் இலக்கு உனக்குத் தேவைப்பட்டது. அந்த இலக்குகளை அடைதல்தான் வாழ்க்கையின் பொருள் என்று உனக்குக் கற்பிக்கப்பட்டது.

மனிதர்கள் வளர்க்கும் கழுதைகளுக்கு, அவற்றின் முதுகில் ஏற்றப்படும் சுமைகளுக்கும் இலக்குண்டு. அவற்றுக்கு வழங்கப்படும் தீவனத்திலும் இலக்குண்டு. இங்கே மனிதர்கள் ஒருவரை ஒருவர் கழுதையாக்கி வளர்த்தெடுக்கின்றனர். எல்லோருமே கழுதைகள்தான். ஆனாலும் ஒவ்வொருவரும் தன்னை மனிதர் எனக் கற்பிதம் செய்துகொள்வர்.

எதற்கு வாழ வேண்டும் என்று ஏரியில் வட்டமிடும் நாரை கேட்பதில்லை. எதற்குப் பறக்க வேண்டும் என்று கண்டங்களைக் கடந்து பயணிக்கும் பறவைகள் கேட்பதேயில்லை. செடிகளும் மரங்களும் கயல் கூட்டமும் சிற்றெறும்புகளும் இந்தக் கேள்வி இல்லாமல் வாழ்ந்து மறைகின்றன. ஓர் எறும்பு ஊனமுற்றால் எறும்புக்கூட்டமே விரைந்துவந்து துடிக்கும் எறும்பைத் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறாயா? அந்த எறும்புகள் உறவுகளின் மேன்மையைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை.

”எதற்காக வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு விடை தேட முற்படாதே.

ஏனெனில் வாழ்க்கை என்பது காரண காரியங்களின் தொகுப்பு அல்ல. எந்த விளக்கத்துக்கும் ஆட்படாத எவ்வகை அறிதலுக்கும் உட்படாத ஓர் அற்புதம் வாழ்க்கை. எதற்காக வானம் இருக்க வேண்டும், எதற்காக விண்மீன் இருக்க வேண்டும் என்று கேட்டு உன்னால் விடை காண முடியுமா என்ன? நீயும் ஒரு விண்மீன். நீயும் ஒரு வான் துகள்.

நீ படைக்கப்பட்டிருக்கிறாய். நீ கருவில் உருத்தரிக்கும்போதே உனக்கான வாழ்க்கை உனக்கு வழங்கப்பட்டது. அப்போது உனக்கு மூளை என்ற உறுப்பு தொடக்க நிலை வளர்ச்சியைக் கூடத் தொடவில்லை. சிந்திக்கவே தெரியாத நிலையில் நீ இருந்தாய். சிந்திக்கவே முடியாத வகையில் நீ வளர்ந்தாய்.

இப்போது நீ கேட்கிறாய், ”எதற்காக வாழ வேண்டும்?” என்று. நீ எதற்காகப் படைக்கப்பட்டாயோ அதற்காக வாழ வேண்டும் என்று நினை. நீ வாழ்வதற்குப் படைக்கப்பட்டாய்.

வாழ்க்கை என்பது உனக்குப் பிடித்த வகையில் சுற்றத்தைக் கெடுக்காவகையில் அமைவது. இந்த இரண்டும் இதுவரை உனக்கு அமையாதிருந்திருக்கலாம். அது இறந்த காலமாகட்டும்.

இக்கணம் முதல் நீ வாழத்தொடங்கு. உறவுகள் அற்ற நிலை, பொருளாதாரக் கேடு, பிணியின் கொடுமை என எதுவாகினும் அது உன் விழித்திரைத்தூசு என்பதை அறிந்துகொள். விழித்திரையில் கிடக்கும் தூசு உலகைவிடப் பெரிதுபோல் தோற்றமளிக்கும்.

விழியைவிட வலிமையானது போல் அந்தத் தூசு எரிச்சல் கொடுக்கும். இது ஒரு மயக்க நிலை. கண்களை மூடித் தனிமையில் அமர்ந்து பொறுத்துக்கொண்டிருந்தால் விழியின் ஆழத்திலிருந்து ஊற்று பொங்கி அத்தூசினை அலை ஒதுக்கும் நுரை போலப் புறந்தள்ளிவிடும்.

இப்போது நீ செய்ய வேண்டியது இதைத்தான். ”என் நிலைக்கு என்ன காரணம்?” என அலைபாயாதே. ”என் நிலைக்கு யார் காரணம்?” என்று ஆய்வு செய்யாதே. ”என் நிலை மாற வேண்டும், நான் வாழ வேண்டும்” என்று உணர்ந்தவாறு தனிமையில் கண்கள் மூடி அமர்ந்துகொள். அந்த அமர்வின் நேரத்தை இயன்ற வரை நீட்டித்துக்கொண்டிரு. உன் நிலையைப் பற்றி எவரிடமும் பேசாதே. தப்புவதற்கு வழி என்ன என்று எவரிடமும் கேட்காதே.

உண்மையைப் பேசுபவர்களால் மட்டும்தான் இக்கேள்விகளுக்குப் பதில் வைக்க முடியும். உன் அருகே உண்மையைப் பேசுவோர் இருந்திருந்தால் உனக்கு இந்த நிலையே நேர்ந்திருக்காது. ஆகவே மேலும் மனிதர்களைச் சார்ந்து சிந்திப்பதை நிறுத்து.

வாழ்க்கை மீதான விருப்பத்தை மனதின் ஆழத்திற்குள் நீந்திச் சென்று விதைத்துவிட்டு வா. அவ்விதை முளைக்கும் வரை எனக்கு வாழ்க்கை வேண்டும் என்ற வேண்டுதலை மட்டும் சிந்தனையில் வைத்துக்கொண்டே இரு.

உன்னால் முடியாதவற்றை ”முடியாது” என்று சொல். உனக்குப் பிடிக்காதவற்றை ”செய்ய மாட்டேன்” என்று சொல். உன்னால் முடிந்தவற்றை “செய்வேன்” என்று நில். பிடித்தவற்றை “பிடிக்கும்” என்று கொள்.

இவற்றுக்கும் தடை ஏற்பட்டால் அந்தத் தடைகளுடன் மோதாதிரு. இவற்றையெல்லாம் உன் விருப்பங்களாக்கி சிறிது காலம் பொறுத்துக்கொண்டிரு. உன் விருப்பங்கள் உண்மையிலிருந்து எழுந்தவையாயிருப்பின் உன்னைத் தடுப்போர் தள்ளிச் செல்வர்.

கருப்பை நீரிலிருந்து நீ முளைத்தது போல மனக்கடலின் ஆழத்திலிருந்து உன் விருப்பமும் முளைக்கத் தொடங்கும். உன் வாழ்க்கை ஒரு புதிய வடிவத்துடன் தன் உடலை வளர்த்துக்கொள்ளும். நீ மாறிப்போயிருப்பாய். உன் சூழல் மாற்றமடைந்திருக்கும். பொருந்துவோர் அருகிலிருப்பர். உன்னை வருத்தியோர் விலகியிருப்பர். இதற்கு முன் நீ பார்த்திராத வண்ணங்கள் உன் எதிரே இருப்பதைக் கண்டுகொள்வாய். இதற்கு முன் நீ கேட்டிராத இசை உன் சுற்றத்தில் சுழலக் கேட்பாய். நீ இயல்பாக இருப்பாய். பிறர் உனை வேடிக்கை பார்ப்பர். உன் விருப்பங்கள் யாவும் நிறைவேற்றப்படும். நீயோ எந்த முயற்சியும் செய்யாதிருப்பாய்.

”உனக்கு மட்டும் எப்படி இது நிகழ்கிறது? உனக்கு மட்டும் எப்படி எல்லாம் கிடைக்கிறது?” என்று பிறர் கேட்பர். ”தேவையானவற்றை மட்டும் கேட்டால் தேவையானவை யாவும் கிடைக்கும்” என்று நீ அவர்களுக்குக் கூறுவாய்.

உன்னைச் சுற்றி உறவுகள் கூடும். அவ்வுறவினர் உனது ஒரு துளி கண்ணீரையும் தம் நாவால் துடைத்தெடுப்பர். உனக்கான உறவுகள் அறிவில் குறைந்தோராக அன்பில் நிறைந்தோராக இருப்பர். பிறந்த குட்டியின் உடலை மூடியிருக்கும் நச்சு நீரை நாவால் நக்கித் துடைக்கும் ஆடு போல உன் உறவுகள் அன்பால் நிறைந்திருப்பர். உன் நோய்கள் முளைத்த தடம் தெரியாமல் அழிந்துபோகும். உன் பொருளாதாரம் உன் இடுப்புப் பையில் தொங்கும் சிறு பொருளாக மாறும். இதுவே உன் புதுப் பிறவி.

இப்பிறவியில் உன்னைப் பார்த்து “நீ எதற்காக வாழ்கிறாய்?” என்று எவரேனும் கேட்டால், புன்னகையுடன் நீ சொல்வாய் ”சக மனிதர்களையும் பிற உயிரினங்களையும் அரவணைத்து அன்பு செலுத்த வாழ்கிறேன்” என்று.

“உன் வாழ்க்கைக்கு இலக்கென்ன?” என்று எவரேனும் கேட்டால், “மிக நீண்ட பிறவித் தொடர்ச்சியில் வாழ்க்கை என்பதே ஒரு இலக்குதான். அதற்குள் வேறு இலக்கு தேவையில்ல. நீர் என்பதே குளிர்ச்சிதான். நீருக்குள் குளிர்ச்சியைத் தேட வேண்டியதில்லை. ஆகவே என் வாழ்க்கையே என் வாழ்க்கையின் இலக்கு.” என்று பதிலுரைப்பாய்.

எதிரே இருப்போர் உன்னைப் போற்றினாலும் தூற்றினாலும் உன்னிடமிருந்து ஒரே வகையான புன்னகை மட்டும் வெளிப்படும். அந்தப் புன்னகை என்னும் மலரின் காம்பு வழிப் பயணித்து அதன் வேர் நோக்கிச் சென்றால் உன் மனதின் ஆழம் தென்படும். அன்பே, அந்த ஆழத்தின் இருள் படர்ந்த குளிர்ச்சியாக நான் நிறைந்திருப்பேன்.

தற்கொலை என்ற சிந்தனை வரும்பொழுது ஒன்றைப் புரிந்துகொள். ஒரு புதுப்பிறவிக்கான வாய்ப்பு உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்பிறவி மரணத்தினால் விளைவதல்ல. உன் வாழ்க்கையில் விளைவது.

(இணைப்புப் படம்:
முற்றிலும் கைவிடப்பட்ட, உவர் நிலமாக இருந்த பகுதி இப்பொழுது நீர் நிறை நிலமாகியுள்ளது.
இடம்: காருகுடி கண்மாய், இராமநாதபுரம்)

ஆக்கம்:ம.செந்தமிழன்

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள் பலரும் தெரிந்து கொள்ளட்டும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.