இதற்கெல்லாம் பதில் இல்லையென்றால் கண்டிப்பாக வரலாறு மறைக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்..?

0 928

கீழடி அகழ்வாராய்ச்சி வரலாறு.

பாலசுப்பிரமணியன் ஆசிரியர் பள்ளிகளில் பணியாற்றியபோது தொல்லியல் படிப்பு படித்து வந்தார். அதனால் அவர் எந்த பள்ளியில் பணியாற்றினாலும் மாணவர்களிடம் அந்த ஏரியாவில் ஏதாவது அபூர்வ பொருள் கொண்டுவந்தால் மார்க் அதிகமாக போட்டு மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது அவருக்கு பழக்கம்.

அப்படி கீழடியில் பணியாற்றும் போது கீழடி ஊராட்சியில் உள்ள பள்ளிச்சந்தை புதூர் எனும் சிற்றூரில் ஒரு இஸ்லாமிய மாணவர் ஒரு அபூர்வ பொருள் கொண்டுவந்து கொடுக்க, அப்பொருளை தான் படிக்கும் தொல்லியல் ஆசிரியரிடம் காண்பிக்க, அவ்வாசிரியர் சென்னையில் தொல்லியல் ஆசிரியர்கள் மீட்டிங்கில் காண்பிக்க, அவர்களும் அந்த பொருள் மீது ஆர்வம் காட்டினர்.

பாலசுப்பிரமணியன் ஆசிரியர் அந்த பொருள் கிடைத்த இடத்தை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விவரம் சேகரித்து தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதினார். மீண்டும் மீண்டும் கடிதங்கள் எழுதியும் பொருள்களை அனுப்பியும் தொடர்ந்தார்,,, தொடர்ந்தார் 40 வருடங்களாக…இது ஒரு பக்கம் இருக்க…

சுமார் 20 வருடத்திற்கு முன்பு பள்ளிச்சந்தையில் ஒரு தெருவில் பகல் 11 மணியளவில் பூமி இரண்டாக பிளந்தது. அது 5இஞ்ச் அகமும் 100 அடி நீளமும் இருந்தது. மக்கள் பீதியில் இருக்க Fire Service வண்டி வந்தது. தண்ணீரால் பிளவு நிரப்பப்பட்டது. சிறிது நேரத்தில் மூடிக்கொள்ள பீதி அகன்றது. பிறகு…இன்னொரு நாளில்…

கீழடி பள்ளியின் எதிரில் பலவருட ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த நிழலில் ஊரே ரெஸ்ட் எடுப்பார்கள். அவ்வளவு பெரிது. அந்த மரத்தில் ஒரு விதமான விஷ வண்டுகள் வர ஆரம்பிக்க மக்கள் பீதியாகி வண்டுகளை அழிக்க தீயிட்டு அழித்தனர். விளைவு நாளடைவில் மரம் இறக்க நேரிட்டது. ஒருநாள் வேறோடு சாய்ந்தது. அந்த மரத்தினடியில் ஒரு பெரிய தாழிப்பானை. கிராமம்தானே. பானையில் தங்கம் இருந்ததென்றனர். பானையில் விதை வைத்து மரம் வளர்க்கப்பட்டது என்றனர். எனக்கும் முழு விவரம் தெரியவில்லை.. பிரிதொரு நாளில்…

தென்னந்தோப்பில் இடத்தில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. உள்ளே கட்டிட அமைப்பு போல தெரியவே, கிணறு தோண்டும் பணியை நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இவ்வாறாக சிறிதும் பெரிதுமாய் பல சம்பவங்கள் நடக்க,,, மக்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தொல்லியல் துறை அதிகாரிகள் பத்து கி.மீ. சுற்றளவில் ஊர்களை பழங்கால கோவில்கள்,, கீழடி கொந்தகை VAO Office, RI Office, ஊராட்சிமன்ற அலுவலகங்களை அலசினர். ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனர்.

ஒருநாள் தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் அவர்கள் பாலசுப்பிரமணியன் ஆசிரியரை சந்தித்து இருவரும் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் தேர்வுசெய்து இட உரிமையாளரிடம் பேசி ஒரு மாதம் மட்டும் என ஆசிரியருக்காக இட உரிமையாளர் கொடுக்கிறார். தோண்டும் வேலை ஆரம்பம்…

வைகை ஆற்றின் சீற்றத்தால்தான் ஒரு நகரம் மூழ்கியிருக்க வேண்டும். 110 ஏக்கர் வைகை ஆற்றின் மட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரத்திலுள்ள அந்த பண்டைய தமிழ் நாகரீகத்தின் இடத்தில் ஒரு இரு செண்ட் அகலம் மட்டுமே தோண்டப்பட்டது. உள் ரகசியம் வெளி வரவே முறையாக நிதி பெற்று இட உரிமையாளர்களிடம் பேசி தென்னை மரங்கள் இறந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பெற்று 2015 ல் நான்கு மாதம் முதல்கட்டமாக 80 சென்ட்டில் தோன்டப்பட்டது.

அமர்நாத் தலமையில் அவருக்கு அடுத்தபடியாக மூன்று அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் ஏழு சூப்பர்வைசர்கள் பொதுமக்கள் அன்றாடம் 70 லிருந்து 80 பேர் வரை பணியாளர்கள் கொண்ட டீம் களத்தில் இறங்கியது.
வேலை பார்த்த அண்களுக்கு கூலியாக 265 ரூபாயும் பெண்களுக்கு 225 ரூபாயும் வாரம் சனிக்கிழமை மாலையில் வழங்கப்பட்டது. டெண்ட் அமைந்த இடத்துகாரர் சந்திரனுக்கும் நைட் வாட்ச்மேனாக நியமித்து 265 ரூபாயும் வழங்கப்பட்டது.

கிடைத்த பொருட்களை அன்றாடம் சேகரிக்கப்பட்டு அழகாக பேக் செய்யப்பட்டு சந்திரன் என்பவரது இடத்தில் அமைக்கப்பட்ட டெண்டில் பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மெல்ல விசயம் மக்களுக்கு தெரியவர, பார்வையிட வருகிறவர்களிடம் அமர்நாத் அவர்கள் அன்பொழுக பேசியும் உபசரித்தும் வரலாற்று பொருட்களை பார்வையிட அனுமதித்தும் பணியாளர்களிடம் அன்பொழுக பழகியும், இட உரிமையாளர்களிடம் அரவனைத்தும், மென்மையாக அருமையாக வேலை வாங்கி பண்டய நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தார்.

இவ்விடத்திற்கு வருகை புரிந்த பத்திரிக்கையாளர்களையும், பள்ளி மாணவர்களையும், ஆன்றோர்களையும், சான்றோர்களையும் சுற்றிபார்க்க அனுமதித்து திருப்தியுடன் அனுப்பி வைத்தார்.
காலம் முடிந்தவுடன் தலைமை உத்தரவுடன் பொருட்கள் அனைத்தும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. இதனால் அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2016 ம் வருடம் நிதி ஒதுக்கப்பட்டு அதே டீமுடன் மீண்டும் 80 செண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலைகள் ஆரம்பமாயின. நிறைய விஷயங்களும் வெளிவந்தன.

இந்த முறை பணியாளர்களுக்கு ஆண்களுக்கு 271 ரூபாயும் பெண்களுக்கு 235 ரூபாயும் வாராவாரம் கொடுக்கப்பட்டது. இந்த முறை எடுக்கப்பட்ட பொருட்கள் இங்கேயே அதே டெண்ட்டில் வைக்கப்பட்டன. அமர்நாத் சாரும் அதே அனுகுமுறையுடன் நற்பெயருடன் வலம் வந்தார். காலம் முடிந்தது.

இந்த இரண்டு வருட மொத்த அகழ்வாராய்ச்சியும் ஒரு நகரத்தில் மூன்று தெருக்களை மட்டும் தோண்டப்பட்டது போல்தான். ஆனால் இதில் கண்டவைகளெல்லாம் ஒரு மிகச்சிறந்த நாகரீகம் இருந்ததற்கான சான்று நன்றாக தெரிந்தது. (பொருட்கள் எல்லாம் படங்களில்) தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளம், இரும்பு செம்பு உலோகங்கள், பவளம் யானைதந்தத்தாலான பொருட்கள். சுட்ட செங்கல்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மண்பாண்டங்கள், தமிழ்பிராமி எழுத்துகள் என பக்கா திட்டமிட்ட நகர நாகரீகம் வாழ்ந்ததற்கான சான்றுகள் நிறைய தென்பட்டது. ஏதோ இரு பொருள் மட்டும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு காலம் 2500 லிருந்து 3000 வரை வருடம் முந்தையது என்கிறார்கள்.


காலம் முடிந்தவுடன் தோண்டப்பட்ட இடங்களை மூடும் வேளையில் பாஜக வைச்சேர்ந்த வானதிசீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் வருகின்றனர்.அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியை சார்ந்தவர்கள் கறுப்புக்கொடி காட்டினார்களாம். அதனால் அவர்களுடன் வந்தவர்களுடன் போலீசும் சேர்ந்து விரட்டி விரட்டி அடித்தனராம். அத்துடன் என்ட் கார்டு போடப்படுகிறது. மதுரை மன்னின் மைந்தன் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றப்படுகிறார். டெண்ட் மட்டும் சந்திரன் பாதுகாத்து வந்தார்.

பிறகு பலதரப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகள், போராட்டங்கள், கட்டுரைகள், கவிதைகள் அரசியல் போராட்டங்கள் பலனாக மீண்டும் 2017 ல் வேலை ஆரம்பம்.
இம்முறை தலைமை அதிகாரி திரு. ஸ்ரீராம். அவருக்கு கீழ் இரு அதிகாரிகள். அவர்களுக்கு கீழ் மூன்று பெண் சூபர்வைசர்கள். நிதி கடந்த இரு வருடங்களில் ஒதுக்கப்பட்டதை விட இரு மடங்கு. இடமோ வெறும் 40 செண்ட். பணியாளர் சம்பளம் 2016 ல் வழங்கப்பட்ட அதே சம்பளம். கூடுதல் சம்பளம் பேங்க்கிலிருந்து கணக்கிற்கு ஏறும் என்ற வாக்குறுதி வேறு. பணியாளர்கள் 25 லிருந்து 30 பேர்.

அதிகாரி ஸ்ரீராம் சந்திரனுக்கு எதற்கு சம்பளம் என தோண்டப்படும் இடத்திலிருந்து 1/2 கி.மீ. தூரத்திலுள்ள அரசு பொறம்போக்கு நிலத்திற்கு டெண்ட்டை மாற்றினார். பிறகு எடுத்த பொருள்களை புகைப்படம் எடுத்து ப்ளக்ஸ் போர்டுகளாக மாற்றி டெண்ட்டிற்கு வெளியே வரிசையாக வைத்தார். டெண்ட் நுழை வாயிலில் ஒரு போர்டில் அந்நியர்கள் யாரும் நுழையக்கூடாது என்ற வாசகம் தாங்கிய போர்டு. அதிகாரி யாரையும் சந்திப்பதில்லை. பிறகு பணியாளர் 60லிருந்து70 வரை தொட்டது. மீண்டும் ஷிப்ட் முறையில் 6லிருந்து 7 நபர் மட்டுமே. 3ஷிப்ட். அதுவும் வாரம் 3, 4, 5 நாட்கள் மட்டுமே. அதிலும் 1 ஷிப்ட் கேன்சல் அவ்வப்போது. ஏதும் கிடைக்கவில்லை என அகழ்வாராய்ச்சி முடிக்க திட்டமோ?..இதோ..30 ம் தேதி காலம் முடிவடைகிறது. இவ்வருடம் ஏதும் உருப்படியாக கிடைக்கவில்லை…

சில சந்தேகங்கள்.

1. வரலாறு மறைக்கப்படுகிறது என போராடுகிறார்களே!.. 110 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நகர நாகரீகம் இருப்பது கண்கூடு. அகழ்வாராய்ச்சியை ஏன் அவசர கதியாய் மூட வேண்டிய அவசியம் என்ன?

2. 110 ஏக்கரில் இருக்கும் இடத்தில் மக்கள் குடியிருப்பு விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனால் இட உரிமையாளர்களிடம் உரிய இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்துவதில் ஏன் தயக்கம்..?

3. 3 வருடங்களாக தோண்டப்படும் இடங்களில் தென்னை மரங்கள் பல இறந்து விட்டன. அதற்குறிய இழப்பீடு வாக்குறுதிப்படி ஏன் இதுவரை வழங்கவில்லை..?

4. 271 ரூபாய்க்காக 1/2 கி.மீ. தள்ளி டெண்ட் அமைத்தார்களே. அதனால் தோண்டி எடுக்கப்படும் பொருட்களை வாரத்திற்கு ஒரு முறைதானே டெண்டிற்கு கொண்டு சேர்க்கிறீர்கள். மழை வெயிலில்தானே அதுவரை கிடக்கிறது. அதைத்தாண்டி அக்காட்டிற்குள் இரவில் என்ன பாதுகாப்பு..?

5. உண்மையிலேயே பணம் இல்லையா? மனம் இல்லையா?

6. இந்த நடைமுறை செலவுகளே செய்யமுடியாத நிலையில் இந்தியா இருக்கிறதென்றால் கோடிக்கணக்கில் மாதம் செலவாகும் தொல்லியல்துறை எதற்கு? தொல்லியல் படிப்பு எதற்கு?

நீங்களும் பகிர்ந்து குரல் கொடுங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.