இன்னும் காலம் கடந்துவிடவில்லை அழிவின் விளிம்பில் நிற்பதை வாருங்கள் காக்க வேண்டும்

0 504

உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நம் வீடுகளைச் சுற்றியே, நம் இளம் வயது நண்பர்களாக எந்நேரமும் சுற்றித் திரிந்த இச்சிட்டுக்குருவிக்கு நம் மலரும் நினைவுகளில் சிறப்பான ஒரு தனியிடம் உண்டு. சிட்டுக்குருவி கூடு கட்டினால் குடும்பத்துக்கு நல்லது, கூட்டைக் கலைப்பது பாவம் போன்ற நம்பிக்கைகள் நம் முன்னோரிடத்தில் இருந்தன. அக்காலத்தில் முற்றத்தில் காய வைத்திருக்கும் நெல்லைக் கொத்தித் தின்ன இக்குருவிகள் கூட்டங் கூட்டமாக வரும்.

ஆனால், இப்போதெல்லாம் இக்குருவியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. நம்மூரில் மட்டுமன்றி, உலக முழுதுமே இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கல குருவி எனும் சிட்டுக்குருவிதான்.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.

இதன் அழிவிற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுபவை:-

1.வாழ்விடங்களின் அழிவு

அடைக்கல குருவி எனப்படும் இந்த வகை சிட்டுக்குருவிக்கு மரங்களில் கூடு கட்டத்தெரியாது நமது வீடுகளில் உள்ள பொந்துகள் மற்றும் இடுக்குகளில் வைக்கோல் மற்றும் நார்களை திணித்து முட்டையிடும்.நம்முடைய நவீன வீடுகளில் கொசு கூட நுழைய விடாமல் அடைத்து விடுகிறோம் இதில் குருவிக்கு இடம் ஏது.
ஆக குருவிகள் வாழ்விடங்களை இழந்தன.
நமது இல்லங்களை தமது வாழ்விடங்களாக்கி கூடு கட்டி குஞ்சு பொரித்து குதூகலித்து திரிந்த இந்த சின்னஞ்சிறு உயிரைப்பற்றி நாம் கவலையின்றி நாம் வீடுகளை வடிவமைத்து விட்டோம்.

2.உணவு தட்டுப்பாடு

அன்று முற்றத்தில் காய வைத்திருக்கும் தானியங்களை குருவிகள் தின்று பசியாரும். முற்றத்தில் சிந்தியிருக்கும் நீரை குடித்து குளித்து கும்மாளமிட்டு செல்லும் இன்று அதற்கு வாய்ப்பே இல்லை தண்ணீர் குழாய் வழியே வந்து குழாய் வழியே பாதாள சாக்கடைக்கு செல்கிறது.ஆக வந்தது தட்டுப்பாடு உணவுக்கும் நீருக்கும்

3.நவீன விவசாயம்

குருவிகள் தானியங்களை மட்டும்தான் உணவாக உண்டாலும் குஞ்சு பொரித்திருக்கும் சமயம் குஞ்சுகளுக்காக பூச்சிகளை பிடித்துவரும்.நவீன விவசாயம் என்ற பெயரிவ் பூச்சிக்கொல்லி விஷங்களை அதிக அளவில் பயன்படுத்தியதால் குருவிகளின் உணவு சங்கிலி பாதிப்புக்கு உள்ளானது.

4. குருவிகள் பகல் பொழுதில் பெரிய வேட்டை பறவைகளிடமிருந்து தப்புவதற்கு அடர்ந்த மரங்கள் உதவின.

நாம் கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை வெட்டி விட்டோம்.

5.சுற்றுச்சூழல் பற்றி கவலையின்றி காற்றையும்,நீரையும் மாசுபடுத்தியதன் காரணமாக குருவி போன்ற பல உயிரினங்களின் அழிவுக்கு காரணமாகிவிட்டோம்.

இறுதியாக குருவிகளை அழிவில் இருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்.

1.குருவிகளுக்கு நஞ்சில்லா தானியங்களை Feeder மூலமாவோ அல்லது மண்தட்டுக்களிலோ வைக்கவேண்டும்.

2 தண்ணீர் சிறிய மண்தட்டுக்களில் வைக்கவேண்டும்.

3. குருவிகள் கூடு கட்ட வீடு தோறும் சிறு மரப்பெட்டிகள் அல்லது மண்ணால் ஆன கூடுகளை வைப்போம் (அட்டைப்பெட்டி வேண்டாம்)

இன்னும் காலம் கடந்துவிடவில்லை அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை காப்பாற்றுவோம் வாருங்கள் நண்பர்களே

இதனையும் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.