அரளி என்பது விசமா..? பிறகு ஏன் அரளியை நட்டா ஆயுசுக்கும் நிம்மதி என்றார்கள்..?

0 834

அரளியை நட்டா, ஆயுசுக்கும் நிம்மதி!
‘’போன பஞ்சத்துக்கு பாதிபேரு ஊரை காலிபண்ணிட்டு, பஞ்சம் பொழைக்க வெளியூருக்கு போக வேண்டிய நெலமை. அப்படிப்பட்ட சமயத்துலயும் எங்களுக்கு கஞ்சி ஊத்தி காப்பாத்தின கடவுள்… அரளிப்பூ! இப்போ அந்த அரளியை சாமிக்கு எடுக்கிற மாவிளக்குல வெச்சிக் கும்புடுறோம்’’ என்று நெகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியிலுள்ள அரளிப்பூ விவசாயிகள்.

மற்ற பூக்களை விட குறைவான பராமரிப்பு… வறட்சியிலும் குறையாத வளமை… நிச்சய வருவாய்… அதனாலேயே அரளிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம். கொஞ்சம் இடம் கிடைத்தாலும், அதில் அரளியை நட்டு தினசரி வருமானம் பார்த்துக் கொண்டிருப் பதால், அரளிதான் இந்தப் பகுதி விவசாயிகளின் அட்சயபாத்திரம்!

“இருக்குற நிலத்தைப் பொறுத்து, சீசனுக்கு ஏத்தாப்புல மல்லி, மருகு, சம்பங்கினு மத்த பூவை அப்பப்ப போடுவாங்க. ஆனா, அரளி மட்டுந்தான் எல்லா காட்டுலயும், எல்லா காலத்துலயும் தொடர்ந்து இருக்கும். பெரிய அளவுல பயிர் செய்யாதவங்க கூட, கொஞ்ச நிலத்துலயாவது அதைப் போட்டிருப்பாங்க.

கோடைக்கும், ஆடைக்கும் (அடைமழை) நல்லா தாக்குப் பிடிக்குற செடிகள்ல அரளிக்கு முக்கியமான இடமிருக்கு. மொத தடவை நடுறதோட சரி, அப்புறம் காலத்துக்கும் அதுல பூ எடுக்கலாம். ரெண்டு வருசத்துக்கொரு தடவை கவாத்து (கிளைகளைக் கழித்துவிடுவது) செய்றது முக்கியம். வசதி இருந்தா மூணு நாளைக்கொரு தண்ணி விடலாம். இல்லனா பத்து நாளைக்கொரு தடவை விட்டா போதும். மாசத்துக்கொரு களை, ஆறு மாசத்துக்கொரு தொழுவுரம் இதைத் தவிர பெரிசா வேற எந்தச் செலவுமே தேவையில்ல. நிலத்துல சத்து குறைபாடு இருந்தா, பனிக்காலத்துல அரும்பு கொட்டும், பூ அழுகிடும். ஆறு மாசத்துக்கொரு தடவை தொழு உரத்தைப் போட்டா இந்தப் பிரச்னை வராது.

வெள்ளை, சிகப்புனு ரெண்டு கலர்ல அரளி பூ இருக்கு. வெள்ளைக்கு கூடுதலான வெலை கெடைக்கும். அதனால வெள்ளையை ரெண்டு ஏக்கர்ல நட்டிருக்கேன். சிகப்பும் ஒரு ஏக்கர்ல நட்டிருக்கேன். நட்ட ஆறாவது மாசத்திலிருந்து வருசம் முழுக்க, தெனமும் பூ எடுக்கலாம். ஒரு ஏக்கர்ல தினமும் சுமாரா 40 முதல் 50 கிலோ வரைக்கும் பூ கெடைக்குது. பூ எடுக்க சம்பள ஆள் வெச்சுக்கறதில்ல. விசேஷ நாட்கள்ல கூடுதலா பூ எடுக்க வேண்டியிருந்தா மட்டும் ரெண்டு ஆட்களை வெச்சுக்குவேன்.

விசேஷ நாள்லதான் எல்லா பூக்களுக்கும் கூடுதலா விலை கிடைக்கும். அரளியும் விசேஷ நாள்ல அறுபது ரூபாய் வரைக்கும் போகும். இந்த வருஷம் ஆடி பதினெட்டு சமயத்துல ஒரு கிலோ 60 ரூபாய் வரைக்கும் போச்சி. மத்த நாள்ல பதினைஞ்சி, பத்துனு சந்தர்ப்பத்தைப் பொறுத்து விலை போகும். நான் எடுக்கிற பூ பெரும்பாலும் திண்டுக்கல் மார்க்கெட்டுக்குதான் போகுது. ஏவாரிங்க அதை வாங்கி, மெட்ராஸ்… சேலம்னு வெளியூர்களுக்கு அனுப்புறாங்க.

விலைதான் கூட, கொறையா கெடைக்குமே தவிர… விக்கிறதுல எந்தப் பிரச்னையும் கிடையாது. ஒரு ஏக்கருக்கு, மாசத்துல எட்டாயிரத்துல இருந்து, பத்தாயிரம் வரைக்கும் வருமானம் கிடைக்குது” என்று சொன்ன முருகன்,

‘‘பெரியவங்க, ‘அரளிய நட்டா, ஆயுசுக்கும் நிம்மதி’னு சும்மாவாச் சொல்லி வெச்சிருக்காங்க’’ என்றார் பெருமையாக.

அரளி சாகுபடி முறை பற்றி நம்மிடம் விவரித்தார், இதே ஊரில் அரளி விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சேவியர், ‘‘ஆவணி, புரட்டாசிதான் அரளி நடுறதுக்குச் சரியான பட்டம். தை மாசத்துலயும் சிலர் நடுவாங்க. அது அவ்வளவு தோதுப்படாது. இருக்குற பூவுலயே செலவு கம்மியானது அரளிதான். இது எல்லா மண்ணுக்கும் வரும். செம்மண் நிலமாயிருந்தா பூ கூடுதலா கிடைக்கும். நல்லா வளந்த அரளிச்செடியை கவாத்து பண்ணி, அதுல கழிக்கிற குச்சியதான் விதைக்குச்சியா நடுவாங்க. ஒரு ஏக்கருக்கு இவ்வளவு நடணும்னு எந்தக் கணக்கும் கிடையாது. தலைச்சுமை அளவுக்கு கட்டு போட்டுதான் குச்சிகளை விப்பாங்க. ஒரு ஏக்கருக்கு சுமாரா 20 கட்டுவரை தேவைப்படும். ஒரு கட்டு 200 ரூபாய் விலையில கிடைக்கும்.

வெள்ளை அரளிக்கும், சிகப்பு அரளிக்கும் நடவுமுறையில கொஞ்சம் வித்தியாசம் உண்டு. மத்தபடி பராமரிப்பு எல்லாம் ஒண்ணுதான். வெள்ளை அரளிக்கு… நல்லா உழுத நிலத்துல சுமாரா பத்தடிக்குள்ள இடைவெளி இருக்குற மாதிரி பாத்தியெடுத்து, ரெண்டடி இடவெளி இருக்கற மாதிரி குழி எடுத்து குச்சிகளை நடணும். ஒரு மம்பட்டி (மண்வெட்டி) ஆழத்துக்கு குழி இருந்தா போதும். ரெண்டு தனித்தனி குச்சிங்களை வில் மாதிரி வளைச்சு நடணும். ஆனா, குச்சி ஒடிஞ்சிடக்கூடாது. வெளியில தெரியாத அளவுக்கு மண்ணைப் போட்டு குழியை மூடிடணும். 22-ம் நாள் மண்ணை விலக்கிட்டுப் பாத்தா துளிர் விட்டிருக்கும். துளிர்விடற வரைக்கும் நிலத்துல ஈரம் இருந்துகிட்டே இருக்கணும். அதுக்குப் பின்னாடி பத்து நாளைக்கொரு தண்ணி கூட பாச்சலாம். நட்ட அஞ்சாவது மாசத்திலிருந்து தெனமும் பூ எடுக்கலாம்.

சிகப்பு அரளி நடுறதுக்கும் வெள்ளை அரளி மாதிரியே இடைவெளிவிட்டுப் பாத்தி, குழியெல்லாம் எடுக்கணும். ஒவ்வொரு குச்சியையும் வில் மாதிரி வளைச்சி குச்சியோட ரெண்டுமுனையும் மண்ணுல பதியிற மாதிரி நடணும். மண்ணுக்குள்ள மூடவேண்டியதில்ல. எட்டாவது நாள்ல செடி துளிர்விட்டு நிக்கும். நட்ட ஆறாவது மாசத்திலருந்து பூ எடுக்கலாம்.

இதுக்கு அதிகமா சீக்கு எதுவும் வர்றதில்லை. வெயில் காலத்துல கொழுந்துல அசுவினிபூச்சி உட்காரும். இதுக்கு ரோகர் பூச்சி மருந்தை அடிச்சாப் போதும். மத்தபடி எப்பவாவது சீக்குவந்தா அதுக்கேத்த மாதிரி மருந்தடிக்கணும். அப்பப்ப தொழுவுரம் போட்டுக்கிட்டே இருக்கணும்.

அடுத்த ரெண்டு நாள்ல ஏதாவது விசேஷம் வர்ற மாதிரியிருந்தா, ரெண்டு, மூணு நாளைக்கி பூவை செடியிலேயே விட்டுவெச்சிப் பறிக்கலாம். சிகப்பு பூவை விட வெள்ளை பூ விலை கூடுதலா போகும். கிலோவுக்கு அஞ்சு ரூபா வரைக்கும் கூடுதலா கிடைக்கும். பூக்களை விட மொட்டுகளுக்குதான் அதிக விலை. இதுல முக்கியமான விஷயம் வறட்சியான காலத்துலயும் அரளி நல்ல மகசூலை கொடுக்கும். அதனாலதான் எங்க ஏரியா பூராவும் அரளி பூ மலர்ந்து எங்க வாழ்க்கையையும் மலர வெச்சிகிட்டிருக்கு” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.

வருஷம் முழுக்க வருமானம் தரக்கூடிய ஒரு சில பயிர்களில் அரளிக்கும் முக்கியமான இடமிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடிய தோடு, நல்ல சந்தை வாய்ப்பும் இந்த அரளிக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. எனவே, வேறு ஏதாவது வகையில் கையைச் சுட்டுக்கொண்டிருப் போர், அரளியை முயற்சித்துப் பார்த்தால் கையைக் கடிக்காத லாபம் நிச்சயம் என்பதில் சந்தேக மேயில்லை!

இதில் இல்லை விஷம்!

கதம்பம் கட்டுவதற்கும், பூஜைக்கும் பயன்படுத் தப்படும் அரளிப்பூ… திண்டுக்கல், மதுரை மாவட்டத்திலிருந்துதான் பெருமளவுக்கு உற்பத்தியாகி தமிழகம் முழுவதும் பயணிக்கிறது. ‘அரளி, விஷத்தன்மையுடையது’ என்றொரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வேறு வகை அரளி. அது காட்டுப்பகுதிகளில் இயற்கையாக விளைந்து கிடக்கும். மலர்த்தேவைக்காக பயிரிடப்படும் அரளிக்கும் காட்டு அரளிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நன்றி :பசுமை விகடன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.