இன்று தேநீர்க் கடையில் தேநீர் கேட்டால் ‘சர்க்கரை போட வேண்டுமா’ என்கிற கேள்வி முதலில் கேட்கப்படுகிறது. அன்று ‘ஸ்ட்ராங்கா, லைட்டா’ என்று மட்டுமே கேட்பார்கள்.

0 338

முன்பெல்லாம் உடல்நலம் சரியில்லை என்றால் குடும்ப மருத்துவர் ஒருவர் இருப்பார். அவர் குடும்பமே நமக்குப் பழக்கமானதால் அவர் குடும்ப மருத்துவர். அவரிடம் அத்தனை அத்துமீறல்களுக்கும் இடமுண்டு.

தன்முனைப்பில்லாத தகைமை. எந்நேரமும் சென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டலாம். அவர் கனிவோடு கதவைத் திறப்பார்.

தேவைப்பட்டால் சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டுக்கும் வருவார்.

வீட்டு உறுப்பினர்கள் உடல்பற்றிய தகவல்கள் அவருக்கு அத்துபடியாகியிருக்கும். யாருக்கு சூட்டு உடம்பு, யாருக்கு சீத உடம்பு என்பது தெரியும். நாடி பிடிப்பார், வெப்பமானி வைப்பார்.

என்ன பிரச்சினை என்று உடனே சொல்லி விடுவார். அவரோடு ஊசி போட உதவியாக கம்பவுண்டர் ஒருவர். அவரே தயாரித்த மிக்சர் தருவார். இரண்டே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் காய்ச்சல் ஓடிப்போகும். அவரிடம் ஊசியும் இருக்கும். கொதிக்கிற நீரில் ஊசியைப் போட்டு ஊறவைத்து பிறகு சொருகுவார்கள். ஊசி போட்டால் உடல் உடனே சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இப்போதும் கிராமப்புறங்களில் உண்டு.

எங்கள் ஊரில் வையாபுரி டாக்டர், நமச்சிவாயம் டாக்டர் என இருவர் இருந்தனர். அவர்கள் சிரிப்பிலேயே பாதி வலி போய்விடும். வையாபுரி டாக்டர் கஞ்சிதான் சாப்பிட வேண்டும் என்பார். அதிகம் வலியுறுத்திக் கேட்டால் ஒரு இட்லி சாப்பிடச் சொல்வார்.

நமச்சிவாயம் டாக்டர் மருத்துவமனை யில் ‘நோய்நாடி…’ என்று தொடங்கும் குறளை எழுதி வைத்திருப்பார். தமிழ்ப் பற்றாளர். பெண்ணுக்கு நற்பசலை என்று பெயர் வைத்திருந்தார். பரிச்சயமான முகங்கள் நம்பிக்கையை இதயத்தில் நங்கூரம் பாய்ச்சின.

அந்தக் காலத்தில் மருத்துவரைப் பார்ப்பது வீட்டு வைத்தியம் பலனளிக்காத போதுதான். பெரியவர்கள் அனுபவத்தின் காரணமாக எளிய வைத்திய முறைகளை முன்வைப்பார்கள்.

சளியில்லாமல் இருமல் தொடர்ந்து வந்தால் உள்நாக்கு தடித்திருக்கிறது எனப் பொருள். கொஞ்சம் மிளகாய்ப் பொடியை உள்நாக்கில் வைப்பார்கள். எச்சில் வழியும்படி ஐந்து நிமிடம் வாயைத் திறந்து வைத்திருக்க வேண்டும். இருமல் சரியாகிவிடும். மூச்சுப் பிடித் தால் இரண்டு கைகளிலும் உலக்கை களைப் பிடிக்கச் சொல்ல சரியாகிவிடும். சூடுபிடித் தால் சொட்டுச்சொட்டாக சிறுநீர் வரும். ஒரு குவளை வெந்நீர் குடித்தால் போதும்.

தொப்புளில் விளக்கெண்ணெயைத் தடவச் சொல்வார்கள்.

விளையாடும்போது அடிபட்டால் கிணற்றுப்பூண்டை கசக்கி காயத்தில் வைத்தால் தழும்பே ஏற்படாமல் ஆறி விடும். ஆழமான வெட்டாக இருந்தால் சுண்ணாம்பைக் குழைத்து அங்கு தடவி னால் ரத்தம் நின்று காயம் சரியாகிவிடும். ஒருமுறை தேங்காய் உரிக்கையில் என் இடது ஆட்காட்டி விரலில் கொடுவாள் பட்டு ஆழமாகக் காயம் ஏற்பட்டது. சுண்ணாம்பைக் குழைத்து அப்பினேன். சரியாகிப் போனது.

நகச்சுத்தி வந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொதிக்கிற வெந்நீரில் விரலை நனைத்தால் போதும். எந்த மாத்திரையும் தேவையில்லை. கண்ணில் கட்டி வந்தால் நாமக்கட்டியைக் குழைத்து தடவினால், சுவடில்லாமல் அமுங்கிவிடும். இல்லாவிட்டால் கிராம்பைத் தேய்த்து அதன் சாறைத் தடவினால் போதும்.

தேள் கடித்தால் மிதிவண்டியின் விளக் குக்குச் செல்லும் காயிலில் உள்ள செம்புப்பகுதியைக் கடிவாயில் வைத்து சக்கரத்தைச் சுற்றினால் வலி போன இடம் தெரியாது. அம்மை வந்தால் கட்டிலில் வேப்பந்தழை, குடிக்க மோர், உண்ண மொந்தன் வாழைப்பழம். வீட்டிலேயே வயிற்றுப் பிரச்சினைக்கு இரவில் படுக்கும் முன் ஒரு கரண்டி விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். வயிறு சுத்தமாகும், கழிவறை அசுத்தமாகும்.

ஜீரணக்கோளாறு இருந்தால் நெளிவுக் குப்பியில் இருக்கும் ஓமத்திரவத்தை குடிக்கக் கொடுப்பார்கள். வலி பறந்து போகும். சளி இருந்தால் ஊசியில் மிள கைக் குத்தி விளக்கில் சுட்டு முகர்ந்தால் அனைத்து அழுக்கும் வந்துவிடும்.

இருமல் இருந்தால் வாயில் நான்கு மிளகை அடக்கிக்கொண்டு தூங்கச் செல்வோம். அடுத்த நாள் குரல் சகஜமாகிவிடும். என் அம்மா ஆசிரியை என்பதால் குரலுக்கு வேலை அதிகம். சரமாரியாக இருமல் ஒருமுறை படையெடுத்தது. தெரிந்த ஆசிரியர் கடுக்காயை வாயில் அடக்கி வைக்கும்படி சொல்ல இருமல் நின்றது. கடுக்காய் வைத்தியம் மீண்டும் மிடுக்காய்ப் பேச வைத்தது.

மஞ்சள்காமாலை வந்தால் எங்கள் கிராமமான சிவதாபுரத்தில் மருந்து ஊற்றுவார்கள். காலையில் சுடுசோறில் தயிர் போட்டு சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டும். கண்களில் மருந்து ஊற்றியதும் தாரை தாரையாக கண்ணீர் வரும். எரிச்சல் தாங்க முடியாது. இரண்டு முறை ஊற்றினால் சரியாகிவிடும். அதற்கென்றே ஒரு குடும்பம் இருந்தது. பணம் வாங்கவே மாட்டார்கள்.

காமாலைக்குப் பத்தியம் முக்கியம். இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக வெந் தயம் போட்டு ஆட்டுவார்கள். எண் ணெய்ப் பண்டம் அறவே கூடாது. சாதத்தைக் குழைத்துக் கொடுப்பார்கள். ஆறு மாத பத்தியம் அவசியம்.

அன்று பள்ளிக்கே மருத்துவக் குழு வரும். உயரம், எடை எல்லாம் அப்போது தான் கணக்கிடப்படும். தொழுநோய் இருக்கிறதா என சோதனை செய்வார் கள். கடைசியில் பெரும்பாலான மாணவர்களுக்கு, ‘போஷாக்கான உணவு அருந்தவும்’ என்று எழுதிக் கொடுப்பார்கள். அன்று குண்டு மாணவர்கள் குறைவு.

இன்று குடும்பம் என்கிற அமைப்பு சிதைய, குடும்ப மருத்துவர் என்கிற நிலையும் குறைந்துவிட்டது. இன்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவர். என்ன படித்திருக்கிறார் என்பது தெரிந்த பிறகே சிகிச்சைக்குச் செல்கிறார்கள் மக்கள். இன்று கைராசியைவிடக் கட்டிடம் முக்கியம். அன்று மருத்துவர் சொன்னது வேதவாக்கு. இன்று இணையத்தில் அரைகுறையாக படித்து விட்டு மருத்துவரையே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்பவர்கள் அதிகம்.

நுகர்வோர் மன்றங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வில் அனுபவத்தில் வியாதியை அறிய முடிந்தாலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் கட்டாயம். யாரும் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. பரிசோதனைகள் நடத்தினால்தான் இன்று பலருக்குத் திருப்தி. அப்போதுதான் அவர்களுக்கு அது பெரிய மருத்துவமனை. இன்று மருத்துவம் அந்தஸ்தோடு ஐக்கியமாகிவிட்டது.

இன்று காய்ச்சல் வந்தால் லேசில் சரியாவதில்லை. எங்கு பார்த்தாலும் மருத்துவமனை. திரும்புகிற திக்கெல்லாம் மருந்துக் கடைகள். பெரிய மருத்துவமனைகளில் அரசைவிட அதிக சிவப்புநாடா முறை. இப்போது உள்ளே போவதற்குள் கோப்பு ஒன்று போடப்பட வேண்டும். அதிலிருந்தே சிகிச்சை ஆரம்பம். மருத்துவர் நினைத்தாலும் மாற்ற முடியாத வழிமுறைகள். அறுவை செய்பவர் ஒருவர், தையல் பிரிப்பவர் வேறொருவர், தொடர் சிகிச்சை செய்பவர் இன்னொருவர் என்கிற எதார்த்தங்களும் உண்டு. மருந்து வாங்குவதற்கு முதலில் சீட்டை மருந்தகத்தில் தர வேண்டும்.

அத்தனை மருந்தும் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்து, பணம் கட்ட அனுப்புவார்கள். பிறகு பணம் கட்டி இன்னோர் இடத்துக்குச் சென்று ஒப்படைக்க வேண்டும். நீள்வரிசையில் நம் பெயரை எப்போது அழைப்பார்கள் எனக் காத்திருந்தால் நீதிமன்றத்தைப்போல மூன்று முறை நம் பெயர் கூவப்படும்.

அன்று சர்க்கரை என்பது ஒன்றிரண்டு பேருக்கு அரிதாய் இருக்கும். இன்று தேநீர்க் கடையில் தேநீர் கேட்டால் ‘சர்க்கரை போட வேண்டுமா’ என்கிற கேள்வி முதலில் கேட்கப்படுகிறது. அன்று ‘ஸ்ட்ராங்கா, லைட்டா’ என்று மட்டுமே கேட்பார்கள். சிலர் பாசந்தியைச் சாப்பிட்டுவிட்டு சர்க்கரை இல்லாத காபி குடிக்கும் கறாரான பேர்வழிகள்.

அன்றிலிருந்து இன்றுவரை மருத்துவமனைக்கு பிரசவத்தைத் தவிர வேறெதற்குச் சென்றாலும் மனம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

– நினைவுகள் படரும்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.