விஐபி வரிசையில் அத்திவரதரை தரிசிக்க வந்த இந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் யார்..?

0 391

பத்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடிந்த மறுநாள் நாங்கள் அனைவரும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்லலாம் என்று முடிவு செய்ந்திருந்தோம்.

என் அம்மாவிடம்,

“அம்மா என் friends அவங்க வீட்டுக்கு கூப்ட்ருங்காங்க. நானும் போறேன் மா!.”

“எங்க போறீங்க?”

“வரிச்சியூருக்கு மா!.”

“அங்கலாம் போக கூடாது. சரியில்லாத ஊரு!”.

“அம்மா please மா. நான் கவனமா போயிட்டு கவனமா வந்துருவேன்.”

“உன் அப்பாக்கு தெரிஞ்சா என்ன தான் திட்டுவாரு. சரி போ. ஆனா உன் friends வீடு தவற வேற எங்கயும் போக கூடாது. அமைதியா இருக்கணும்.”

“சரி மா. போ மாட்டேன்.”

ஒருவழியாக அனுமதி வாங்கி 10 பேருக்கும் மேல் ஜாலியாக கிளம்பி விட்டோம். அங்கு எனக்கு 3 தோழிகளின் வீடு உள்ளது. ஒரு தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு மற்றோரு தோழியின் வீட்டுக்கு செல்லும் போது வழியில், ஒருத்தி ஒரு வீட்டை காட்டி,

“இதான் செல்வம் இருக்கார்-ல அவரோட வீடு. ஒரு அக்கா நம்ம ஸ்கூல்ல கபடி விளையாடுவாங்க-ல அவங்க வீடு”.

“ஓ! அந்த அக்கா வீடா? அந்த அக்கா நல்லா பேசுவாங்க. வாங்க பாத்துட்டு போவோம்” என்று கூறினாள் ஒருத்தி.

” ஏய்! உனக்கு அறிவு இருக்கா? அவங்க அப்பா இருந்தாலும் இருப்பாரு. அவர் யார்னு தெரியுமா? வரிச்சியூர் செல்வம். பேசாம வாங்க ” என்றாள் அந்த ஊர்க்காரி ஒருத்தி.

“அந்த அக்காட்ட பேசுனா கூட கத்தியெடுத்து குத்துவாரா என்ன? “

“உனக்கு தெரியாது. பேசாம வா! “

சரி என்று எல்லா இடங்களுக்கும் சென்று விட்டு வீட்டிற்கு சென்று என் தாத்தாவிடம் யார் தாத்தா வரிச்சியூர் செல்வம்? என்று கேட்டேன்.

” ஒரு ரௌடி. நிறைய கொலை பண்ணிருக்காரு. அவர் இருக்கனாலேயோ என்னமோ அந்த ஊர ரவுடி ஊர்னு தான் சொல்லுவாங்க. அங்க இருக்கவிங்களும் அப்டி தான். அதுக்கு தான் உன் அம்மா உன்ன அங்கலாம் போ வேணான்னு சொன்னாங்க” என்று கூறினார்.

நான் கேள்விப்பட்ட நிஜவாழ்வு ரௌடி. ஒருநாள் கூட நேரில் பார்த்தது இல்லை. செய்தியில் தான் பார்த்திருக்கிறேன்

வரிச்சியூர் செல்வம் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்று வந்தவர். மூன்று முறை என்கவுன்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார்.

தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை திருந்தி வாழ்கிறேன் என்று வரிச்சியூர் செல்வம் சொல்லி வந்தாலும், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகிறார்கள்.

இடையில் சர்வதேச மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக இருந்தவர், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு நடித்தும் வந்தார்.

தான் கொடுத்த கடன் ரூ.3 கோடியை வசூலித்து தரும்படிபடி வரிச்சியூர் செல்வத்தை சென்னையைச் சேர்ந்த மெர்லின் தாமஸ் என்பவர் அணுகியுள்ளார். அதற்காக ரூ.5 லட்சமும், ஒரு காரையும் வரிச்சியூர் செல்வம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பணத்தை வசூலித்து தரவில்லை. அதனால் கொடுத்த பணத்தையும், காரையும் திருப்பிக் கேட்டதால் வரிச்சியூர் செல்வம் மிரட்டியதாக மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் மெர்லின் தாமஸ் புகார் கொடுத்தால் சிறைக்கு சென்றார்.

மனைவி முத்துலட்சுமியை கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் அவர் மீது உள்ளது.

அவர் மீது நாட்டு வெடிகுண்டு விவகாரமாகவும் ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் அத்திவரதர் கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இந்து அறநிலைய துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ, அதே இடத்தில் வரிச்சியூர் செல்வம் அமர்ந்து சாமி தரிசனம் செய்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் ஒருவீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அத்திவரதர் கோயிலுக்கு சென்றது முதல் தன் அன்றாட வாழ்க்கையை பற்றி சொல்லி உள்ளார்.

அத்திவரதரை கும்பிட வாய்ப்பு இனி கிடைக்காது. அதுக்காக போனேன். ஆனால் இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியாது.

நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய். லேன்ட் ஓனர். என்கிட்ட 7 கார் இருக்கு. நான் விவிஐபி இல்லையா? நான் சினிமாவில நடிக்கிறேன். அதனால நான் எல்லார்கிட்டயும் நான் மாறுபட்டு தெரியணும்னு இப்படி ஆடை அலங்காரமா இருக்கேன்.

நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். என்னை பத்தி தப்பு தப்பா எழுதறாங்க. அதனால பத்திரிகை ரிப்போர்ட்டர் ஆகணும்னு எனக்கு ஆசை. நான் செஞ்சது வெறும் 3,4 தப்புண்ணாலும் போலீஸ் போட்டது நிறைய வழக்கு.

வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே.. 9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு.. அவர்தான் என் குரு. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு.

வாழ்க்கையில ஏழைய பொறக்கிறது ஒன்னும் நம்ம தப்பு கிடையாது. ஆனா சாகும்போது ஏழையா சாககூடாது. அவர் தப்பு பண்றாரா, இல்லையான்றது இல்லை, அவர் எத்தனையோ கோடிக்கணக்குல பேங்குல கட்டி இருக்காரு. ஆனா என்னுடைய ரோல் மாடல் அவர் தான்.

என் வயசுல என் அப்பா, என் ஐயா இப்படி 4 பேருமே 50 வயசில உயிரோடு இல்லை. 2 மகள்களுக்கு கல்யாணம் பண்ணேன். ஆனால் ஊருல யாருக்குமே சாப்பாடு போடல. அதனால என் 50-வது பிறந்த நாள் அன்னைக்கு எங்க ஊர்ல 100 கிடா வெட்டினேன், 4 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை தந்தேன். 4 ஆயிரம் ஆண்களுக்கு வேட்டி குடுத்தேன். என் பங்ஷனுக்கு மட்டும் அன்னைக்கு 30 ஆயிரம் பேர் வந்திருந்தாங்க, என்று அந்த வீடியோவில் கூறியுள்ளர்

Qura share

You might also like

Leave A Reply

Your email address will not be published.