யார் இந்த முகிலன்..? 365 நாள் சகாப்தம்..! ஊழல் செய்தானா..? கொள்ளையடித்தானா..?

0 390

மதுரை சிறையில் முகிலன் – இன்றோடு ஓராண்டாகிறது..
தமிழக அரசே, முகிலன் மீதானா பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு..!!
முகிலனை உடனே விடுதலை செய் !! – சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவர்களில் ஒருவரும் சூழலியல் செயற்பாட்டாளருமான தோழர் முகிலன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு இன்றோடு ஓராண்டாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சிவ இளங்கோ,செந்தில் ஆறுமுகம்,ஜெய்கணேஷ் ஆகியோர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மதுரை மத்திய சிறையில் முகிலனைச் சந்தித்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நீண்ட அந்த சந்திப்பில் நலம் விசாரிக்கச் சென்ற இயக்க நிர்வாகிகளுக்கு அவர் பல விஷயங்களை பகிர்ந்து உத்வேகத்தை வழங்கினார். ஒரு வருடமாக சிறையிலிருக்கும் ஒரு நபருக்கு மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் சோர்வேதுமின்றி அரசியல் மேடைகளில் பேசும் ஓரு இளம் பேச்சாளரின் துடிப்புடன் பேசியது வியப்பை ஏற்படுத்தியது. இனி அவருடன் நடந்த உரையாடல் பற்றி:

கேள்வி: சிறையில் சுகாதார வசதிகள் எப்படி இருக்கிறது ?

பதில்: இந்த சிறையில் அடைக்கப்பட்டபோது சுகாதார சீர்கேடுகள் மிகவும் மோசமாகவே இருந்தன. தாங்க முடியாதகொசுக்கடி நிலவியது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது கொசுக்கடியால் ஏற்பட்ட இரத்த கரை கொண்ட மேல் சட்டையை நீதிபதியிடம் காண்பித்து புகாரளித்தேன். புகாரின்மேல் நடவடிக்கை எடுக்க இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிறைக்குள் வந்து பார்வையிட்டனர். சுகாதார சீர்கேடுகளை ஆய்வு செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுரை சிறைக்குள் வந்தது தமிழக சிறைத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆய்வுக்குப்பின் நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. ஆயுள் தண்டனை சிறைவாசிகள் வசிக்கும் பகுதிகளில், பயன்படுத்த முற்றிலும் தகுதியில்லாத நிலையில் இருந்த கழிப்பறைகள் தற்போது வெகுவாக சீரமைக்கப்பட்டுள்ளதாக, என்னிடம் நூலகத்தில் சந்தித்த சிறைவாசி ஒருவர் என்னைக் கண்டதும் நீங்கள்தான் முகிலனா என்று கேட்டு ஆம் என்றதும் உடனே என் காலில் விழுந்து நன்றி கூறினார். சீர்கேட்டின் அளவை இதிலிருந்து தெளிவாக புரிந்து கொண்டேன்,நீங்களும் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: சிறையில் தரப்படும் உணவு குறித்து ?

பதில்: அனைத்து சிறைவாசிகளுக்கும் அளிக்கப்படும் உணவையே நானும் எடுத்துக்கொள்கிறேன்.
பல தடவை, பல மாதங்கள் சிறையில் இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால்,
சிறப்பு உணவு ஏதும் எடுத்துக்கொள்வதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறேன். உணவு மட்டுமல்ல, வேறு எந்த சிறப்புச் சலுகை வழங்கப்பட்டாலும் மறுத்துவருகிறேன். அதே சமயம், கைதியாக இருக்கும் எனக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது உண்ணாவிரதத்தின் மூலமாகவோ, வழக்குதொடுத்தோ எதிர்க்குரல் எழுப்புகிறேன்

கேள்வி: உங்கள் மீது தொடர்ந்து வழக்கு தொடுத்து சிறையில் வைத்துள்ளதற்கான காரணம்?

பதில்: மத்திய பாஜக அரசு. என்னை விடுவித்தால் எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு போராடுவேன் என்பதால் தோன்றும்போதெல்லாம் வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் நிறைய பொய் வழக்குகளும் உண்டு. அடிப்படை தகவல்களைக் கூட சரிபார்க்காமல் யாரையோ திருப்திபடுத்த என் மீது புதுசு,புதுசாக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியில் உடைத்து விரைவில் வெளிவருவேன். பணிகளைத் தொடர்வேன்.!!

தன்மீதுள்ள ஒவ்வொரு வழக்கின் தரவுகளையும் தேதி மாறாமல் முகிலன் குறிப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது.

”சுதந்திரமாயிருந்தும் பயனுள்ள செயல்பாடுகள் ஏதுமில்லாமல் இருப்பதும் சிறைக்குள் இருப்பதற்கு சமமே” என்ற ஓர் வாசகமுண்டு. ஆனால், சிறைக்குள் இருந்தபோதும் அங்குள்ள சீர்கேடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, போராட்ட குணத்தை சிறைவாசம் மழுங்கிடச்செய்யாது என்பதை முகிலன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசு தனக்கு மேலிருந்து உத்தரவிடுபவர்களை திருப்திப்படுத்தும் செயலை நிறுத்திவிட்டு சிறை சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் நலம். ஏனென்றால், தற்போதுள்ள அமைச்சர்களின் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி இலஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரித்துறை மற்றும் CBI ஆகியோர் விசாரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் தாங்களும் சிறை செல்லவுள்ள வாய்ப்பை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ளோம்.

தோழர் முகிலன் அவர்கள் விரைவில் விடுதலையாகி மக்கள் பணியைத் தொடர சட்ட பஞ்சாயத்து இயக்கம் வாழ்த்துகிறது. தமிழக சமூகப் போராளிகளுக்கு ஒரு வாழும் உதாரணமாய் இருக்கும் முகிலனின் மீதுள்ள பொய்வழக்குகளை வாபஸ் பெற்று, உடனடியாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.