அவர் ஒரு யானை விரும்பி…இன்றுவரை மனிதர்கள் கொன்றுகொண்டே இருப்பதைமட்டும் நிறுத்தவே இல்லை..!

0 254

இன்றைய “உலக யானைகள் தினம்” பற்றி பலருக்குத் தெரிந்திருக்கிறது. பலரும் இந்த நாளை பல விதத்தில் நினைவூட்டி வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது குறித்து மிக மகிழ்ச்சி….

*******************************

எத்தனைமுறை பார்த்தாலும் கொஞ்சம்கூட சலிக்காத உருவம் யானைகள்தான்.இதை யாராவது மறுக்கமுடியுமா ?…

மனிதர்களிடம் என்றைக்குமே ஒரு பிரமிப்பை ஏற்படுத்திக் கெண்டே இருப்பவை யானைகளே. அதனால்தான் நீண்ட நெடியகாலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.நமது நாட்டில் அதற்கு ஏராளமான சான்றுகள் குவிந்து கிடக்கிறது. புராணங்கள்,இதிகாசங்கள், சங்கப்பாடல்கள், நாட்டுப்புறக்கதைகள், ஓவியங்கள், சிலைகள், கடவுளாகவும் அவர்களது வாகனங்களாகவும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

இருந்தும் அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் யானைகளை கொன்றுகொண்டே இருப்பதைமட்டும் நிறுத்தவே இல்லை என்பதுதான் புரியாத வேதனை. தரையில் வாழ்கின்ற விலங்குகளிலேயே மிகப்பெரிய உருவமும் மூளையும் உடையது யானைகள்தான். ஐந்துகிலோ அளவில் மூளையுடைய யானை மனிதனுக்கு அடுத்தநிலையில் அறிவுள்ளது என்கிறார்கள். மிக இணக்கமாக இருக்கவிரும்புகிறவை யானைகள். யானைகளின் நீண்ட மூக்கே தும்பிக்கை.அந்த தும்பிக்கையை கொண்டு சிறிய பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள்வரை தூக்கும் நுட்பமும் வலிமையுமுடையது…

தந்தம் என்பது யானைகளின் நீண்ட வலிமையான பற்களே. கூட்டமாக வாழும் இயல்புடைய யானைகளுக்கு எப்போதும் தலைவனே இல்லை தலைவி மட்டும்தான். பார்வைத்திறன் சற்றுக்குறைவாக இருந்தாலும் கேட்கும்திறனும், உணரும் திறனும் மிக மிக அதிகம். கேளா ஒலிகளின் அதிர்வுகள் மூலம் தொடர்புகொள்கின்றன. அதற்காக கால்பாதம், காதுகள், தும்பிக்கையை பயன்படுத்துகிறது…

வளமான காட்டிற்கு யானைகளே அடையாளம். யானைகளை நம்பிமட்டுமே ஏராளமான உயிரினங்கள் உள்ளன. சிறிய வண்டுகள் பூச்சிகள் முதல் பெரிய மான்கள் காட்டுமாடுகள் வரை யானைகளைச் சார்ந்துவாழ்கின்றன என்பதை அறியும்போது யானைகள் தானே காடுகளின் பேரரசர்கள் என்பதில் சந்தேகம் இல்லை…

இப்படிப்பட்ட யானைகளின்மீது கொஞ்சம் கவனமும் அக்கறையும் காட்டுவோம். சில காலமாக விலங்குகள் மனிதமோதல்கள் அதுவும் யானைகளோடு மோதல் அல்லது யானைகளை விரட்டியடிப்பது என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதற்கெல்லாம் என்ன காரணம்?…

மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும் நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்…

சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா ? அது போகின்ற வருகின்ற வழித்தடமெங்கும் சாலைகள், ரயில்பாதைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆசிரமங்கள் என உருவாக்கி அவற்றின் வாழ்க்கையை இன்னும் சிரமமாக்கிவிட்டோம்….

யானைகளுக்கு அதிகமான உணவும் நீரும் தேவை. சுமாராக ஒரு நாளைக்கு இருநூற்றியைம்பது கிலோ இலைதழைகளும், சுமாராக நூற்றியைம்பது லிட்டர் தண்ணீரும் வேண்டும். அதனால் ஒரே இடத்தில் இருக்காமல் தமது தேவைகளுக்காக நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரே இடத்தில் இருந்தால் போதிய நீரும் உணவும் கிடைக்காது என்பதை விட காடும் சுத்தமாக துடைத்தது போல அழிந்துவிடும். அதற்காகவே இயற்கை இவைகளுக்கு நகர்ந்துகொண்டே சமன்படுத்திய வாழ்க்கை வாழும்படியான இயல்பை உண்டாக்கியிருக்கிறது. ஒரு யானைக்கூட்டம் இடம் விட்டு இடம்மாற ஒரே பாதையில் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. அந்த வழக்கமான பாதைகளே அந்தக்கூட்டத்தின் வலசை செல்லும் யானை வழித்தடம் எனப்படுகிறது. அதைத்தான் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டாப்போட்டு அவற்றின் இருப்பிடத்தை நாம் உரிமை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்தப் பட்டா சமாச்சாரங்கள் தெரியாத யானைகள் அதே பாதையில் வரும்போது விரட்டப்படுகிறது அல்லது கொல்லப்படுகிறது என்பதைத்தான் அடிக்கடி செய்திகளில் பார்த்து வருகிறோம். யானைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 10% குறைந்திருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது.

இதில் தவறு யாரிடம் உள்ளது யானைகளிடமா? ஒரு வளமான நாட்டிற்கு முப்பத்தி மூன்றுசதவிகித காடுகள் வேண்டும் நமதுநாட்டின் காடுகள் இருபது சதவிகிதத்திற்கு கீழே சென்று நீண்டநாட்களாகிவிட்டது. ஒன்றை நினைவில்கொள்ளுங்கள் நாம் மரம் நடும் விழாவில் நட்டு உருவாக்கும் காடெல்லாம்(!) வனக்காடுகள் ஆகாது. காடென்பதில் பல அம்சங்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும். அப்படியான காடுகள் இல்லாவிட்டால் யானைகள் இருக்காது. அந்த யானைகள் இல்லாவிட்டால் காடுகளும் இருக்காது, பலவகை மரங்கள் மீண்டும் மீண்டும் உருவாகி காடுகள் நிலைத்து நிற்க யானைகளே அவற்றிற்கு உதவியாக இருக்கின்றன. காடுகளும் பிற உயிர்களும் இல்லாத பூமியில் மனிதர்கள் வாழமுடியாது. என்பதை இந்த உலக யானைகள் தின நாளில் நிலையாக நினைவில் கொள்வோம். யானைகளைக் காப்போம்…

என்றென்றும் யானை விரும்பி,
Ramamurthi Ram

You might also like

Leave A Reply

Your email address will not be published.