அது எப்படி பெருவணிக நிறுவனங்களின், மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24 மணி நேரமும் நம்மால் பேச முடிகிறது..?

0 255

அது எப்படி பெருவணிக நிறுவனங்களின், மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24 மணி நேரமும் நம்மால் பேச முடிகிறது? -அதிஷா

சின்னத்தம்பி என்று பேர்வைக்கப்பட்ட யானை இன்னும் உயிரோடிருப்பதால் ஒருவாரமாக லைவிலும் நம் டைம்லைன்களிலும் விடாப்பிடியாக பொறுமையாக யாருக்கும் தொந்தரவின்றி நடந்துகொண்டே இருக்கிறான். இல்லையென்றால் சின்னத்தம்பிக்கான கவன ஆயுள் ஒன்றரை நாள்தான்.

பொதுவாக இப்படியெல்லாம் ஆவதில்லை. தன் வழித்தடங்களை இழந்துவிட்ட சின்னத்தம்பிகள் தண்டவாளங்களில் சிக்கியோ ரயில்மோதியோ, மின்வேலிகளைத் தீண்டியோ மரணிப்பதுதான் வழக்கம். கோவைப்பகுதியில் அப்படி தன் குட்டிகளோடு மரணித்த எத்தனையோ சின்னத்தம்பிகளின் கதைகள் உண்டு.

பேர்தான் பேருயிர்… ஆனால் மிகமிக அவமானகரமான மரணங்கள்தான் நம்முடைய யானைகளுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சின்னதம்பிக்கு அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சிலநாள்களாக மனம் பதைபதைக்கிறது.

பிரதமர் தொடங்கி முதலமைச்சர் வரை ஆதரவு திரட்டி காடுகளை வளைத்துப்போட்டு ஆன்மிகம் வளர்க்கிற ஜக்கி, காருண்யா மாதிரியான பெரியதம்பிகளின் மெகா ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்காமல் விட்டால் இன்னும் பல சின்னத்தம்பிகளும் இப்படி திக்குத்தெரியாது நாட்டில் அலைய நேரிடும்.

போலவே, எல்லா சின்னத்தம்பிகளுக்கும் இப்படி பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் அமையாது.

வன ஆக்கிரமிப்புகள் பற்றியும், யானை வழித்தடங்கள் குறித்தும், காட்டுயிர் குறித்த சிந்தனைகள் குறித்தெல்லாம் நிறைய நிறைய உரையாடுவதற்கான வாய்ப்பை சின்னத்தம்பி உருவாக்கியிருக்கிறான். ஆனால் சின்னத்தம்பியும் இன்னுமொரு டிக்டொக் வைரல் வீடியோவாகவே நம்மிடம் கடந்துசெல்கிறான். காட்டுயிர்களுக்கான வாழ்விட உரிமை குறித்த விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.

அது எப்படி பெருவணிக நிறுவனங்களின், மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24மணிநேரமும் நம்மால் பேச முடிகிறது?

https://youtu.be/HZ5lVqdt3O4

You might also like

Leave A Reply

Your email address will not be published.