பொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றில் இருந்து பெண் பிள்ளைகள் கற்க வேண்டியவை என்ன?

0 341

கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக

காமத்தில் அலையாதீர்கள்.

காதல் என்கிற வலையை வீசிக் காமத்தைப் பிடிக்கப் பார்ப்பது மூன்றாந்தர ஆண்களின் குணம். அவர்கள் காமம் பிடித்து அலைவார்கள்; அலையட்டும். அவர்களைப் போலப் பெண்களும் அலைய வேண்டாம். ‘பிக் பாக்கெட்’ திருடர்களை ஒழிக்க முடியாது; ஆனால் உங்கள் கைப்பைப் பணத்தைக் கவனமாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. இறைவனும், காலமும், சட்டங்களும் அந்த மனித மிருகங்களைத் தண்டிக்கும்.

உலகத்தில் மோசமான விஷயங்களுக்குத்தான் கூடுதல் கவர்ச்சி இருக்கும். மோசமான ஆண்களுக்குப் பெண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கூடுதல் இருக்கக் கூடும். இளம் பெண்களே, ஜாக்கிரதை; ஜாக்கிரதை.

(காற்றில்) முள் ஆடினாலும், இலை ஆடினாலும் சேதம் இலைக்குத்தான். இது பழமொழி. எத்தனை ஆண்-பெண் சமத்துவம் பேசினாலும், காமத்தைக் காதலாக நினைத்து மயங்கினால், சேதம் பெண்ணுக்குத்தான் அதிகம். “அவன் ஆம்பிளப் புள்ள; அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்; பொட்டப் புள்ள உனக்குப் புத்தி வேணாம்?” என்று பெண்கள் உட்பட உன்னைத்தான் சாடுவார்கள்.

இதில் உண்மை இல்லாமலில்லை. கடவுள் உடல் ரீதியிலும், மனோ ரீதியிலும் ஆண்-பெண்ணைச் சமமாகப் படைக்கவில்லை. பெண் உடலளவிலும், மனதளவிலும் அதிகம் உணர்ச்சி மயமானவள்; அதனாலேயே அதிகம் துன்பம் அனுபவிப்பவளும் கூட. பொறுப்பின்றிப் பெண்ணோடு சேரும் ஆண் பொறுப்பு எதையும் சுமக்க வேண்டாம். ஆனால், பொறுப்பின்றியும் சுய கட்டுப்பாடு இன்றியும் ஆணுடன் சேரும் பெண், வயிற்றில் சுமந்தாக வேண்டும்; அல்லது அதனைக் கலைத்துவிட்டு மனதளவிலும் கலைந்து போகவேண்டும்.

‘டீன் ஏஜ்’ எனப்படும் இரண்டும் கெட்டான் வயதில், உடம்பில் ஹார்மோன்கள் கன்னாபின்னா என்று சுரக்கும் வயதில், யதார்த்தம் புரிந்த பெற்றோற்கள் பெண்பிள்ளைகளிடம் கூடுதல் கண்டிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த வயதில் பெற்றோர் வில்லனாகவும், (பொறுக்கியாகவும் இருக்கக் கூடிய) காதலன் ஹீரோவாகவும் தெரிவான். உணர்ச்சிக்கு மயங்கிவிட்டால், காலம் கெட்டபிறகுதான் உண்மை விளங்கும்.

சமத்துவம் பேசி மயங்கிச் சாக்கடையில் வீழாதீர்கள். பசுவும் காளையும் சமத்துவமாகப் படைக்கப் படவில்லை. காளைக்கு சமமாக எல்லாவற்றிலும் தன்னை ஏற்கவேண்டும் என்று பசு நினைத்தால், கடைசியில் அது பாலைக் கொடுப்பதையும் விட முடியாது; ஏரில் கட்டி உழுவதிலும் சிக்கிக்கொண்டு அடி வாங்கியாக வேண்டும்.

பெண் அவளுக்கு இறைவன் கொடுத்துள்ள தனிச் சிறப்புகளையும் தகுதிகளையும் பேணித் தன் மதிப்பு, மரியாதை, கௌரவம், கற்பு இவற்றைப் பேணும்போது அவள் சமுதாயத்தில் தெய்வமாய் வணங்கப் படுகிறாள்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

(வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:54)

சமத்துவம் என்கிற மாயையில் வீழ்ந்து ஆண் செய்யக்கூடிய அசட்டுத்தனங்களையெல்லாம் நானும் செய்வேன் என்று தொடங்கினால், மனதாலும், உடலாலும் அதிகம் துன்புறப்போவது பெண்கள் தான்.

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:56)

பொருள்: தன் கற்பைக் காத்துக்கொண்டு, தன் கணவனைப் பேணி, தன் பெருமையையும் புகழையும் காத்துக்கொண்டு சோர்வின்றி இருப்பவள் பெண்.

இளம் பெண்களே, இந்தக் காலத்தில், “தகை சார்ந்த சொற்காத்து” என்பதற்கு, பேஸ்புக், கைப்பேசி, வாட்ஸப் இவற்றில் நீங்கள் என்னமாதிரி சொற்களைப் பேசுகிறீர்கள்/ எழுதுகிறீர்கள்/ பதில் தருகிறீர்கள்/ உரையாடுகிறீர்கள் எனபதையும் உள்ளடக்கிக் கொள்ளுங்கள்.

பதில்:C. V ரஞ்சன்

பெண்பிள்ளைகள் நலன் கருதி பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.