இனி யாரும் இதுபோல பாதிக்கப்படகூடாது என்பதற்காகவே இங்கு பதிவிடுகிறேன்..!

0 5,183

யுனிவர்சல் டிராவல்ஸ் என்று ஒரு டிராவல்ஸ் இருக்கிறது. எங்கள் ஊருக்கு சென்னையிலிருந்து தினமும் பேருந்துகள் விட்டிருக்கிறார்கள். நம்பி அதில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தேன். திருவான்மியூர் டெப்போ அருகேயுள்ள அடையார் பேக்கரியில் போர்டிங் பாயிண்ட். நான் அங்கு சென்று நின்றுகொண்டிருந்தேன். வரவேண்டிய நேரம் நெருங்கி, தாண்டியும் விட்டது. வண்டி வரவில்லை.

நான் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்தால் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வெகுநேரம் அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றும் நடப்பதாயில்லை. சற்று நேரம் கழித்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் இன்னொரு எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைத்தால், அது டிரைவருடைய எண். “வண்டி ஓ.எம்.ஆர். வழியா போகுது. நீங்க ஒண்ணு பண்ணுங்க… நீங்க நிற்கிற இடத்திலிருந்து அப்படியே சிக்னலை கிராஸ் பண்ணி ஒரு போலீஸ் பூத் இருக்கும். அதுக்குப் பக்கத்துல வந்து நில்லுங்க” என்றார். கையில் மிகப்பெரிய பயணப் பை. அதை எடுத்துக்கொண்டு எப்படிச் செல்வதென்று புரியவில்லை. ஆட்டோவில் போகுமளவுக்கும் தூரமில்லை. நடந்துதான் செல்லவேண்டும். வேறு வழி. வியர்க்கவிறுவிறுக்க எடுத்துச் சென்றதில் வீஸிங் வேறு சேர்ந்துகொள்ள எரிச்சல் மண்டியது. சொன்ன நேரத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதிகமாக காக்கவைத்தது மட்டுமல்லாமல் சுமையைத் தூக்கிக்கொண்டு நடக்கவேண்டி வந்ததில் சோர்ந்து போயிருந்தேன். அப்பாடா என்று பேருந்தில் போய் படுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஸ்லீப்பர் பேருந்தில்தான் பயணச்சீட்டு போட்டிருந்தேன். 850 ரூபாய்.

பேருந்து வந்தது. ஏறிப் பார்த்தால் அடுத்த எரிச்சல். அது ஸ்லீப்பர் பஸ்ஸே இல்லை. சீட் தான் இருந்தது. “நான் இந்த பஸ்ஸில் ரிசர்வ் செய்யவில்லை. ஸ்லீப்பர் பஸ்ஸில் போட்டேன். நீங்கள் சீட் தந்தால் எப்படி? ” என கேட்க, “அந்த பஸ் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதனால் இந்த பஸ்ல மாத்தி விட்டிருக்காங்க” என்றார்.

“அப்போ எனக்கு ரீஃபன்ட் பண்ணுங்க. சீட் என்றால் குறைவான தொகைதானே?” என்று கேட்க, ஹெட் ஆஃபீஸில் கேட்டுச் சொல்கிறோம் என்று பதில் வந்தது. நானும் அடுத்த ஒன்றரை மணிநேரத்திற்கு ஹெட் ஆஃபீஸில் என்ன சொல்றாங்க என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களும் சளைக்காமல் ‘போன் எடுக்கவில்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தனர். பின் களைப்பில் தூங்கிவிட்டேன்.

“நாகப்பட்டினம் எல்லாம் எந்திருச்சு வாங்க” என்று குரல் கேட்க, பதட்டமாகி எழுந்து பையை எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக இறங்குமுன் கேட்டேன் “கடைசிவரை உங்க ஹெட் ஆஃபீஸ்ல போனை எடுக்கலை இல்லையா?” என்றேன். அவர்களும் “ஆமாம். எடுக்கலை” என்றனர். “”உழைச்ச காசுங்க…சும்மா காய்க்குதா காசு…உங்க க‌ம்பெனிக்கு அநியாயமா தர” என்று புலம்பிவிட்டு, தொலையுது போ என்று இறங்கிவிட்டேன். ஆனால்..இது என்ன…? இது என்ன இடம்? இது நாகப்பட்டினம் இல்லையே…தூக்கி வாரிப் போட்டது. பேருந்து கிளம்பத் தயாராக, நான் மீண்டும் ஏறிவிட்டேன். “இது நாகப்பட்டினம் இல்லையே. எதுக்கு இங்கே இறக்கி விடுறீங்க?” என்று கேட்டேன்.

“வண்டி பைபாஸ் வழியா வேளாங்கண்ணி போகுது. அதனால..” என்று ஏதோ சொல்ல வந்தார் அவர். எனக்குள் எங்கிருந்து அத்தனை ரௌத்ரம் வந்ததென்று தெரியவில்லை. ஒரு ஆட்டம் ஆடிவிட்டேன். “இறங்கமுடியாது. இருட்டில் இப்படி வந்து நட்ட நடுக்காட்டில் இறக்கிவிடுவதற்கு நான் எதற்கு 850 ரூபாய் கொடுத்து வரணும்? ஏற்கனவே ஸ்லீப்பர் புக் பண்ணி சீட்ல வந்திருக்கேன். நாகப்பட்டினம்போகாது. நாகூருக்கு முன்னாலேயே பைபாஸ்ல இறங்கணும் என்று சொல்லி இருந்தால் ஏறி இருக்க மாட்டேன்” என்று கடுமையான தகராறு செய்தேன். பிற பயணிகளுக்கு ஒருவாறு புரிந்தது. நான் என் சீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டேன். க்ளீனர் என்னிடம் வந்து “வேளாங்கண்ணிக்குப் போயிட்டு ரிட்டர்ன் வரும்போது நாகப்பட்டினம்தான் வருவோம். அப்போ இறங்கிக்கிறீங்களா?” என்று கேட்க என் எரிச்சல் இரண்டு மடங்கானது. “முடியாது” என்றேன் திட்டவட்டமாக. “இப்போ வண்டியைத் திருப்பி நாகப்பட்டினம் பஸ்ஸ்டான்டில் என்னை இறக்கி விட்டே ஆகணும்” என்று கத்தினேன்.

எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஓர் அயல்நாட்டுக்காரர் ஆங்கிலத்தில் என்ன நடந்தது என்று கேட்டுவிட்டு வியப்பாகச் சொன்னார். “இந்த இரவு நேரத்தில் இப்படியா நடுவில் இறக்கிவிடுவார்கள்? அதிலும் ஒரு பெண்ணை? இது பாதுகாப்பில்லை. நீங்கள் சத்தம் போட்டது சரிதான்” என்றார். வேறு வழியின்றி பேருந்தைத் திருப்பி நாகப்பட்டினத்துக்குச் செலுத்தினார் ஓட்டுநர்.

பஸ்ஸ்டான்டில் இறங்கும்போது அந்த வெள்ளைக்காரர் சொன்னார். “இவ்வளவு தூரம் நீங்க எப்படி வந்து சேர்ந்திருப்பீங்க. இட்ஸ் குட் தட் யூ ஹேவ் ஃபாட் ஃபார் இட்” என்றார். நன்றி சொல்லி புறப்பட்டேன்.

*

ஒரே நாளில் மீண்டும் சென்னை திரும்பவேண்டும். அதே யுனிவர்சல் டிராவல்ஸில் என் தந்தை டிக்கெட் புக் செய்துவிட்டு வந்தார். “இரவு இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி ஏதும் செய்துவிட மாட்டீர்களே?” என்று விலாவரியாக நடந்ததைச் சொல்லிவிட்டுத்தான் டிக்கெட் புக் செய்திருக்கிறார் அப்பா.

இரவு யுனிவர்சல் பஸ் நிற்குமிடத்துக்கு வந்து நின்றால் பேருந்து வரவில்லை. டிராவல்ஸின் ஊழியரிடம் கேட்க அவர் “பஸ் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதனால் உங்களுக்கு வேற பஸ் வரும். அதுல ஏத்தி விடுறேன்’ என்றார். நேற்று சொன்ன அதே காரணம். நான் என்னவாகி இருப்பேன் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

மூன்று பேர் என்னைப் போலவே ஸ்லீப்பர் புக் செய்துவிட்டு வந்தவர்கள் சீட்டில் போகவேண்டும் என்றதும் சண்டை போட்டனர். அந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. பயணிகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாமல் மரியாதை இல்லாமல் ஊழியர் பேச, பயணியும் பதிலுக்கு மரியாதைக் குறைவாகப் பேச அது பெருங்கூட்டம் கூடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதாக மாறியது. இவர்களின் தாக்குதலில் பயணியோடு வந்த பெண் குழந்தை ஒன்று இடையில் சிக்கி அடிபட்டு கீழே விழுந்தாள். அவள் அலறித் துடிக்க, நான் அவளை ஓடிப்போய்த் தூக்க, அவளோ தன் தந்தையை யாரோ அடிப்பதையும், அவர் திருப்பி அடிப்பதையும் பார்த்து காயம் தந்த வலியோடு சேர்ந்து கதறியபடி இருந்தாள். அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. அக்குழந்தையின் தாய் தன் கணவரைப் பார்த்து ‘குழந்தை கீழே விழுறதுகூட தெரியாமல் என்ன சண்டை உங்களுக்கு” என்று கத்திக்கொண்டிருந்தார்.

அடித்துக்கொண்ட இரு தரப்பும் போன் செய்து ஆட்களை உதவிக்குக் கூப்பிட கொஞ்ச நேரத்தில் ஒரு அது குழு மோதல் போல ஆக, எனக்குப் பதட்டமானது. ஏனெனில் இருதரப்புமே வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததுதான். அவர்களுக்கு உதவிக்கு வந்தவர்களும் அவரவர் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். என் தந்தைக்கும் என் போலவே அச்சம் தொற்றிக்கொண்டது. நிலைமை கைமீறிப் போவது போல் தெரிந்தது. காவல்துறையை அழைப்பதுதான் சரியாக இருக்குமென்று யோசித்தபோதே தகவல் தெரிந்து காவலர்கள் வந்து விட்டனர். ஏதோ பஞ்சாயத்து நடந்தது. இதில் பயணி ஒருவருக்கு அவர் அணிந்திருந்த சட்டை கிழிந்து வெற்றுடம்புடன் சுற்றிக்கொண்டிருந்தார் கடும் கோபத்துடன். யாருக்கோ போன் செய்தவுடன் ஒரு டீஷர்ட் அவருக்கு வந்து சேர்ந்தது. சுற்றி நின்றிருந்த கூட்டத்தை உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவர் வந்து ‘எல்லோரும் கலைஞ்சு போங்க” என்று அதட்ட கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது. அப்பெண் குழந்தையின் தாய் எங்கே போலீஸ் கேஸாகிவிடுமோ என்று பதறியபடி புலம்பிக்கொண்டிருந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

இதற்கு நடுவில் பேருந்து வந்தது. நான் முதல் நாளிரவு ஏறிய அதே பேருந்து. நான் ஒன்றும் பேசாமல் ஏறினேன். ஏறுவதற்கு முன் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பெண்குழந்தையின் குடும்பம் ஒரு காரில் ஏறி வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானது. அவர்கள் அன்று சென்னைக்குப் பயணிக்கவில்லை. அந்தப் பெண்குழந்தை அப்போதும் கண்ணீரை நிறுத்தவில்லை என்பதே என்னை என்னவோ செய்தது.

முதல் நாள் போலவே ஸ்லீப்பருக்கு பதில் சீட். பணம் போனது போனதுதான். முதல் நாளின் அதே காரணம். ஆனால் ஒரு வார்த்தையும் சண்டை போடும் மனநிலையில் இல்லை

ஏனோ யுனிவர்சல் டிராவல்ஸின் அந்த அடிவாங்கிய ஊழியரின் அலட்சியப்பேச்சையும் மன்னிக்கமுடியவில்லை. அதனால் அவர் அடிவாங்கியதையும் மறக்க முடியவில்லை. அந்தப் பெண் குழந்தையின் கண்ணீரையும் மறக்க முடியவில்லை. மனம் சோர்வாய் இருந்தது. அப்பாவும் அம்மாவும் எனக்கு கையசைக்க, பேருந்து சென்னைக்குக் கிளம்பியது.
#Universel #Travels #Nagapattinam #UniverselTravels #Tourism
-கவின் மலர் (முகநூலில் பதிவு)

You might also like

Leave A Reply

Your email address will not be published.