விரைவில் அதன் இரு பிள்ளைகளின் சாவுச் செய்திக்கு காத்திருப்போம்.

0 398

மீண்டும் மீண்டும் ஊடகத்துறை நண்பர்கள் வனஉயிர்கள் பற்றிய சரியான தகவல்களை தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை. மகாராஷ்ட்ர அரசே அவ்னி புலி ஒரு ஆட்கொல்லியா என்பதை சான்றுகளுடன் இன்னும் கோர்ட்டில் நிரூபிக்கவில்லை.

மேலும் மகாராஷ்ட்ர அரசு 13 பேர்களைத்தான் புலி கொன்று உள்ளது என்று அறிக்கை தரும் போது நமது மாலைமலர் நண்பர்களுக்கு மட்டும் எப்படி 14 பேர்கள் என்று செய்தி வந்தது என்று தெரியவில்லை.

ஒருவேளை இவர்கள் அலுவலகத்தில் இருந்து யாரும் புலிக்கு இரையானார்களா என்று தெரியவில்லை.

காட்டில் இருந்து வெளியில் வந்து கிராமத்தில் இருந்து ஆட்களை பிடித்துச் சென்று இருந்தால் ஆட்கொல்லி எனலாம். இறந்த மனிதர்கள் யாரும் காட்டில் எல்லை புறத்தில் சாகவில்லை.

தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதியில் தான் இவர்களின் உடல் கிடைத்துள்ளது. இறந்த மனித உடல்களில் இருந்து பெறப்பட்ட DNA தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் படுகிறது. தன் குட்டிகளுடன் வாழும் புலி தனது எல்லை பகுதியில் வரும் எதிர்ப்புக்களை எதிர்கொள்ள தாக்கும்.

வனப்பகுதியில் மனிதர்களின் இடையூறுகள் அதிகமாக இருந்ததுவே புலிகள் மூர்க்கம் அடைய காரணமாக இருந்து இருக்கலாம்.

இப்போது இந்த புலியை சுட்டு கொன்றுவிட்டார்கள் சரி, இதன் இரு பத்து மாத குட்டிகளுக்குமே இன்னும் முழுமையான வேட்டைப் பயிற்சியும் இருக்காது.

தாய் இல்லாமல் அவைகளால் இனி வாழ இயலாது. அந்நிலையில் அவைகளும் எளிய இரைகளை கருதி கிராமங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். மீண்டும் மனித விலங்கு மோதல் நேரும்.

இல்லையெனில் வேறு ஒரு பெரிய ஆண் புலியால் அதன் வாழ்விட எல்லைக்கான மோதலில் கொல்லப்படும். எனவே அரசின் தவறான முடிவால் மூன்று புலிகள் இறக்கப் போவது உறுதி. இதனை கொலை செய்ய கொலையாளியாக நவாப் ஷாபாத் அலிகானை ஒப்பந்தம் செய்தது எந்த வகையில் நியாயம்.

இது புலி வேட்டைக்கெனவே வேட்டையாடியை நியமித்தது போல உள்ளது. இவனுடன் நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள், மோப்பநாய்கள் என பெரிய படையே சென்றுள்ளது. சத்தியமாக அத்தனைக்கும் செலவு செய்ய நமது வனத்துறையால் முடியாது. அப்படியென்றால் அத்தனை பணம் கொடுத்த பெரிய கை எது. அது ஏன் அவ்னியை காட்டை விட்டு ஒழிக்க நினைக்கிறது என்பதற்கான விடை வெளிச்சத்திற்கு வருகிறது.

என்ன என்றால் காட்டின் நிலத்தை பெற்ற பெரிய சிமெண்ட் ஆலையின் குடியிருப்பு பகுதிகளை கட்ட அதிகமான நிலங்களை வனத்தில் இருந்து கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியே ஒரு அப்பாவி தாய்ப்புலியின் மீது சுடப்பட்ட தோட்டாக்கள்

காட்டின் எல்லை தாண்டி மனித வேட்டையாடிய பல புலிகளை காப்பகங்களில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அதை தீர்வாக நான் கருதவில்லை.

இதில் மூன்று மாத தேடலில் கிடைக்காத புலியை, வனவுயிர் ஆர்வலர்களின் கோரிக்கைப் படி கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து விடுமோ என்ற அவசரத்தில் வனத்துறை புலி சிக்கியதாக தகவல் கிடைத்தவுடன் கொன்றதாகவே தெரிகிறது. இந்த புலியை கொல்லாவிட்டால் மக்களின் எதிர்ப்பு அதிகமாகி பெரிய பிரச்சனை வரலாம் என்றும் நண்பர்கள் கருத்துக் சொல்லலாம்.

ஆனால், இன்று புலிகளை ஒழித்து விட்டு அவைகள் வாழ்ந்த வனப்பகுதியை ஹெக்டேர் கணக்கில் பெரும் முதலாளிகளுக்கு அரசு தாரை வார்த்து இருப்பதை என்ன என்று சொல்வது. மொத்தத்தில் அவ்னி புலியின் மர்மம் அதற்கு மட்டுமே தெரிந்த உண்மையாக முடிந்துவிட்டது. விரைவில் அதன் இரு பிள்ளைகளின் சாவுச் செய்திக்கு காத்திருப்போம்.

மறக்காம இத கிளிக் பண்ணி நம்ம தமிழ் திமிரு யூடியூப் சேனல சப்கிரைப் பண்ணிடுங்க
பதிவு;ரவிந்தரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.